வாழ்வியல் பாடம்!!

 



யார் உண்மையான கல்விமான்கள்?

யார் அறிவாளிகள்?

யார் நல்ல உள்ளம் கொண்டவர்கள்?


மகிழ்ச்சியாக இருக்க ஆபிரிக்க சிறுவர்கள் கூறிய அறிவுரை !!!


இந்த வினாக்கள் மூன்றுக்கும் ஒரே விடையாக அமைந்த சம்பவம் ஒன்று ஆபிரிக்காவில் பதிவாகியது.


ஒரு வெள்ளைக்காரன் வழமை போல சிறுவர்கள் என்றுகூட பாராமல் தனது பிரித்தாளும் சூழ்ச்சியை குறித்த நாட்டில் தொடக்கிவிட நினைத்தான்.


மிகவும் வறிய நாடு அது. உணவுக்கு பஞ்சம் நிலவும் நாடு. வீதி வழியாக நடந்து வந்து கொண்டிருந்த வெள்ளைக்காரன் தன் கையில் ஒரு கூடை நிறைய பல வகையான வெளிநாட்டுப் பழ வகைகளையும் கொண்டு வந்தான். எதிரே சற்று தூரத்தில் சுதேசிகளான பழங்குடி இன சிறுவர்கள் மூவர் வீதியில் விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டான்.


வீதியோரமாக இருந்த பெரியதொரு மரத்தின் மேற்கிளம்பியிருந்த வேர் ஒன்றின் மீது பழக்கூடையை வைத்துவிட்டு சிறுவர்களின் அருகே வந்த வெள்ளைக்காரன், " தம்பிகளா, அதோ பாருங்கள். ஒரு பழக்கூடை இருக்கிறது. அதை ஓடிப்போய் முதலில் உங்களில் யார் எடுக்கிறாரோ அவ்வளவு பழமும் அவருக்கு பரிசாக கிடைக்கும்." என்றான். எல்லோரையும் சமமாக நிறுத்தி விசிலடித்து ஓட்டப்போட்டியைத் தொடக்கி விட்டான்.


அந்த மூன்று சிறுவர்களும் சமாந்தரமாக ஓடி எவரும் முந்திப்பிந்தாமல் ஓரே நேரத்தில் கூடையைத் தூக்கினர். வெள்ளையன் அசந்து போனான்.  "ஏன் இப்படிச் செய்தீர்கள். ஒருவர் சற்று முந்தியிருந்தால் எல்லாப் பழங்களும் கிடைத்திருக்கும். பங்கு பிரிக்கும் அவசியம் வந்திருக்காது அல்லவா?" என்றான். அதற்கு பிள்ளைகள் சொன்ன பதில் அவனது நெஞ்சைக் குத்தியது.


"ஐயா, நாங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க விரும்புபவர்கள். எங்களது பெரியார்கள் மகிழ்ச்சியாக வாழும் வழியை கற்றுத் தந்திருக்கிறார்கள். எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கும் போதுதான் தனிமனிதனும் மகிழ்ச்சியாக இருக்கலாம். இந்த பழக்கூடையை ஒருவர் மட்டும் எடுத்துக்கொண்டால் மற்றைய இருவருக்கும் மனதில் கவலை உண்டாகும் அல்லவா?" என்றனர் அந்த சின்னஞ்சிறு பாலகர்கள்.

அவர்களின் வார்த்தைகள் கூறுவது மிகப்பெரிய வாழ்க்கை தத்துவம்.


ரவி தினகரன்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.