விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்தனர்!
கனரக வாகனத்துடன் மோட்டர்சைக்கிள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் உயிரிழந்தனர்.
மட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதி சந்திவெளி கோரக்களிமடு பகுதியில் நேற்று (25) இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பில் கனரக வாகனத்தின் சாரதியை கைது செய்துள்ளதாக சந்திவெளி பொலிசார் தெரிவித்தனர்.
பொலிஸாரிடம் தப்பி விபத்தில் சிக்கிய இளைஞர்கள்
விபத்தில் வாழைச்சேனை சுங்கான்கேணியை சேர்ந்த 22 வயதுடைய சண்முகதாஸ் அன்புதாஸ், மற்றும் கிரான் பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய வடிவேல் தர்மராஜ் என்ற இருவருமே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதி சந்திவெளியில் சந்திவெளி பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிசார் சம்பவதினமான நேற்று இரவு 9 மணியளவில் வீதி போக்குவரத்து சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
இதன்போது மோட்டார் சைக்கிள் ஒன்றில் பயணித்த இருவரை பொலிசார் நிறுத்துமாறு சைகைகாட்டிய போதும் நிறுத்தாது அங்கிருந்து வேகமாக தப்பிச் சென்ற போது வீதியில் எதிரே வந்த கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிளில் மோதி விபத்துக்குள்ளானது
இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் மற்றையவர் படுகாயமடைந்து மட்டு போதனாவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இருவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை சந்திவெளி போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.
கருத்துகள் இல்லை