பொலிஸாரின் அராஜகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்!


வட்டு. சித்தங்கேணியைச் சேர்ந்த இளைஞனைப் படுகொலை செய்த பொலிஸார் பணி நீக்கம் செய்யப்பட்டு அவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். இதன் மூலமே வட்டுக்கோட்டை பிரதேசத்தில் வாழும் மக்கள் நிம்மதியாக வாழ முடியும். 


வட்டுக்கோட்டை பொலிஸாரின் ஈவிரக்கமற்ற, மிருகத்தனமான செயற்பாட்டால் இப்பிரிவில் வாழும் மக்கள் கடந்த சில தினங்களாக மிகுந்த அச்சத்துடனேயே வாழ்ந்து வருகின்றனர். 


பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் பற்றைக்குள் சடலமாக மீட்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே பொலிஸாரினால் இளைஞர் ஒருவர் அடித்துப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றது. இச்சம்பவங்களால் மக்கள் அதிர்ச்சியும் அச்சமும் அடைந்திருக்கின்றனர். 


பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட ஒருவரை அடித்து துன்புறுத்துவதற்கோ சித்திரவதை செய்வதற்கோ பொலிஸாருக்கு எந்த அதிகாரமும் இல்லை. சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டவேண்டிய பொலிஸாரே மிகக் கேவலமாக, மிருகத்தனமாக, கொலைகாரர்களாக நடந்துகொள்ளும்போது மக்கள் எப்படி நிம்மதியாக வாழ முடியும்? 


இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் என இனங்காணப்பட்ட பொலிஸார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள் என தெரியவருகின்றது. அப்படியாயின் சாதாரண மக்களும் யாரையாவது கொலை  செய்துவிட்டு தமது கிராமத்தை விட்டு வேறு கிராமத்தில் போய் வாழ முடியுமா? 


நீதியை நிலைநாட்டவேண்டிய பொலிஸாரே கொலை செய்துவிட்டு வேறு பிரிவிற்கு இடமாற்றம் பெற்றுச் செல்ல முடியும் எனில் சாதாரண மக்கள் ஏன் குற்றம் ஒன்றில் ஈடுபட்டுவிட்டு வேறிடம் செல்ல முடியாது? சட்டம் அனைவருக்கும் பொதுவானதாக இருப்பதை ஆளும் தரப்பு உறுதிப்படுத்த வேண்டும். 


தயவு செய்து கொலைகாரர்களைக் கைது செய்து அவர்களை பணிநீக்கம் செய்து, சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வழங்குவதன் மூலம் மக்களை நிம்மதியாக வாழ விடுங்கள் என  கேட்டுக்கொள்கின்றோம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.