‘வடக்குப்பட்டி ராமசாமி’ சர்ச்சைக்கு விளக்கமளித்த சந்தானம்!

 


‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தின் டீசரில் இடம்பெற்ற ‘அந்த குறிப்பிட்ட வசனம்...’ ’யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் அமைக்கவில்லை. எம்முடைய நோக்கம் மக்களை சிரிக்கவைப்பது தான் ’ என அப்படத்தின் நாயகனான சந்தானம் விளக்கமளித்திருக்கிறார்.

இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'வடக்குப்பட்டி ராமசாமி'. இதில் சந்தானம், மேகா ஆகாஷ், நிழல்கள் ரவி, எம். எஸ். பாஸ்கர், மாறன், தமிழ், 'நான் கடவுள்' ராஜேந்திரன், ஜோன் விஜய், ரவி மரியா, ஷேசு, சுரேஷ்  உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

தீபக் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். நகைச்சுவையை மையப்படுத்தி பொழுதுபோக்கு அம்சத்துடன் கூடிய திரைப்படத்தை பீப்பிள் மீடியா ஃபேக்டரி பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் டி. ஜி. விஸ்வ பிரசாத் தயாரித்திருக்கிறார்.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் இரண்டாம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகைகளில் வெளியாகவிருக்கும் இப்படத்தினை விளம்பரத்தும் வகையில் வெளியீட்டிற்குள் முன் நடைபெறும் பிரத்யேக நிகழ்வு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதன் போது நடிகர் ஆர்யா சிறப்பு அதிதியாக பங்குபற்றினார்.

இவ்விழாவில் பேசிய சந்தானம்,“ இப்படத்தின் இயக்குநரான கார்த்திக் யோகியும், நானும் நடிகர் கவுண்டமணியின் ரசிகர்கள். ‘டிக்கிலோனா’ என்பதும் அவர் பயன்படுத்திய வார்த்தை தான். ‘வடக்குப்பட்டி ராமசாமி’ என்பதும் அவர் பயன்படுத்திய வார்த்தை தான். அது இந்த கதைக்கு பொருத்தமாக இருந்தது என்பதால் தான் வைத்தோம்.

இதைத் தொடர்ந்து நானும், கார்த்திக் யோகியும் இணைந்து நடிக்கும் அடுத்த படத்திலும் கூட கவுண்டமணியின் டொயலாக்கைத்தான் டைட்டிலாக யோசித்து வைத்திருக்கிறோம். எங்களுக்கு யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமில்லை. மக்கள் சிரிக்கவைப்பது தான் நோக்கம்.’ என்றார். 

இதனிடையே நடிகர் சந்தானம் அடுத்ததாக ‘டிடி ரிட்டன்ஸ் 2’ படத்தில் நடிக்கவிருப்பதாகவும், இதனை‘ டி டி ரிட்டன்ஸ்’ படத்தின் முதல்பாகத்தை இயக்கிய பிரேம் நாத் இயக்கவிருப்பதாகவும், இந்த படத்தை நடிகர் ஆயாவின் சொந்தபட நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.