ஏதிலியின் கதை- யாதும் ஊரே யாவரும் கேளிர்!!

 


அடையாளம் தெரியாத ஒரு மனிதனின் கதை மட்டுமல்ல. உரிமை இழந்த ஒரு இனத்தின் கதையும்தான். இந்தப் படத்திற்குப் பலவிதமான கருத்துகள் முன்வைக்கப்பட்டிருந்தாலும்; ஈழத் தமிழர்கள் இந்தியாவில் எதிர்நோக்கும் அடையாளச் சிக்கல்கள், அதிகாரச் சிக்கல்கள், நடைமுறைச் சிக்கல்கள் குறித்துப் பேசுவதாலேயே என்னமோ இந்தப் படம் குறித்து எழுத வேண்டுமெனும் எண்ணம் தோன்றியது.


சிறுவயதில் யாரென்றே தெரியாமல் பல இன்னல்களின் பின் கேரளா சென்ற இசையார்வமிக்க ஈழத் தமிழ்ச் சிறுவன் வளர்த்து பெரியவனானதும் அடையாளச் சிக்கல்களால் இலண்டனில் நடக்கவிருக்கும் இசைப் போட்டியில் கலந்துகொள்வதில் ஏற்பட்ட சிக்கல்களும்; தமிழ்நாடு சென்று ஈழத் தமிழில் பேசியதால் எதிர்கொண்ட சிக்கல்களுமே இந்தப் படத்தின் கதை. படத்தின் கதையூடே அங்குள்ள ஈழத் தமிழ் ஏதிலிகள் எதிர்நோக்கும் சிக்கல்கள் குறித்துப் பேசப்பட்டுள்ளது.

அடையாள அட்டை ஏதுமில்லாத ஏதிலிகளிடம் அதிகாரிகள் பணம் கேட்டுத் தாங்களே எடுத்துக்கொள்வது குறித்துப் படத்தில் காட்டப்படுகிறது.


மேலும் ஈழத் தமிழர்கள் சந்தேகத்தின் பெயரில் அழைத்துச் செல்லப்பட்டு எந்தப் புகாரும் எழுதப்படாமல் சிறையிலிடப்பட்டு அவர்களை வெளியே அனுப்புவதற்கு வெளிநாட்டில் இருக்கும் உறவினர்களிடம் பணம் பெற்றுத் தந்தால் அவர்களை வெளியே விடுவோம் என்று கூறுவதைப் படம் பேசுகிறது. அத்தோடு 

அவர்களிடம் பேசிப் பணம் பெற்றுக்கொள்வதற்காகவே இன்னொரு ஈழத்தமிழரை காவல்துறையினர் வைத்திருப்பதையும் அவ்வாறு பேசிப் பணம் பெற்றுக் கொடுப்பதற்காக வரும் இயக்குநர் கரு.பழனியப்பனின் செயலே இந்தப் படத்தின் திருப்புமுனையாக அமைகிறது.


காவல் நிலையங்களில் ஏதிலியர் முகாமில் இருக்கும் பெண்கள் நடத்தப்படும் நிலைமையும் படத்தின் முக்கிய திருப்பத்திற்கும் தொடர்புபடுத்தப்படுகிறது. காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே தம்மிடம் வம்பிழுக்கும் போக்கிரிகளிடம் கூட அடங்கிப்போகும் நிலையும் விவரிக்கப்படுகிறது.


இந்தப் படம் குறித்து என்னை எழுதத் தூண்டியது அதே தமிழகத்தில் நான் சந்தித்த அடையாளச் சிக்கல்கள்தான்.இந்தப் படத்தினை எளிதாகக் கடந்து செல்பவர்களுக்கு அது உணர்த்தும் சிக்கல்களும் செய்திகளும் புரியாமல் போகலாம். அதைச் சந்தித்து அனுபவித்தவர்களுக்கு மட்டுமே அந்தத் திரைப்படத்தின் கருத்தைப் புரிந்துகொள்ளவும்; பாராட்டவும் முடியும்.


தமிழ்நாடு எல்லோரையும் வாழ வைத்திருக்கிறது. ஈழத் தமிழர்களையும்தான். ஆனால் அவர்கள் சுதந்திரத்தைப் பறித்து, உரிமைகளை முடக்கியே வாழ வைத்திருக்கிறது. "இவள் நன்றாகப் படிப்பாள், ஆனால் மருத்துவம் படிக்க எங்களுக்கு அனுமதியில்லை" என்று அந்தப் படத்தில் கூறும் வசனத்தினூடே அடிப்படைக் கல்வியுரிமை கூட இல்லாமல்தான் எம் தமிழ் மண்ணில் ஈழத் தமிழர்கள் வாழ்கின்றார்கள் என்பதை அனைவராலும் புரிந்துகொள்ள முடியாது. திறமையிருந்தும் வாய்ப்பில்லாமல் முடக்கப்படும் வேதனையை; அதை உணர்ந்தவர்களால் மட்டுமே பேச முடியும்.


பிடித்த வேலை, கல்வி, வாழ்க்கை என்பதை விடவும்; கிடைத்ததையே பெற்றுக்கொண்டு வாழ்வதற்கு இந்த ஏதிலி வாழ்க்கை பழக்கியிருக்கிறது. அடையாளங்களை இழந்ததால் சந்தித்த அவமானங்களும் வலிகளும்; சிலருக்குப் போலி அடையாளங்களை உருவாக்குவதற்கு ஒரு காரணமாய் அமைந்தது.இந்தப் படத்திலும் இது குறித்துப் பேசப்படுகின்றது.


"ஒரு அகதியைத் திருமணம் செய்து எங்களுக்குப் பிறக்கும் பிள்ளையும் அகதியாகப் பிறப்பதற்கு இது திருமணமா இல்லை அகதியை உருவாக்கும் பந்தமா" என்ற கேள்வி உண்மையானது. பிற நாடுகளைப் பொறுத்தவரை ஏதிலியாகத் தஞ்சம் கோருபவர்கள் குறிப்பிட்ட ஆண்டுகளின் பின் அந்நாட்டுக் குடியுரிமை பெற்றுவிடுவார்கள். பிறக்கும் பிள்ளைகள் ஏதிலியாகப் பிறந்தாலும் இறப்பதற்குள் அந்நாட்டவர்கள் ஆகிவிடுவார்கள். ஆனால் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அப்படி இல்லை. ஏதிலியாகப் பிறந்து, ஏதிலியாக வளர்ந்து, ஏதிலியாக வாழ்ந்து,ஏதிலியாகவே இறக்க வேண்டும். 


இந்த வாழ்க்கை பிடிக்கவில்லையென்றால் திரும்பிப் போக வேண்டியதுதானே என்ற கேள்வியைக் கூடப் பலர் எதிர்கொள்கின்றார்கள். உயிர் பயத்தில் வந்தவர்களை நோக்கி எழுப்பப்படும் இந்தக் கேள்விகள் நியாயமற்றவை. எல்லாம் முடிந்ததாகக் கூறப்பட்ட பின்னரும் பலரால் போக முடியாமல் இருப்பதற்கு நியாயமான காரணங்கள் பல இன்னமும் இருக்கிறது. இங்கே பிறந்தவர்கள் இந்நாட்டு வாழ்க்கைக்குப் பழகிவிட்டார்கள். இனிமேல் அங்கே சென்று அவர்களால் சமாளிக்க முடியாது. தமிழீழ மக்களுக்காக பல நற்றிட்டங்களைச் செய்து வரும் அரசு இந்தப் பற்றியங்கள் குறித்து அமைதி காப்பது வேதனையானது.


உரிமைகளுக்காகப் போராடி, எல்லாவற்றையும் இழந்து; ஏதிலிகளாகச் சென்று நம் தமிழ்நாடு, நம் மக்கள் என்று கால் பதித்தவர்கள் அங்கு எதிர்நோக்கும் நடைமுறைச் சிக்கல்களைப் பேச முயற்சித்திருக்கும் படம் என்பதால் இந்த முயற்சியைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.


படக்குழுவினர் இன்னும் சற்று முயற்சித்திருக்கலாம்.கூடுதல் தகவல்களைத் திரட்டி உண்மை நிலையை மேலும் விளக்கியிருக்கலாம். ஈழத் தமிழ் பேசப்படும் பெரும்பாலான திரைப்படங்கள் சரியாக அத்தமிழைப் பேசியதில்லை. அதே போலவே இங்கும் உச்சரிப்புகள் மாறுபடுகின்றன. ஈழத் தமிழர்களை வைத்தே குரல் கொடுத்திருக்கலாம். 


ஈழத் தமிழர்களின் அவலங்கள் குறித்த புரிந்துணர்வு இல்லாத காரணத்தாலும்,உண்மை நிலை புரியாததாலும், கதைக்களம் குறித்த அறிவின்மையாலும்,, கதை நகர்வு சரியாக அமையாததாலும் இந்தப் படத்தினைப் பலரால் புரிந்துகொள்ள முடியாமல் போயுள்ளது.இதனாலேயே இது பெரிதும் பேசப்படவில்லை எனக் கருதுகின்றேன்.

ஒரு ஏதிலியின் வலியையும் அந்த மக்களின் இன்னல்களையும் முழுமையாக இல்லாவிடினும் ஓரளவேனும் வெளிக்காட்டிய படக்குழுவினருக்கு அன்பும்,நன்றியும் பாராட்டுகளும்.

-பொலிகையூர் ரேகா


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.