அப்பாவின் மடல்.......!!

 


அன்பு மகன் ஆதவனுக்கு அப்பா எழுதும் அன்பு மடல் இது,


ஆதவா, அரபுதேசத்தில் இருந்து உனக்காக அப்பா இம்மடலை வரைகிறேன்....

காலம் கனதியானது,  நாட்கள் வேகமானவை , இப்போதெல்லாம் எதுவும், எவரும் நிரந்தரமில்லை.

நாம் சொல்ல நினைப்பதை அந்தந்த நேரத்தில் சொல்லி விடவேண்டும். பின்னர், சில வேளைகளில் அதனைச் சொல்லவே முடியாத நிலைமை ஏற்படலாம், அதனால் தான் இந்த மடல்,

உனக்குப் பதின்நான்கு வயதாகிறது, வாலிபப் பருவத்தில் அடி எடுத்து வைக்கிறாய், 

இந்தப் பருவத்தில் எல்லாம் அழகாகவும் ஆர்வம் கொள்ளத்தக்கதாகவுமே தெரியும்.

இப்போது உன் சிந்தனைகள் செம்மையானதாக இல்லாமல் சிதறி விட்டது என்றால் உன் இலக்குகளை அடைய முடியாமல் போய்விடும். 

பூமி தாண்டி விண்ணுக்குச் சென்று ஆய்வுகள் செய்யும் விஞ்ஞானியாக வரவேண்டும் என்பது நீயாக உருவாக்கிய உன்னுடைய இலட்சியம் தான்,  நான் உனக்கு எதையுமே திணிக்கவில்லை,  புத்தகங்கள் மீது அலாதி ஆர்வம் கொண்ட  நீ, விரிந்த சிந்தனைகள் கொண்டவன் என்பது எனக்குத் தெரியும்.  இருப்பினும்,  காலம் பல மாறுதல்களைக் கண்டுள்ளது, அதன் பால் ஈர்க்கப்பட்டு நீ, எந்த நேரத்திலும் தவறிவிடக்கூடாது என்பதற்காக இவற்றைச் சொல்கிறேன்.
இன்று, உன் வயதை ஒத்தவர்கள், நேரத்தை வீணடிக்கும், காசைக் கரியாக்கும்,  பல விஷயங்களைச்  செய்வார்கள், அதற்கு நாகரீகம் என விளக்கமும் சொல்வார்கள், அவர்களின் வாதங்களுக்குள் நீ ஒருபோதும் அடைபட்டுக்கொள்ளாதே,

அதற்காக நண்பர்கள் கூடாது என்று நான் சொல்லவில்லை,  நட்பு மிக உன்னதமான விஷயம்,  யாரை நண்பர்களாக கொள்கிறோம் என்பதில் தான் அதன் வெற்றி இருக்கிறது. 

நல்ல நண்பர்களுடன் உறவாடு, உலக விசயங்களை,  நாட்டு நடப்புகளை அலசி ஆராய்ந்து கொள், ஆரோக்கியமான தர்க்கங்களும் விவாதங்களும் நல்லவையே,  குழப்பங்கள் தான் தெளிவுகளையும் தரும். 

பள்ளிக் கல்வி மட்டும் ஒரு மனிதனைப் புடம்போடுவதில்லை, நல்ல புத்தகங்களும் அறிவார்ந்த சிந்தனைகளும் கூட மனிதர்களைச் செதுக்குபவையே,

உன் இலக்கினை வெல்வதற்காக அன்றாடம் நேரம் ஒதுக்கு, அதற்காக நிறைய விடயங்களைத் தேடு, தெரியாதவற்றைத் தெரிந்தவர்களிடம் கேள்,  தட்டத்தட்டத்தான்  சிற்பம் சிறக்கும்.

அறிவு மட்டுமல்ல, அன்பும் கொண்ட ஒரு நல்ல மனிதனாக நீ உருவாக வேண்டும்.

இங்கு,  கடுமையான வெயில்தான்,  கட்டட வேலை செய்யும்போது, சில நேரங்களில் கால்களில் வெடிப்பு ஏற்பட்டுவிடும், ஆனாலும் நான் இங்கு உழைத்தே ஆகவேண்டும் என்பது கட்டாயம்,   அது ஒரு தந்தையாக என்னுடைய கடமை....

உங்கள் மீதான அன்பிற்காக எதையும் தாங்கும் அப்பாவாக நான் இருப்பேன்.  அப்பா எப்போதும் உனக்கு துணையாக இருப்பேன்...

இத்துடன் எனது கடிதத்தை நிறைவு செய்கிறேன்.

இப்படிக்கு
அன்புடன் அப்பா...



(கோபிகை)

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.