பேசும் சிற்பங்கள் - சிறுகதை!!
மேகங்களைத் தொட்டபடி பயணித்துக் கொண்டிருந்தது அந்த வெள்ளை நிற விமானம். குளிர் உடலைத் தழுவ தான் போட்டிருந்த மேலங்கியை இழுத்து இறுக்கிக் கொண்டாள் சமர்க்கனி. பல ஆண்டுகளுக்குப் பின்னர் தாய்நாடு நோக்கி குடும்பத்துடன் பயணப்படிருந்தனர். சற்றே தள்ளி, அப்பாவும் தம்பி சாருமித்திரனும் அமர்ந்திருந்தனர்.
அருகில் அமர்ந்திருந்த அம்மாவைப் பார்த்தாள், சற்றே சாய்ந்து மெல்லிய உறக்கத்தில் ஆழ்ந்திருந்தார் அம்மா. அம்மாவின் முகத்தில் இருந்த கனிவு அம்மாவைப் பேரழகியாய்க் காட்டியது. உறக்கத்தில் கனிவுடன் இருந்தாலும் அம்மா ஒரு கண்டிப்பான தாய்.
அதற்காக எப்போதும் அம்மா கட்டுப்பாடுகள் போடுபவர் என்றில்லை. நியாயமான ஆசைகளையும் முக்கியமான தேவைகளையும் அம்மா புறக்கணித்ததே இல்லை,
பிள்ளைகளுக்கான இடம் எந்த அளவுக்கானது என்பதைப் புரிந்து அந்த எல்லையை கண்டிப்போடு வகுத்துத் தந்தவர்.
அந்த எல்லைக் கோட்டைத் தாண்டி அம்மா எப்போதும் வந்ததும் இல்லை, எங்களை அதைத்தாண்டி அனுமதித்ததும் இல்லை,
விமானம், பின்னர் மகிழுந்து, என யாழ்ப்பாணத்தில் நிறைவடைந்தது அந்தப் பயணம்.
அத்தை சுதாகரி வீட்டில் எல்லோரும் ஆர்வமாக வரவேற்றனர். சுதாகரி அத்தையின் கணவர் யாக்கோபு மாமா சிரித்த முகத்துடன் அப்பாவையும் தம்பியையும் கட்டித் தழுவி உள்ளே அழைத்துச் சென்றார்.
சுதாகரி அத்தைக்கு ஒரே மகள் தான், பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தார்.
"அலுப்பு தீர குளிச்சுப்போட்டு வாங்கோ...காலைச் சாப்பாடு தயார்..," என்ற அத்தை எங்களுக்காக நூடுல்ஸ் தயார் செய்திருந்தார்.
ஒரு தலை அசைப்புடன் எல்லோரும் குளிப்பதற்காக விரைந்து திரும்பினோம். சாப்பாட்டு மேசை நிறைந்திருந்தது அத்தையின் கைவண்ணத்தில்.
எல்லோருடனும் பொதுவாகக் கதைத்தபடி நானும் அப்பாவும் தம்பியும் சாப்பிட்டுக்கொண்டிருந்தோம், சற்றே திரும்பி எனக்கு அருகில் இருந்த அம்மாவைப் பார்த்தேன்,
அம்மா யாருடனும் அதிகம் பேசாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தா, இந்த நாட்டைவிட்டுப் போன பிறகு, அம்மா இப்போது தான் திரும்பியிருக்கிறா, இடையில் அப்பா, அம்மாவிற்கு இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அம்மாவை ஊரைப்பற்றி நினைக்கவிடவில்லையோ என்னவோ...
'அண்ணி...என்ன பேசாமல் இருக்கிறியள், ஏதேனும் சாப்பாடு போடவே? ' அத்தை கேட்ட போது அம்மா புன்னகையுடன் மறுத்து விட்டா...
என் எண்ணங்கள் அம்மாவையே சுற்றியது, 'பாவம் அம்மா, அம்மாவிற்கு, குதூகலமான குழந்தைப்பருவமோ, இனிப்பான இளமைப் பருவமோ அமையவில்லை'.
சிறு வயதிலேயே பெற்றவர்களை, விமானக் குண்டு வீச்சிற்குப் பலி கொடுத்து விட்ட அம்மா, வளர்ந்ததெல்லாம் சிறுவர் இல்லத்தில் தான்,
உயர்தரம் முடித்து விட்டு, நண்பியோடு அவர்களின் வீட்டிற்கு வந்த போது, விடுமுறைக்காக பிரான்சில் இருந்து ஊருக்கு வந்திருந்த அப்பா பார்த்துவிட்டு, ஆசைப்பட்டுக் கேட்டு, திருமணம் செய்து கொண்டதாகவும் அது அப்பாவின் உறவுகளுக்கு துளியும் விருப்பமில்லை என்றும் அதனால், பதிவுத் திருமணம் செய்து அப்பா, தனது நண்பர் ஒருவர் வீட்டில் அம்மாவைத் தங்கவைத்து, மூன்று மாதத்தில் பிரான்சுக்கு எடுத்து விட்டதாக அப்பாவே சொல்லியிருக்கிறார்.
தம்பி பிறந்த சில காலம் வரை, அப்பா அம்மாவிற்குள் நிறைய அன்பிருந்தது, ஆனால், அவள் மேற்படிப்பிற்காக வேறு இடம் சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்த போது, அப்பா அம்மாவிற்கு இடையில் பேச்சுவார்த்தை குறைந்திருந்தது, எப்போதும் புன்னகை மிளிரும் அம்மாவின் முகத்தில் அளவில்லாத சோகம் அப்பிக்கிடந்தது.
அப்பா மிக இறுக்கமாக உலா வந்தார். சின்னவனான தம்பிக்கு எதுவும் புரியவில்லை.
.
'அம்மா....'நான் அழைக்க நினைத்ததும், ஏதோ சிந்தனையில் இருந்து விடுபட்ட அம்மா, ' என்னடா சமர்?' என்றார்.
இதுதான்....அம்மாவின் தனித்தன்மையே இதுதான்...
என்ன யோசனையாக இருந்தாலும் நானோ, தம்பியோ, அப்பாவோ எதாவது, கேட்க நினைத்தாலே உடனே உணர்ந்து விடுவார்.
'சாப்பாடு போதுமா?' என்றேன் மெல்ல..
'போதும் கண்ணம்மா...வா...' என்ற படி எழுந்து கொண்ட அம்மா, 'மச்சாள், சாப்பாடு நல்ல சுவை' என்று பாராட்டவும் தவறவில்லை.
அத்தையின் முகத்தில் அப்படி ஒரு பிரகாசம்.
அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த அப்பா, பூரிப்பில் புன்னகைத்தார்.
எல்லோரும் சாப்பிட்டு முடித்ததும், 'நாங்கள் ஒருக்கா தேவாலயத்திற்குப் போட்டுவாறம்' என்று கூறிய அப்பா, கார் ஒன்றை ஏற்பாடு செய்து எங்களையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டார்.
கார்ப்பயணத்தில் அம்மா, மனம் கலங்கி, முகம் வெளிற அமர்ந்திருந்ததைப் பார்த்ததும் எனக்குள் ஆயிரம் யோசனைகள்...
மாமாவும் எங்களுடன் வந்ததால் அம்மாவிடம் எதையும் கேட்க முடியவில்லை, அமைதியாக இருந்தேன்,
அப்பா, முன் இருக்கையில் இருந்ததால் என்னால் அவரிடமும் கதைக்க முடியவில்லை, தம்பியுடன் மாமா ஏதேதோ கதைத்தபடி வந்தார்.
எங்கள் மூவருக்கும் மௌனத்துள் நகர்ந்தது அந்தப் பயணம்...
மிகப்பெரிய தேவாலய வாசலில் வாகனம் நின்றது. எல்லோரும் இறங்கி விட, அம்மா மட்டும் வரவில்லை,
'வாங்கோ அம்மா..' நான் அழைக்க, 'நீ போடாம்மா..
நான் கூட்டி வாறன்,' அப்பா சொல்ல, மெல்ல நடந்தேன்,
'அப்பா அம்மாவிற்குள் எல்லாம் சரியாகிவிட வேண்டும்' மனதார பிரார்த்தித்துக் கொண்டேன். தூரத்தில் தெரிந்த சவுக்கு காட்டைப் பார்ப்பதற்கு தம்பி ஆசைப்பட்டான்.
நானும் அவர்களுடன் கூட நடந்தேன். ' நாங்கள் இருக்கிறோம், நீங்கள் போட்டு வாங்கோ' என்றார் அப்பா.
சுற்றிலும் பார்த்தபடி நடந்த நான், மனக்கனதியும் பயண அலுப்பும் சோர்வைத்தர, திரும்பி வந்து, பிரமாண்டமான அந்தத் தூணின் ஒரு பக்கமாக அமர்ந்துவிட்டேன். அப்பாவும் அம்மாவும் எதிர்ப்பக்கமாக இருந்து கதைப்பார்கள் என நான் நினைக்கவே இல்லை,
'மீரு...எங்கட கலியாணம் நடந்தது இப்ப மாதிரி இருக்கு... , நான் செய்த ஒரு தவறுக்கு எவ்வளவு காலத்துக்குத் தான் தண்டனை தருவாய், மூண்டு வருசமாய் போட்டுது நீ என்னோடை , அன்பா, மனம் விட்டுக் கதைச்சு, நாங்கள் கலியாணம் செய்த இந்த இடத்தில வைச்சு உன்னட்டை மன்னிப்புக் கேட்கிறன், ஏதோ ஒரு சந்தர்ப்பத்திலை, எனக்கும் வானதிக்கும் தொடர்பு ஏற்பட்டுப்போட்டுது, ஆனால், ஒரு வருசத்திலையே அந்தத் தொடர்பு இல்லாமல் போட்டுது, உன்னட்டைச் சொல்லி மன்னிப்பு கேட்க நினைச்சாலும், வறட்டுக் கௌரவம் விடேல்லை,'
'அப்பாவா இவ்வளவு மென்மையாகப் பேசுவது, ' வேரோடிப் போனது போல அமர்ந்திருந்தேன்.
எதிர்பாராத விதமாக பெற்றவர்களின் பேச்சைக் கேட்க நேர்ந்தது நல்லதோ, கெட்டதோ என்பது புரியாமல் இருந்தது.
'அம்மாவும் இதேபோல்தான் இருப்பார்' என்று நினைத்துவிட்டு, இனிமேல் எழுந்து போவது சரியில்லை என்பதால் அப்படியே இருந்துவிட்டேன்.
அம்மா விம்மியழுவது கேட்டது, ' அநாதையாக இருந்த என்னை அரவணைச்சு, அன்பு காட்டி வாழ்க்கை தந்தது நீங்கள் தான், அந்த நன்றி எனக்கு எப்போதும் இருக்கும், உங்களுக்காக நான் உயிரையும் தருவன், ஆனால் நீங்கள் பறிச்சது என்னுடைய கௌரவத்தை, அதை என்னாலை தாங்கவே முடியேல்லை.. எனக்கென்று யாரிருக்கிறது, நீங்கள் மட்டும் தானே, நீங்களே இப்படிச் செய்தால்..'
'ஏதாவது துன்பம் என்றால் கடவுளிட்டை மன்றாடலாம், அந்தக் கடவுளே கைவிட்டால்...
என்னை அப்படிச் சொல்லாதை மீரு...நான் நல்லவனே இல்லை..துரோகி...உன்னை வேதனைப்படவைச்ச துரோகி...
அப்பா தலையில் அடித்துக் கதறுவது புரிந்தது,
"வேண்டாம்...
அழாதேங்கோ....நடந்ததை ஒரு கனவாக நினைச்சு மறந்துவிடுவம்.. "
அம்மா துடிப்பதும் , அப்பா தேற்றுவதுமாக நிமிடங்கள் கரைந்தன.
அம்மாவுக்கு, அப்பாவிற்கு இடையில் பழைய அன்பு மீண்டிருந்தது...
'சரி...வாங்கோ ..உள்ள போய் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்து விட்டு வருவம், ' அம்மா சொல்ல அப்பாவும் கூடவே எழுந்து நடப்பது தெரிந்தது. மன நிறைவோடு பெருமூச்சு விட்டேன்.
மதியம் நாங்கள் வீடு திரும்பிய போது, சுதாகரி அத்தையின் மகள் , பாமதி அக்கா வீட்டிற்கு வந்திருந்தா.
அத்தை தான், நாங்கள் வந்திருப்பதாகச் சொல்லி வரவைத்திருக்க வேண்டும்.
வீட்டிற்கு வந்ததில் பிரியமில்லாத மாதிரி இருந்தது பாமதி அக்காவின் தோற்றம்.
உளவியலை ஒரு பாடமாகக் கற்றுக் கொண்ட எனக்கு மற்றவர்களின் மன நிலையைக் கணிப்பது இலகுவான ஒன்று.
அன்று, மதியம், மாமரத்திற்கு கீழே பாய் விரித்து அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டோம்.
எல்லாம் அம்மாவின் ஏற்பாடு தான்.
அம்மாவின் முகத்தில் இருந்த பூரிப்பும் நாணமும் அப்பாவைப் பார்த்துப் பார்த்துக் கவனித்துக்கொண்ட விதமும் அம்மாவைப் புது மனுஷியாய்க் காட்டியது...
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA.
கருத்துகள் இல்லை