கஜேந்திரன் எம்.பி மீதான தாக்குதலுக்கு கனடாவும் கண்டனம்!!

 


திருகோணமலையில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மீது தாக்குதல் நடத்தப்பட்டமைக்கு கனடா கடுமையான கண்டனம் வெளியிட்டுள்ளது.


திருகோணமலையில் நேற்று திலீபனின் நினைவேந்தல் பேரணியில் பொலிஸார் முன்னிலையில் குழுவொன்று இந்த தாக்குதலை நடத்தியிருந்தது.


தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்த பேரணியில் திலீபனின் உருவப்படத்தை ஏற்றிச் சென்ற வாகனம் குழுவொன்றினால் சுற்றிவளைக்கப்பட்டது.


இதனையடுத்து, பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட குழுவினர் மீதும் திலீபனின் உருவப்படத்தை தாங்கிய வாகனத்தின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.


இந்த தாக்குதலை கண்டித்துள்ள கனேடிய அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி தாக்குதலின்போது பொலிஸார் வேடிக்கை பார்த்ததாக குற்றஞ்சாட்டியுள்ளார்.


“சட்டத்தை வெட்கமின்றி மீறுபவர்கள் அனுபவிக்கும் தொடர்ச்சியான தண்டனையற்ற சுதந்திரத்தை” இந்த சம்பவம் எடுத்து காட்டுவதாகவும் கனேடிய அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி தமது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


இதேவேளை, தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகள் மற்றும் பொலிஸார் நடவடிக்கை எடுக்காதமை ஏமாற்றமளிப்பதாக கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் சல்மா சாஹிட் தெரிவித்துள்ளார்.


அனைவருக்கும் சட்டத்தின் ஆட்சி சமமானதாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.