Alien Covenant - ஒரு பார்வை!!
Ridley Scott அவர்களின் Alien Covenant திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்தேன். இது பெரும்பாலும் சிட்னியில் படமாக்கப்பட்ட திரைப்படமும் கூட. என்னுடன் வேலை செய்யும் பேராசிரியர் ஒருவரின் மகன் ஏலியன் வேடத்தில் நடித்திருந்தார். அது நிற்க.
Ridley Scott அவர்களின் Alien Covenant, Prometheus, Alien போன்ற விஞ்ஞான திரைப்படங்கள், சமீப காலமாக அடிக்கடி எனது நினைவுக்கு வந்து கொண்டிருக்கின்றன. காரணம், Artificial Intelligence மற்றும் Robotics துறைகள் சமீப காலங்களில் அடைந்துள்ள வியத்தகு முன்னேற்றம். முக்கியமாக, ஒரு காலத்தில் வெறும் கற்பனையாக இருந்த, Humanoid Robots என்பது இப்போது நம்முடைய வாழ்க்கையிலே நிஜமாகத் தொடங்கி இருக்கின்றது. அடுத்து வருகின்ற வருஷங்களில் நமது வாழ்வியலில் நாங்கள் சாதாரணமாக Humanoid Robots ஐச் சந்திக்க போகிறோம்.
Alien Covenant, Prometheus, Alien போன்ற திரைப்படங்கள், Humanoid Robots ஐ கதாபாத்திரங்களாக கொண்டுள்ளன. முக்கியமாக, இவை நம் வாழ்வியலில் கலக்கும் போது ஏற்படும், நடைமுறை மற்றும் அறிவியல் ரீதியான பிரச்சினைகளை இவை ஆராய்கின்றன. நாம் இந்த Humanoid Robots ஐ உருவாக்கியது போல நம்மையும் ஏலியன் உயிரினங்கள் உருவாக்கின என்பது இந்தத் திரைப்படங்களின் அடிநாதம். நம்மை உருவாக்கிய ஏலியன் உயிரினத்தை நாம் தேடிப் போவதாக Prometheus படம் அமைகிறது. அதேவேளையில் நம்மால் உருவாக்கப்பட்ட Humanoid Robots ஒரு கட்டத்தில் எம்மை மீறித் தம்முடைய நலனுக்காக மட்டும் செயல்படுவதாகவும் இத்திரைப்படங்கள் காட்டுகின்றன.
பூமியில் கூர்ப்பின் மூலமே மனிதன் உருவானான் என்பது விஞ்ஞானம் நிரூபித்துள்ள உண்மை. இருந்தாலும் அந்தக் கூர்ப்பு நடந்து கொண்டிருக்கின்ற போது பூமிக்கு ஏலியன்கள் வந்திருக்கலாம் என்பதையோ அந்தக் கூர்ப்பில் அவர்கள் தலையிட்டு இருக்கலாம் என்பதையோ முழுதாக மறுத்து விட முடியாது. அதேபோல நாங்கள் இப்போது உருவாக்கி வருகின்ற Humanoid Robots களுக்கு இனப்பெருக்கம் செய்யும் ஆற்றலையும் நாங்கள் கொடுத்தால், அவை தமது அடுத்த சந்ததிகளைத் தாமே உருவாக்கிக் கொள்ள முடிந்தால், அதற்கு அப்புறம் அவையும் ஒரு உயிரினம் தான். அதுபோல ஒரு கட்டத்தில் அவை நம்மை அழித்தாவது தம்மைக் காப்பாற்றிக் கொள்ளவே முயலும். இந்த வகையில் Ridley Scott அவர்களின் தீர்க்கதரிசனம் பிரமிக்க வைப்பது. Humanoid Robot சொல்லுகிற Shelley யின் வசனங்கள் முள்ளந்தண்டைச் சிலீரிட வைப்பவை.
I am Ozymandius, King of Kings.
Look on my works, ye mighty, and despair!
நாடுபல நடந்த முதியோன் ஒருவன்
தாடியை வருடிச் சொன்னான் ஒருநாள்:
“வேட்டைப் பருந்து நிழலைத் துரத்தும்
காட்டுப் பாலைக் கானல் வெளியில்
கால்கள் இரண்டு கண்டேன்: அவையோ
சாலப் பெரிய: கல்லிற் செதுக்கி,
உடலோ எதுவும் இணைக்கப்பெறாது,
நெடிதே நின்றன தனியே: அவற்றின்
பக்கம் தனிலே, பாதி மணலில்
சிக்கிப் புதைந்து, சிதறிய தலையொன்று
இருந்தது ஆங்கே. இதன்மேல் சிற்பி
வருந்திச் செதுக்கிய வண்மையால், ஒருவன்
அகந்தை முகமும், ஆணவச் சிரிப்பும்,
மிகுந்த செருக்கில் விடைத்ததோர் வாயும்,
ஆணையிட்டு உலகை ஆள்கிற நோக்கும்
காணுதல் முடியும் இன்றும்; கல்லிற்
செதுக்கியதாயினும், சிற்பியின் திறமை
மிதப்புடை வேந்தன் வீரிய வடிவைக்
கண்களால் அளந்து கரத்தினால் அமைத்த
திண்தலை, காலச் சிதைவுகள் தாங்கிக்
கிடக்கிறது இன்னும்; தின்றது காலம்
படைத்தவன் பெயரை. படைப்பின்னும் உளதே!
சிலைநிலை நின்ற பீடம் தன்னில்
கலைநயம் மிகுந்த எழுத்துக்கள் கண்டேன்.
“என்பேர் இராமன்; இராஜ ராஜன் நான்.
வன்போர் வரிவில் மாப்பரமேசன்;
என்முன் வரும் நீ எவனாயினும், என்
வன்மையில் எழுப்பிய மாநகர் இதனைக்
கண்டு நீ வியந்து, என் கழல் தொழுவாயே!”
இருந்ததோ வேறேதும் இல்லை. அந்த
நொருங்கிய சிலையைச் சுற்றிலும், நான்கு
மருங்கிலும் முடிவிலது ஆகி
விரிந்தது பாலை வெறுமணல் வெளியே! “.
(மொழிபெயர்ப்பு: விழிமைந்தன்)
கருத்துகள் இல்லை