அறம் சாகாது போராடுவோம்...!


நாம் வாழும் மண்ணின்

விடுதலைநாள் இன்று!

ஆக்கிரமிப்பு கரங்கள்

எங்கள் குரல்வளையை

நெரித்தபோது

உயிரை கையில் பிடித்து

கடல் கடந்து ஓடிவந்தபோது

அரசியல் அடைக்கலம் தந்து

உயிரை பாதுகாத்த 

அந்நிய நாடொன்றின் அகவைநாள்!


இதே

நாட்டின் நடுநிலையில்

தாய் நாட்டில் சமாதானக்

கதவுகள் திறக்கப்பட்டபோது

உலகத்தமிழர் பூரித்தனர்!


விடுதலைப் பிரசவத்தின்

வலியை உணர்ந்த நாடு

இன்னொரு இனத்தின் வலியை

தாகத்தை தவிப்பை

சரியாக புரிந்த நாடாக

நடந்து கொள்ளுமென

கடல் கடந்து வந்த நாமும்

உடல் வலி சுமந்த தேசமும்

திடம் கொண்டு நின்றோம்!


மாறாக

என்ன நடந்தது

நடுநிலை குலைந்து

ஓர வஞ்சக நிலைப்பாட்டில்

அரச பயங்கரவாதத்தின்

அடிவருடிய சகதியரசியலில்

சன்னதமாடிய சமாதானப் புறா

உன்னத இலட்சியப்பாதையில்

முள்ளாய் கிடந்தது!


கொத்துக்கொத்தாக

எமது இனம் அழிக்கப்படுகின்ற

அந்த கொடிய நாட்களில்

கந்தக நெடிலின் கோரத்தையும்

வெந்து போகும் தாயகத்தையும்

நிறுத்தி  

சந்ததி வாழ சமாதானத்தை தாவென

சந்தி சந்தியாக வந்து

உங்கள் முற்றங்களில்

குளறி அழுதபோதும்

உதறி எறிந்தீர்கள்!


ஏன்

உங்கள் ஊடகங்களில் கூட

எங்கள் மக்கள் அழிக்கப்படுவதை

தணிக்கை செய்தீர்கள்!

வான் முட்டும்

மக்களின் கோசங்களை

கோன் கூட கேட்காத 

தடைகளை போட்டீர்கள்!


விடுதலைப்புலிகள்

ஆயுதங்களை போட்டு

அகிம்சை வழிக்கு வரவேண்டுமென்றீர்கள்!

இன்று

ஈரேழு ஆண்டுகளாய்

அறத்தின் வழி போராடுகின்றோம்

உங்கள் முற்றத்தில் நின்றும்

நிறுத்தாமல் கதறுகின்றோம்!


உங்கள்

காதுகளுக்கு இன்னும் கேட்கவே இல்லை!

ஊமைகளாய் ஊனப்பார்வையோடு

உறைபனியாய் கிடக்கிறது

மனிதம்!

ஆனாலும்

கரைவீர்கள் என்ற

நம்பிக்கையோடு

காத்திருக்கின்றோம்!

போராடுகின்றோம்!


மறக்கவும் மாட்டோம்!

மன்னிக்கவும் மாட்டோம்!

'தமிழின அழிப்பு நாள்'

✍️தூயவன்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.