எமது மக்கள் போற்றப்படவேண்டியவர்கள்...!

 


நேற்றுப் போலிருக்கிறது, அதற்குள் 14 ஆண்டுகள் கடந்துவிட்டன. அதாவது இலங்கையானது சுதந்திரமடைந்த காலம்தொடக்கம் முன்னெடுத்துவருகின்ற தமிழர்களுக்கு எதிரான கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் அத்தியாயங்களில் ஒன்று முடிவுற்று பதினான்கு ஆண்டுகள் கடந்துவிட்டன.

அம்பாறை, மட்டக்களப்பு, திருக்கோணமலை, மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா எனத் தமிழர் தாயக நிலத்தின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கும் வாழ்வளித்திருந்த வன்னிப் பெருநிலம் முற்றாக அழித்தொழிக்கப்பட்டு பதினான்கு ஆண்டுகள் கடந்துதான் விட்டன.
அந்தப் பெருநிலம் அழுத அழுகையும், பீறிட்டெழுந்த குருதியும், மரண ஓலமும், பசிப் பயங்கரமும் இவை எல்லாவற்றையும் மூடிநின்ற கரிய புகையும் நமக்கு மிக அருகில்தான் இன்னமும் நின்றுகொண்டிருக்கின்றன. கண்ணீராக, புலம்பலாக, கனவாக, நினைவாக, பம்பலாக நாம் கடக்கும் ஒவ்வொரு நாளிலும் ஒரு துளியளவு நேரமாவது வந்துபோகின்றன. இன்னும் சில நூற்றாண்டுகளுக்கு இந்த நினைவு இப்படியேதான் இருக்கப்போகிறது. பேராழிக்குள் சிக்கிய ஒற்றைத் தீபத்தை அணையவிடாது காத்துச் செல்லும் மீட்பரைப் போல நம் மக்கள் இந்நினைவை சுமக்கத்தான் போகின்றனர்.
மே 18 ஆம் நாளை முள்ளிவாய்க்காலில் நினைவேந்தத் தொடங்கிய முதல் நாளில் நூற்றுக்கும் குறைவான உணர்வாளர்கள் கலந்துகொண்டனர். ஒரு மாலை வேளையில் அந்நிகழ்வு நிகழ்ந்தது. முள்ளிவாய்க்காலை சேர்ந்த சிலர் குடும்பமாகவும், சிலர் தனியாகவும் வந்திருந்தனர். இரத்தவாடையும், கந்தக நெடியும் மாறாதிருந்த அந்த மணலைக் குவித்து, பூக்களை வைத்து அஞ்சலித்தனர். மனது வெடித்து அழுவதற்குக் கூட முடியாதளவுக்கு அச்சுறுத்தல் நிலவிய அன்றைய நாட்களில், அந்த நினைவேந்தல் நிகழ்வு பெரு நம்பிக்கையை தந்தது. அந்நிலம் என்றோ ஒருநாள் மொத்தத் தமிழர்களையும் தன்னை நோக்கித் திரட்டும் என்கிற நம்பிக்கையைத் தந்தது.
படிப்படியாக அது நடந்தது. தடைகள், மிரட்டல்கள், விசாரணைகள், கண்காணிப்புகள் என அனைத்தையும் மக்கள் கடந்தனர். நிடைவேந்தலுக்கான இடம், நினைவேந்தலை நடத்துவதற்கான நிகழ்வொழுங்கு, பிரகடனம் என படிப்படியாக வளர்த்தனர். அண்மை வருடங்களாக இனப்படுகொலையானோர் நினைவாக வீட்டுக்கொரு மர நடுகையினையும் நிகழ்வொழுங்கோடு இணைத்துவிட்டனர்.
இவ்வருடம் முள்ளிவாய்க்காலின் கோர நினைவுகளைத் தமிழர் தாயகம் முழுவதும் எடுத்துச் செல்லவும், சந்ததி கடந்து வரலாற்றைக் கடத்தவும் துணிந்துவிட்டனர். தமிழர் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலையை - இனப்படுகொலையின் அரசியலை இனம் கடந்து எடுத்துச் சென்றுவிட்டனர். "போன வருசத்தைவிட இந்த வருசம் சனம்கூட என்ன" என்கிற மதிப்பீட்டை வருடந்தோறும் அதிகரித்துச் செல்கின்றனர்.
மெதுமெதுவாக நகரும் இந்த வரலாற்றுப் பயணத்தின் பின்னால் எந்த நாடும் இல்லை. எந்த அரசும் இல்லை. எந்த அரசியல் கட்சியுமில்லை. அதிகாரமுடைய எந்த அமைப்புமில்லை. ஏக அதிகாரங்களுமுடைய அரசுகளே தடுமாறும் இதுபோன்ற உணர்வுமிகு நிகழ்வுகளைத் தமிழர்கள் தாமாகவே இனமாக முன்னின்று நடத்திக்கொண்டிருக்கின்றனர். இந்த இனத்தை முள்ளிவாய்க்காலில் முற்றாக அழித்துவிட்டோம் என ஆணவம்கொட்டியவர்களின் முன்பாகவே நம் மக்கள் வரலாற்றை நகர்த்திக்கொண்டிருக்கின்றனர். அனைத்துவிதமான பூச்சாண்டிகளும், கவனக்கலைப்பான்களும் வரிசையில் நின்று வேடிக்கைக் காட்டிக்கொண்டிருக்க, நம் மக்கள் அதற்கு எதிர்த்திசையில் ஓடிக்கொண்டிருக்கின்றனர்.
இவ்வாறு தன்னைத்தானே வடிவமைத்துக்கொண்டு, ஒரு நேர்கோட்டின் வழி நடக்கும்படி இந்த இனத்துக்கு கட்டளையிட்டது யார்? அரசற்ற ஓரினத்தை உள்ளிருந்து ஒரு திசையில் இயக்கும் அந்தத் தீரமிகு சக்தி எது? சதாகாலமும் ஓடுக்குமுறைக்குள்ளும், சதிகளுக்குள்ளும் சிக்கவைக்கப்பட்டிருக்கும் இவ்வினம் சிதைந்தழிந்தல்லவா போயிருக்க வேண்டும்? அரசற்ற - துளியளவு அதிகாரமுமற்ற இந்தத் தமிழினத்தை முன்னின்று அழைத்துப்போகும் வழிகாட்டி யார்?
இந்தக் கேள்விகளுக்கான பதில்கள், கார்த்திகை 27 மாலை 6.5 மணிக்கு ஒளிரும் தீபவொளியில் கிடைக்கின்றன. இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு இந்தப் பதில்கள் அப்படியேதான் இருக்கப்போகின்றன.
எனவேதான் இவ்வளவு பொறுப்புமிகு நம் மக்கள் போற்றப்படவேண்டியவர்கள்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.