தமிழர் அடையாளங்களை மீட்டெடுக்க ஐயை என்கின்ற உலக தமிழச்சிகள் ஒன்றினைய வேண்டும் - ஒடிசா பாலு அழைப்பு!!

 


உலகம் முழுவதும் பரவியுள்ள தமிழர் அடையாளங்களை மீட்க தமிழ் பெண்கள் ஒன்றினைய வேண்டும் என கடல்சார் தமிழ்பண்பாட்டு ஆய்வாளர் ஒடிசா பாலு அழைப்பு விடுத்துள்ளார்.


சென்னை, திநகரில் ஐயை என்ற பெண்கள் அமைப்பின் இரண்டாம் ஆண்டு தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. கடல்சார் தமிழ் பண்பாட்டு ஆய்வாளர் ஒடிசா பாலு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியின்போது, உலகம் முழுவதும் பரவியுள்ள தமிழர் அடையாளங்களை, உலக தமிழ் பெண்கள் ஒன்றிணைந்து மீட்டெடுக்க வேண்டும். குறிப்பாக, தமிழ் பெண்களின் உலகளாவிய பரவல் குறித்து பேச வேண்டும் என்றார். இது குறித்து மேலும் அவர் பேசுகையில்,


உலகம் முழுவதும் கடல் வணிகம் மேற்கொண்ட தமிழர்களால் 183 நாடுகளில் தமிழர் தொன்மங்கள் பரவியுள்ளது. இதனை ஆதாரங்கள் மூலம் வெளிப்படுத்த பல ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறேன். இதில், அமெரிக்காவில் மட்டும் தமிழ் பேரவையின் மூலம் அமெரிக்கா சென்று தொடர்ந்து பணியாற்றி பல தமிழர் தொன்மங்களை கண்டறிந்தேன். ஆனால், அமெரிக்காவிலேயே இருக்கும் தமிழர்கள் அந்த ஆய்வை மேற்கொண்டால் விரைவில் வெளிப்படுத்த முடியும் அதுபோல், உலகம் முழுவதும் உள்ள தமிழர் அடையாளங்களை தேடும் எனது ஆய்வை நான் மட்டும் மேற்கொள்வதை விட அங்குள்ள தமிழர்கள் மேற்கொண்டால், காலதாமதம் இல்லாமல், எளிதில் தமிழர் அடையாளங்களை மீட்டெடுக்க முடியும். இதில், ஆண்களை விட பெண்களால் அதிக நேரம் செலவிட முடியும், அவர்களால், அதிக ஈடுபாடு கொள்ள முடியும் என நம்புகிறேன். அதன் காரணமாக, ஐயை என்ற பெண்களின் திறன் வளர்க்கும் இக்குழுவுடன் இப்பணியை செய்து வருகிறேன்.

தமிழர் அடையாளங்களை மீட்டெடுக்கும் என்னைப்போன்ற பலரது முயற்சியில் இதுவரை 10 விழுக்காடு மட்டுமே வெளி உலகிற்கு தெரிந்துள்ளது. இதற்கே தமிழரின் திறன்களை கண்டு பலர் புருவம் உயர்த்துகின்றனர். ஆனால், இன்னும் 90 விழுக்காடு தமிழர் தொன்மங்கள் வெளிவராமலே உள்ளது. இதனை வெளிக்கொண்டு வர ஒவ்வொரு நாடுகளில் இருக்கும் தமிழ் உணர்வாளர்களை ஒன்றினைத்து, அவர்களின் தனித்திறன் மூலம் தமிழ் சார்ந்த அடையாளங்களை சமூக வலைத்தளம் மூலம் பகிர்ந்து, ஆய்வு மேற்கொண்டு வருகிறேன். அதாவது, அமெரிக்காவில் உள்ள தமிழர்கள் மூலம் பெற்ற தகவல்கள் அடிப்படையில், அங்குள்ள பழங்குடியினரிடம் தமிழர் சார்ந்த அடையாளங்கள் இருப்பதும், தாய்லாந்து தமிழர்கள் மூலம் அங்குள்ள அருங்காட்சியத்தில் தமிழ் புத்தம் குறித்த குறிப்புகள் இருப்பதும், ஓமன் நாட்டில் தமிழ் கல்வெட்டுக்கள் இருப்பதும் கண்டறிந்துள்ளேன். முக்கியமாக, அமெரிக்காவில் 9 கோடி ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஆமை ஓடுகள் அருங்காட்சியகத்தில் இருப்பதும் அது தமிழகத்தின் திருச்சியை சேர்ந்தது எனவும் கண்டறிந்துள்ளேன். இதுபோல், உலகம் முழுவதும் பரவியுள்ள தமிழரின் தொன்மங்கள், தமிழ் பெண்களின் அடையாளங்கள் போன்றவற்றை மீட்டெடுக்க இந்த ஐயை குழு மூலம் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.