தம்பலகாமம் பண்ணையாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள்
கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுவருகின்ற தம்பலகாமம் பகுதியைச் சேர்ந்த பண்ணையாளர்கள் கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரை இன்றி பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள்.
திருகோணமலை தம்பலகாமம் பகுதியில் 45க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட பண்ணையாளர்கள் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுவருகின்றார்கள். இவர்கள் தங்கள் கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரை இன்றி தங்களுடைய கால்நடைகளை கோடை காலங்களில் நெற்செய்கை மேற்கொள்ளப்படாத தம்பலகாமம் மற்றும் தம்பலகாமத்தை அண்மித்துள்ள பகுதிகளிலும், குறித்த நிலங்களில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுவரும் நவம்பர் மாதம் தொடக்கம் தைப்பொங்கல் வரையான 75 நாட்களுக்கு தம்பலகாமத்தில் இருந்து 58 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள மொரவெவ குளத்தை அண்மித்துள்ள பகுதியிலும் தமது கால்நடைகளை வைத்து பராமரித்து வருகின்றார்கள். இவர்களில் தம்பலகாமத்தைச் சேர்ந்த தமிழ், முஸ்லீம் பண்ணையாளர்கள் 20 பேரும், மொரவெவ பகுதியைச் சேர்ந்த ஒரு பண்ணையாளரும் ஈடுபட்டு வருகின்றார்கள்.
இந்நிலையில் கடந்த 13ஆம் திகதி அதிகாலையளவில் மொரவெவ பகுதியைச் சேர்ந்த சிலரால் தம்பலகாமத்தைச் சேர்ந்த சில பண்ணையாளர்கள் தாக்கப்பட்டதுடன் அவர்கள் தங்கியிருந்த கூடாரங்களும் சேதப்படுத்தப்பட்டு அவர்கள் வைத்திருந்த உணவுப் பொருட்களினுள் மண்ணென்னை ஊற்றப்பட்டதாகவும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இப்பகுதியில் கால்நடைகளை வைத்திருப்பதற்காக சிலர் தம்மிடம் 15 இலட்சம் ரூபா கப்பம் பெற்றுவந்ததாகவும் இம்முறை அதை வழங்கவில்லை எனவும் கால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.
நாட்டின் ஜனாதிபதி உள்நாட்டு உற்பத்திகளை ஊக்குவிக்குமாறும் கால்நடைகளின் உற்பத்திகளை அதிகரிக்குமாறு கூறிவருகின்றபோதும் அதற்கான எவ்வித வசதிகளும் அரசாங்கத்தினால் ஏற்படுத்திக் கொடுக்கப்படாமல் உள்ளது. கால்நடை வளர்ப்பிற்கான மேய்ச்சல் தரைகள் யுத்தம் முடிவுற்ற காலத்தின் பின்னர் வனஜீவி மற்றும் வனவளத்துறை திணைக்களினால் கையகப்படுத்தப்பட்டு இன்னும் விடுவிக்கப்படாமல் உள்ளதுடன் பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டும் அது விடுவிக்கப்படாமையினால் பெரும்பாலான பண்ணையாளர்கள் கால்நடை வளர்ப்பினை கைவிட்டு வருகின்றார்கள்.
1983ஆம் ஆண்டு காலப்பகுதியில் கடவான பகுதியில் கால்நடை வளர்ப்புக்காக 1500 ஏக்கர் மேய்ச்சல் தரை நிலம் வழங்கப்பட்டிருந்ததுடன் அப்பகுதியில் 60 பேருக்கான உறுதிக்காணி 120 ஏக்கரும் வழங்கப்பட்டிருந்தது. எனினும் அவையும் தற்போது வனஜீவி மற்றும் வனவள பாதுகாப்புத் திணைக்களங்களினால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக பண்ணையாளர்கள் குறிப்பிடுகின்றார்கள். இவ்வாறான நிலை தொடருமானால் தாமும் கால்நடை வளர்ப்பை கையிடவுள்ளதாகவும் தெரிவிக்கின்றார்கள்.
எனவே பண்ணையாளர்களின் கால்நடை வளர்ப்பிற்கான மேய்ச்சல்தரைகளை வழங்குவதன் மூலம் இலங்கையின் உற்பத்திப் பொருளாதாரத்தை அதிகரிக்க முடியும்.
கருத்துகள் இல்லை