கிளிநொச்சியில் தேசத்தின் குரல் வணக்க நிகழ்வு நினைவேந்தல்!
கிளிநொச்சி மாவட்ட தேசத்தின் குரல் அரசறிவியல் பள்ளியின் ஏற்பாட்டில், "வணங்குவோம் வல்லமை சேர்ப்போம்" நினைவுப் பேருரையும், கருத்தாடல் அரங்கும் இன்றைய தினம் கிளிநொச்சியில் நடைபெற்றது.
உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் இலங்கைக்கிளைத் தலைவர் அருணாசலம் சத்தியானந்தம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், நினைவுப் பேருரையினை யாழ்.பல்கலைக்கழக் கலைப்பீட பீடாதிபதி கலாநிதி.ரகுராம் அவர்களும், கருத்துரைகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் கெளரவ.விசுவநாதன் உருத்திரகுமாரன், எழுத்தாளர் குணா.கவியழகன் ஆகியோர் நிகழ்நிலை மூலமும் ஊடகவியலாளர் அ.நிக்சன் அவர்கள் நேரடியாகவும் நிகழ்த்தியிருந்தனர்.
இதன்போது "விடுதலைப் போராட்டத்தில் பங்குகொண்ட மக்களினதும், மாவீரர்களினதும் தியாகத்துக்கு மதிப்பளித்து தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை என்கிற ஈழத்தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை உறுதிப்படுத்த எந்தவித விட்டுக்கொடுப்புகளுக்கும், சமரசங்களுக்கும் இடமற்று உறுதியோடு உழைப்போம்" என்ற மகாநாட்டுத் தீர்மானமும் வெளிப்படுத்தப்பட்டது.
இந்நிகழ்வில், வடக்கு, கிழக்கு மாகாணங்களின் தமிழ்த்தேசிய அரசியல் பிரமுகர்கள், பேராசிரியர்கள், ஊடகவியலாளர்கள், மருத்துவர்கள், அதிபர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், தமிழ்த்தேசிய ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை