வித்தகரான விபுலானந்தர்!!
16 - 07 - 2023
—————————————
மீன்பாடும் தேனாட்டி லுதித்த
வித்தகராம் விபுலானந்தர்
இத்தரையி லென்றும்
முத்தென ஒளிர்பவர் !
மயில்வாகன மென்னும்
திருநாமங் கொண்டவர்தான்
மகத்தான நற்பணிகளால்
விபுலானந்த அடிகளானார் !
முத்தமிழின் தேர்ச்சியினால்
சித்தத்தின் சீர்மையால்
கத்துங் கடலோர மெல்லாம்
தன்புகழை நட்டவர் !
தமிழர் மனங்களைத் தொட்டவர் !
சாதி சமய பேதமின்றி
சமத்துவப் பயிர்வளர
நீதிநெறி போதித்து
நீணிலத்தில் வாழ்ந்தவர் . . . .
இருள்சூழ் உலகத்தில்
ஒளிக்கதிர் பாய்ச்சி
மருள்களைந்து மண்ணிலே
மணித்துறவி யானவர் . . . .
பன்முக ஆளுமை
கொண்டவரின் படையலாய்
பல்வகை நூல்கள்
பாரெங்கும் பரிமளம் !
பண்டைய மக்களின்
பாவனையில் பலயாழ்கள் ;
அத்தனை யாழ்களும்
யாழ்நூலில் கண்விழித்து
யாழிசை மீட்டும் .
வெள்ளைநிற மல்லிகையோ ?
வேறென்ன மாமலரோ ?
வள்ளல் அடியினுக்கு
வாய்த்த மலரெதுவோ ?
என்னும் பாடலதை
உச்சரிக் காதவுத டுகளுண்டோ ?
ஆய்வுக் கட்டுரைகள்
அளப்பரிய நூல்களென
அன்றவ ரளித்ததை
அகிலமின்றும் போற்றும் .
பள்ளிக் கூடங்களை
பாரெங்கும் தான்நிறுவி
ஆசிரியராய் அதிபராய்ப்
பேரா சிரியராய்த் தானுயர்ந்தார் .
தன்னிக ரில்லாத்
தமிழ்ப் பணிசெய்தே
ஈழத்திரு நாட்டின் பெயரை
இமயத்தில் பதித்துவிட்டார் .
பிரமச்சரிய விரதத்தை
விருப்புடனே தானேற்று
விழுமியம் தழைப்பதற்கு
விதைதூவி நின்றாரே !
விதைதூவிச் சென்றதனால்
வீழ்ந்தவராய்த் தெரியவில்லை !
ஆழிசூழ் உலகத்தில்
அவர்புகழ் அழிவுறுமா ?
இரா . சம்பந்தன் - ஜேர்மனி
கருத்துகள் இல்லை