தீர்வு - கவிதை!!
யாருக்குமே
தெரியவில்லை...
யார் வெட்டியிருப்பார்கள்..?
தாத்தா காலத்து வேப்பமரம்...??!!
பழம் தின்ற அணில்களின்
பேரன்களுக்கும்
தெரியவில்லை..!
எத்தனையோ
வருடங்களாகி விட்டன ஊரின் சுவாசம் வாங்கி..
வேப்பம் பழத்தின்
வழுக்கலான
வாழ்க்கை...
கிராமம் நழுவிப்போனாலும்
நினைவுகள்
இலைகளாய்...
யார் வெட்டியிருப்பார்கள்..?
தாத்தா காலத்து வேப்பமரம்...??!!
யாருக்குமே
தெரியவில்லை...!!?
ஓட்டு வீட்டின்
மோட்டுவளையைப்
பார்த்து பார்த்துக்
கேட்டாலும்
தூக்கமும் இல்லை
பதிலும் இல்லை...
சாமியாடிகளின்
கிரீடமாகும்
வேப்பிலைக்கொத்து...
அம்மன் விளையாடும்
வீட்டின் முகப்பில்...
சுத்தம் சொல்லித்தந்த
வேப்பமரம்...!
தாத்தா காலத்து வேப்பமரம்...
யாருக்குமே
தெரியவில்லை...!!
யார் வெட்டியிருப்பார்கள்..?!?
''வேப்பிலையை
மெழுகா அரைச்சு
வயித்துல பத்துபோட்டேன் பாரு
வயித்துவலி சரியாப்போச்சு"
மூணாம் வீட்டுப்
பாட்டியின்
குரலும், அரைத்த
அம்மியின் ஓசையும்
இன்னும் நிழலாய்...
பல்லுக் குச்சிகளின்
சிதறல் கிடக்கும்
வாழைத்தோட்ட
கிணத்து ஓரமாக
எட்டிப் பார்த்தன
நினைவுகள்...
யாருக்குமே
தெரியவில்லை...
யார் வெட்டியிருப்பார்கள்..?!?
தாத்தா காலத்து வேப்பமரம்...!!
எந்தப் பிரச்சனைன்னாலும்
அவனும் இவனும்
வேப்பமரத்தின்
கீழே நின்னா
சமாதானமாப்
போன கதை
ஏராளம்.....
தொட்டுதொட்டு
கண்ணில்
ஒற்றிக்கொண்டுபோன
பெண்களின்
மனசெல்லாம்
இனிக்குமாம்
வேப்பம் பூ....
யார் வெட்டியிருப்பார்கள்..?
தாத்தா காலத்து வேப்பமரம்...
யாருக்குமே
தெரியவில்லை.....!!?
குழம்பிக் குழம்பி,
போனதை நினைத்தே
நொருங்கிப்போவதுதான்
வாழ்க்கை
எனச்சுருண்டபோது
கண்ணில்பட்டது
அதே இடத்தில்
என் பேரன் நடுகின்ற
வேப்பமரம்...!!
கவிஞர்.
விஜயகிருஷ்ணன்
13-06-2023
9600644446
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை