ஈரத்தீ (பாகம் 4) - கோபிகை!!

 


நீதிமன்ற வளாகம் சுறுசுறுப்புடன் இயங்கத் தொடங்கியது.


கறுப்பு அங்கியை அணிந்த சட்டத்தரணிகள் அங்கும் இங்குமாக நடந்து கொண்டும் ஓடிக்கொண்டும் இருந்தனர்.

காவல்துறையினர் கண்காணிப்பு பணிகளில் மும்முரமாக ஆழ்ந்திருந்தனர்.  அன்று அரசியல் கட்சி தலைவர் ஒருவர் நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

அதன் காரணமாக வழமையைவிட  சன நெருக்கடி அதிகமாகக் காணப்பட்டது.

தாபரிப்பு வழக்குகள் தற்போது  அதிகரித்திருந்தன. பணம் செலுத்த வந்த கணவர்மாரும் அதனை வாங்குவதற்கு வந்திருக்கும் மனைவிமாரும் முகங்களில் ஒரு வெறுமையைச் சுமந்து நின்றுகொண்டிருந்தனர்.

சூரிய வெளிச்சம் முகத்தில் மோத கண்களை மூடித்திறந்தபடி நீதிமன்ற வளாகத்தினுள் தனது உந்துருளியை நிறுத்திவிட்டு இறங்கிய தேவமித்திரன் , எதிரே நின்ற காவல்துறை பணியாளரிடம் காலை வணக்கம் தெரிவித்துவிட்டு தனது அலுவலக அறைக்கு விரைந்து நடந்த போது,

'ஐயா...' என்று அழைத்தபடி கையில் பத்து வயதான ஒரு சிறுவனைப் பிடித்துக்கொண்டு  எதிர்ப்பட்ட பெண்ணிடம் பின்னால் வருமாறு சைகை செய்துவிட்டு விரைந்தான்.

அறைக்குள் நுழைந்து, அவர்கள் இருவரையும் அமருமாறு சைகை செய்துவிட்டு,   தேவையான கோப்புகளை எடுத்து மேசையில் வைத்தான். தண்ணீர் போத்தலை எடுத்து மடமடவென்று குடித்தவன்
எதிரே நாற்காலியில் இருந்த பெண்ணை நிமிர்ந்து பார்த்தான்.

எங்கோ பராக்கு பார்த்தபடி கதிரையின் நுனியில் அமர்ந்திருந்த சிறுவன் நாற்காலி அசையும் சத்தத்தில் விருட்டென்று திரும்பினான்.

வெளியே சொல்ல முடியாத துயரமும் ஏக்கமும் நிராசையும் நிறைந்து கிடந்த அந்தச் சின்ன விழிகளைப் பார்த்த போது,  இதயத்தை நகத்தால் கீறியது போல வலித்தது தேவமித்திரனுக்கு.

"சொல்லுங்கோ அக்கா....என்ன பிரச்சனை....? கம்பீரமாக ஒலித்த அந்தக் குரலில் உடைந்து அழத்தொடங்கிய அந்தப் பெண்ணை பரிதாபமாகப்  பார்த்தபடி,  தண்ணீர் போத்தலை அருகில் கொடுத்து விட்டு,  'குடியுங்கோ ' என்றான்.
தண்ணீரைக் குடித்து சற்று தன்னை ஆசுவாசப்படுத்திய அந்தப் பெண்,

'ஐயா....' என ஆரம்பிக்க....
'தம்பி'  என்று சொல்லுங்கோ...' என்று விட்டு சினேகபாவனையோடு புன்னகைத்தான் தேவமித்திரன்.  

அந்த வார்த்தையே பெரும் பலம் தந்தது போல ,
'தம்பி, இவன் அக்காவின்ரை மகன்,  பத்து வயசு,  இவனுக்குத் தங்கச்சியும் இருந்தது, போன மாதம் தான்  செத்துப்போட்டுது,  தகப்பன் சரியான குடி, 

அவனின்ரை  ஆய்க்கினை தாங்கேலாமல்  பிள்ளையளையும் சாக்காட்டிப்போட்டு தானும் சாக எண்டு அக்கா சாப்பாட்டிலை என்னத்தையோ கலந்து குடுத்ததிலை , அக்காவும் பிள்ளையும் முடிஞ்சிட்டினம்...இவன் மட்டும் தப்பிவிட்டான், 

தகப்பன் சிறைக்கு போய் பத்து நாளில் வெளிய  வந்து வேற ஒருத்தியைக் கலியாணம் செய்திட்டான்.  அங்க இவனுக்கு சரியா சாப்பாடு கூட இல்லை. சரியான கொடுமை. அதாலை நான் கூட்டிக் கொண்டு வந்திட்டன்.

இவனை வைச்சுப் பாக்க எங்களுக்கும் வசதி இல்லை,  நானும் வீட்டு வேலைக்கு யாழ்ப்பாணம் போடுவன்,  வீட்டிலை ஒருத்தரும் இல்லை ,  ஒரு அண்ணா இருக்கிறார்,  அவருக்கு ரெண்டு காலும் ஏலாது, சக்கர நாற்காலி தான், அண்ணிதான் கூலி வேலைக்கு போறவா, அவைக்கும் மூன்று பிள்ளையள்..சரியான கஸ்ரம்...அவைக்கும்  நான் தான் இடைக்கிடை காசு குடுக்கிறனான்...   இவ்வளவு நாளும் அங்கைதான்  நிண்டவன்...  ஆனால் தொடர்ச்சியாக அவையளாலை இவனைப் பாக்க ஏலாது...உங்களுக்கு விளங்கும் தானே...அதுதான்..ஏதாவது ஒரு பராமரிப்பகத்திலை விடுவம் எண்டு.....கூட்டி வந்தனான்...விசாரிச்சதிலை , நீங்கள் உதவி செய்து பிள்ளைகளை பராமரிப்பகங்களிலை   விடுறனீங்கள் எண்டு கேள்விப்பட்டனான்...அதுதான் இவனையும்.....' சொல்லாமல் சங்கடமாகப் பார்த்த அந்தப் பெண்ணிடம், 

'புரிகிறது' என்பது போன்ற பாவனையுடன் தலையை ஆட்டி விட்டு  அந்தச் சிறுவனை நிமிர்ந்து பார்த்தபோது  அதிர்ந்து போனான்.  ஏனெனில் அந்தப் பிஞ்சு முகம் அவமானத்தில் கசங்கியிருந்தது.

அவனுடைய கைகளை அன்போடு பற்றி,
'உன்னுடைய பெயர் என்ன?' என்றதும்
"அகரன்" என்ற சிறுவனிடம்
"ஓ.....நல்லபெயர்டா...."என்று விட்டு  வெள்ளைக்காகிதம் ஒன்றை எடுத்து அகரனிடம் கொடுத்து,

'இந்தா..படம் ஒன்று கீறு பார்ப்போம்....'என்றதும்  ஆர்வமாக அதனை வாங்கிக் கொண்ட அகரனை புன்னகையோடு பார்த்துக் கொண்டே,. அவன் தலையை வருடினான்.  
 
'இருங்கோ...வாறன்...' என்றுவிட்டு வழக்குகள் நடக்கும் மண்டபத்திற்கு நடந்த தேவமித்திரன்,  தாபரிப்பு காசு கட்டுவதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்த ஆண்களை ஒரு பார்வை பார்த்தான்.      

'உழைத்து உரிமையோடு மனைவியிடம் கொடுக்க வேண்டிய பணத்தினை இப்படி சட்ட வரையறைகளோடு கொடுக்கும் அவலம்... '  பெருமூச்சுடன்  உள்ளே நுழைந்து தனது வேலையை முடித்துக்கொண்டு வெளியே வந்தான். 

மீண்டும் அலுவலக அறைக்குள் வந்து,  பார்த்த போது  படத்தை வரைந்து முடித்து  விட்டு அகரன் நிமிர்வதைக்கண்டு,
'எங்கே ....படத்தைக் காட்டு பார்ப்போம்... ' என கைகளில் வாங்கிப் பார்த்தவன் வியந்து போனான்.

அகரன் வரைந்திருந்தது,  அழகான அமைதியான ஒரு வீடு........

"வீடு...உனக்கு பிடிக்குமா? "

"ம்....நிறைய பிடிக்கும்...."


  
தீ .....தொடரும். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.