சுதந்திரப் பறவைகள்..!!


புத்தகப்பை தோள்சுமந்து

புதுமைகள் படைக்கவெண்ணி

பத்தியங்கள் பலவிருந்து  

பள்ளிக்குச் சென்றவர்கள்.


பாதிவழிப் படிப்பறிந்து 

பயணமதை தாமுணர்ந்து

பாசறைக்குள் தாமுறைந்து

மீதிவழிப் பயணத்தில்

மிடுக்காய் நின்றவர்கள்.


சீருடைப் போர்வைக்குள்

சிக்கிடாத பாவையர்கள்

போருடைக்குள் புகுந்துநின்று

சுடுகலன்கள் சுமந்தன்று 

பார்நிலத்தில் படைநகர்திப்

பயில்நிலத்தை வென்றவர்கள்.


மொட்டாகி முகமலர்ந்து

சிட்டாகி சிறைவிடுத்து

பட்டாம்பூச்சியென பறந்து

பட்டாசுவெடிக்கும் பருவத்தில் 

பட்டாசாய் வெடித்துச்சிதறி

செய்நிலத்தில் செங்குருதிபாய்ச்சி 

செந்திலகம் இட்டவர்கள் 

எந்தேசம் காக்கவென

தந்தேகம் ஈய்ந்தவர்கள்.


இவர்கள் 

வாழ்ந்தால் 

இனத்துக்கு 

வரமாயிரு. 

வீழ்ந்தால் 

நிலத்துக்கு 

உரமாயிரு 

என்னும்

வாழ்வியல் தத்துவத்தின் 

மெய்வழி நின்றெமது

வரலாறாய் ஆனவர்கள்

இவர்கள்

அன்றும் இன்றும் என்றும்

சுதந்திரப் பறவைகள்.


-:நடராஜர் காண்டீபன்:-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.