ஈரத் தீ (கோபிகை) - பாகம் - 8!!

 


கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி மெல்லச் சென்றுகொண்டிருந்தது மகிழுந்து. 

தந்தையாரை மெதுவாக  இருக்கையில் சாய்த்து அமரவைத்துவிட்டு, மிதமான வேகத்தில் மகிழுந்தை ஓட்டிய தேவமித்திரன்,
"அப்பா....இருக்கிறது வசதியா இருக்கிறதா? அல்லது படுக்கப்போறீங்களா?" என்றான்.

"இதுவே வசதியாதான் இருக்கிறது தேவா, எனக்குத் தான்  இப்ப ஒன்றும் இல்லையேப்பா....நான் நல்லாதான் இருக்கிறேன்...சாதாரணமாக மயக்கம் வந்ததை போய்...நீதான் பெரிதாக நினைக்கிறாய்.." என்ற தந்தையைப் புன்னகையுடன் பார்த்தான் தேவமித்திரன்.

பத்தாவது தடவையாக தந்தை இப்படிச் சொல்லிவிட்டார். ஏனோ.....அவனுடைய மனம் தான் சமாதானம் ஆகவில்லை. 

தந்தையைக் கவனித்த வைத்தியரும் நண்பன் மேகவர்ணனும் சொல்லிக்கூட  அவன் கேட்கவில்லையே...

அப்பா , தன்னுடைய வாயால் தான் நன்றாக இருப்பதாகச் சொன்ன பிறகு தானே அவன் சமாதானமடைந்தான்.

"திடீரென்று நீங்கள் இப்படி மயக்கமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டால்...நான் பயப்படமாட்டேனா" குறும்புச் சிரிப்போடு கேட்டான் அவன்.

"நீ பார்க்காத கஸ்ரமா? ஏன் இவ்வளவு பயம் உனக்கு? அப்பா கேட்டதும்,

"அது சரிதான் அப்பா....நான் பார்த்த கஸ்ரங்கள் வேறு விதமானவை... ஆனால் இப்போது உங்களுக்கு ஒன்று என்றதும் நான் கலங்கிப்போய்விட்டேன்..." சிறு கலக்கத்துடன் அவன் சொல்ல,

"வயது ஏற ...ஏற....வருத்தம் வருவது இயல்பு தானே.....அதைப்போய் பெரிதாக யோசிக்காதே... எதற்கும் கலங்காதவனாக நீ இருக்கவேண்டும் என்று சொல்லிச்சொல்லி வளர்த்திருக்கிறேனே உன்னை...நீயானால்  இப்படி பயப்படுகிறாயே தேவா..

"அப்பா....உங்களுக்கே தெரியும், சிறுவயது முதல் சுட்டிதனம் மிக்கவனாக எதற்கும் பயமற்றவனாகத்தானே இருந்திருக்கிறேன்.. என் தொழிலில் கூட நான் எதற்கும் பயப்படுவதில்லை ... அதுவே உங்களுக்கு வருத்தம் என்றதும் ரொம்பவே பயந்து விட்டேன்.....எனக்கிருக்கும் ஒரே உறவு நீங்கள் தானே அப்பா..."

"அதற்காகத்தான் , உனக்காக ஒரு உறவை தேடிக்கொள்  என்று தலைப்பாடாக அடித்துக் கொள்கிறேன்...நீ கேட்டால் தானே..."

அவசரமாக இடைப்புகுந்த அப்பாவிடம்,  '"இது தானே வேண்டாம் என்கிறது, அ...உ...என்றால் நீங்கள் இதில்தான் வந்து நிற்பீர்கள்..."

"அப்பா...உண்மையில், உங்கள் வாயால் நன்றாக இருப்பதாகச் சொன்ன பிறகுதான் எனக்கு மனம் அமைதியே அடைந்தது, அதுவரைக்கும் நான் பட்ட பாடு....தவித்த தவிப்பு....அப்பப்பா...."

"தேவா...நானும் நீயும் என்ற உலகத்தில் எப்போதுமே இருக்க முடியாது, இன்னொரு உறவு வருகிறபோதுதான் உனக்கும் சரி, எனக்கும் சரி...வாழ்க்கை முழுமைப்படும்.."

'உறவு தானே....ஒரு பெண்பார்த்து உங்களுக்கு கல்யாணம் செய்து வைச்சிட்டால்போச்சு...'

"டேய்ய்ய்.....டேய்ய்ய்...." எப்போதாவது தேவமித்திரன் அப்பாவிடம் இப்படி பகிடி கதைப்பதுண்டு...

"சரிசரி..நீங்கள் படுங்கோ....நான் பாட்டுக் கேட்கிறேன்" என்று விட்டு 'பேச்சு முடிந்தது' என்பது போல திரும்பிக்கொண்டான்.

அவனிடம் ஒரு பழக்கம் உண்டு,  அவன் பேச்சை முடித்துவிட்டால், பிறகு கதைக்கவே மாட்டான்....

மனம்,  சில மணி நேரத்திற்கு முன்னரான பொழுதை அசைபோட்டது. வைத்தியசாலையில் நின்றபோது, அவன் பட்ட பாடு,  அப்போது,  அந்தப் பெண் வைத்தியரும் நண்பனும் சிரித்த சிரிப்பு...

இப்போது நினைக்க, சின்னப்புன்னகை உதித்தது தேவமித்திரனின் உதடுகளில்.

அந்த மகிழ்ச்சியான உணர்வுடன், "பாடலை ஓடவிட்டான்.

  "ஆயிரம் ஜன்னல் வீடு....இது அன்பு வாழும் கூடு..."  முதல் பாடலே அமர்க்களமாக ஒலிக்கத் தொடங்கியது.

முக்கலும் முனகலும்.இல்லாமல் அத்தனையும் தத்துவம் சார்ந்த பாடல்களாகவும் குடும்ப உறவுப் பாடல்களாகவுமே ஒலித்துக்கொண்டிருந்தன.

உளவியல் கற்ற அவனால் அந்த வைத்தியரின் குணம் குறித்து கணிக்க முடிந்தது.  'நிச்சயமாக,  அவள் அன்பிற்காக ஏங்கும் ஒரு அப்பாவிப் பெண்' என்பது அவனது மனதிற்குப் புரிந்தது.

இரவு எட்டு மணியானபோது, இருவரும் வீடு வந்து சேர்ந்தனர்.

தீ .....தொடரும். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.