அன்புள்ள அம்மாவுக்கு!!

 






அன்புள்ள அம்மாவுக்கு, அன்பு மகன் கார்வண்ணன் எழுதுவது!!


அம்மா, வாழ்க்கை காற்றில் சிதறடிக்கப்பட்ட ஒரு பதரைப்போல,  நான் இங்கிருக்கிறேன்,

வெறும் உயிர்க்கூடு சுமந்து நீ அங்கிருப்பாய், என நம்புகிறேன்.

இந்தக் கம்பிகளுக்கு வெளியே தெரியும் சிறு வெளிச்சம்தான்,  என் மனதின் துளி நம்பிக்கையாய்  இருக்கிறது.

காலவெள்ளத்தில் கரைபுரண்ட துரும்பாக, இழுத்து வரப்பட்டு, "அரசியல் கைதி" என்ற பெயரில் சிறையிருப்பு,

என் விடுதலைக்காக நடையாய் நடந்த நீ,  உலர்ந்த சருகாக உயிர் தாங்கி ஜீவிப்பதை நீ எழுதிய மடல்கள் சொல்லின.

அம்மா!!
நான் கடந்து வந்த காலங்கள் என் மனதில் மறையாமல் இருக்கிறது,  சில ரயில் சினேகிதங்கள் கூட  நினைவுகளாய் தங்கிவிடும் நிலையில்,  பெற்று வளர்த்த பெற்றோரையும், உடன் பிறந்த உறவுகளையும்,  ஒரு கோப்பையில் உணவுண்டு, குறும்புகளால் கூடிக்குலாவிய நண்பர்களையும்  எப்படி மறப்பது?

சொல்லப்போனால் இந்த நினைவுகள் தான்,  சிறைவாழும்  எங்களை உயிரோடு வைத்திருக்கிறது,

புராணங்கள் தொட்டு, இதிகாசங்கள்..., இன்றைய வாழ்க்கை வரை, தியாகங்கள் இரண்டு நிலைகளில் தானே பார்க்கப்படுகின்றது,

ஒன்று தியாகம் என்றால் மற்றொன்று துரோகம்..
அப்படித் தான் இருக்கிறது எங்கள் நிலையும்....

மானுட நெறியை, அதன் தர்மங்களை,  தறிக்கும் முள்ளாக அல்லாது, தராசு முள்ளாக ஏற்றிப்பார்க்கச் சொல்கிறோம்....

கேட்பதற்கு செவிப்பறைகள் தான் இல்லை, 

காலப்புரட்சியில் கரிகாலன்  வழி நின்று,  வீரப்புரட்சிக்குத் தோள் கொடுத்தோம்....

கரடுமுரடற்ற பாதைக்கான யாகத்தீயில் ஆகுதி ஆனவர்களை, நெஞ்சிலே சுமந்து,    வேள்வியின் விளக்காகத் துணை நின்றோம்...அதைத்தவிர வேறென்ன தவறு செய்தோம்?

அம்மா நீ அழாதே....
வாழ்வியல் சாபங்கள் வகைகள் பல கொண்டது தானே,

சீட்டாடியோ, சின்னத்தனமான செயல்களுக்காகவோ உன் பிள்ளை,  சிறைவாசல் காணவில்லை, 

இயற்கையின் நியதிகள் சில உண்டு, சிங்கங்கள் மான்களை உண்ணவேண்டும் என்பது நியதி, அவ்வாறு இல்லாவிட்டால் இயற்கைச் சமநிலை குழப்பமடையும்,

மனிதர்களே, மனிதர்களை வதைக்க வேண்டும் என்பது நியதி அல்ல,  ஆனால் ஆறறிவு கொண்ட மானுட  சமூகம், மனிதர்களை வதைத்து அவர்களை அடிமைப்படுத்துவதில்,  மகா சந்தோசம் கொள்வது ஏன் என்பது தான் புரியவில்லை, 

போகட்டும்....பாரதப்போர் முடிந்த போது கண்ணன் ஒரு வாசகம் சொன்னானாம்..."வென்றவனும் தோற்றான், தோற்றவனும்  தோற்றான்" என்று.

இந்த வரிகள் எல்லோருக்கும், எல்லாவற்றிற்கும் பொருந்தும்...

எங்கள் பயணம் என்பது, இப்போது, இருளுக்கும்  வெளிச்சத்திற்கும் வித்தியாசம் தெரியாத  ஒன்று. 

சபிக்கப்பட்ட நியாயங்களும் தண்டிக்கப்பட்ட நீதி நெறிகளும் எங்களுக்கானது,

இந்த உடல் 'விடியல் காணும்' என்ற நம்பிக்கையில் தான்  நகர்கிறது வாழ் நாட்கள்...

இத்துடன் எனது மடலை நிறைவு செய்கிறேன்...உன் பதிலுக்காக காத்திருக்கிறேன்  அம்மா....

அன்புடன்
உன் பாசமகன்
கார்வண்ணன்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA
   

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.