விழிமூடி வீடு வந்தாய்..!!

 


கனவுகள் சுமந்த நெஞ்சோடு 

கையசைத்த கடைசிப் பொழுதில்

அடுத்ததொரு விடுமுறையிலும் வீடு வருவாயென

வெள்ளந்தியாய் விடை தந்தாள் அம்மா,

வீரம் விளைந்த மண்ணின் புழுதி பூசிய 

பேருந்துச் சக்கரங்கள் 

சுமந்து சென்றன 

மீண்டு வராத உன்னை.


பட்சணம் பலகாரங்களோடு

உன் தோழிகளுக்காகவும்  

அங்கிகளும் அடுக்கிவைத்து காத்திருக்க 

விழிமூடி வீடு வந்தாய் 

இருள் கவியும் பொழுதொன்றில்


விளங்கிவிடாப் புன்னகையும் 

கதை சொன்ன கடைசிப் பார்வையும், 

காலத்தின் நீட்சி என்று புரிந்திருந்தால் 

இரத்தப் பிசுபிசுப்போடு நீ உயிர் தீண்டிச் சுவாசித்த முதல் நாளில்  

அணைத்திட்ட வாஞ்சை முத்தத்தை 

யுகங்களுக்குமாய்ச் சேர்த்துத் தந்திருப்பாள் அம்மா. 


ஒளிப்படம் - நல்லூரில் அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில்.

சர்மிளா விநோதிநி திருநாவுக்கரசு.

24.11.2023

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.