கதை சொல்லும் கவி..!!


இருள் கவிந்து

மேகம் மூடிக்கொண்ட

ஒரு முன் மாலைப்பொழுது

அது... 


இடுப்பில் ஒன்றும் 

கையில் ஒன்றுமாக

பிள்ளைகளைப் பிடித்தபடி

பேருந்துக்காக காத்திருந்தேன். 


எங்கோ வெறித்தபடி இருந்த

விழிச்சுனைகள் 

நகர்ந்து கடந்த  அந்த மனிதனைக் கண்டதும்  

ஒரு நொடி வியப்பில் விரிந்து மடிந்தன. 


கடகடவென நடந்த கால்கள்

மெல்லத் தாமதிப்பதை

கவிழ்ந்து கிடந்த என்

கண்கள் கண்டுகொண்டன. 


பார்க்கவா ? வேண்டாமா?

என்ற 

பரிதவிப்பில்

நிமிராது நின்று கொண்டிருந்தேன். 


நெருங்கி வந்த அந்தக் கால்தடங்களின் ஒலி

இதயத்தில் 

இரும்புக் குண்டொன்றை

ஏற்றிவைத்தது. 


காணும் போதெல்லாம் 

என் மனதிற்குள்

பட்டாம்பூச்சிகளைப் 

பறக்கவைத்தவன். 


கதைக்கும் போதெல்லாம் 

என் 

கன்னக்கதுப்புகளை

சிவப்பாக்கியவன் 


பல நேரங்களில் 

என் மௌனங்களை

மொழிபெயர்த்து

புன்னகைத்துப்

பதில் தந்தவன். 


வாலிபத்தின் 

வசந்தங்களுக்கு

முழு முகவரி தந்தவன்

அவன்தான். 


அப்பா மீதான பயம், 

அம்மாவின் மிரட்டல்,

இவை எல்லாம் 

மனதிற்குள் புதைத்தது

முளைவிட்ட நேசத்தை

அன்று. 


யாரோவாகிப் போனவனை

இன்று அருகில் கண்ட போது 

என் நரம்புகளில் உருண்டது,

அச்சமா? அவஸ்தையா? 


என் பெயரை உச்சரிக்க 

ஆரம்பித்து 

அப்படியே விட்டுவிட்டு

வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தவன், 


பிள்ளைகள் இருவரையும் 

ஆழமாகப் பார்த்தபடி,

"பெயரென்ன ?"

மகனிடம் கேட்டான்.   


"ஆதவன்...."

அவன் சொல்ல,  

ஆச்சரியமாகப் பார்த்தான் 

என்னை... 


தொட்டுவிடாமலும்

பட்டுவிடாமலும் நாம்

பேசிக்கொண்ட பொழுதுகளில்

எம் குழந்தைக்கு 

அவன் இட்ட பெயர் அது... 


கதறித்துடித்து

ஓலமிட்ட என் உணர்வுகள்

எனக்குள்ளேயே  

மடங்கிச் சரிந்தது. 


ஒரு வேளை......

அன்று துணிந்திருந்தால்

அன்றாடம்

அம்பு பட்டுத் துடிக்கும் 

அவல நிலை இருந்திருக்காதோ .... 


அடுத்தவர் 

உண்பதையும் உடுப்பதையும்

ஏக்கத்தோடு பார்க்கும் 

துரதிஸ்டம் நேர்ந்திருக்காதோ... 


இரட்டைச் சுமையால்  

தவித்தபோதும்

என்னையே ஏவாமல்

ஒன்றை அவன் தாங்கியிருப்பானோ... 


நொடிக்குள்

நூறு எண்ணங்கள் 

என்னைச் சுற்றி 

வட்டமிட... 


என் பரதேசிக்கோலம்

அவன் விழிகளுக்குள்

நீரை நிறைத்ததை 

என் மனம் உணர்ந்து கொண்டது. 


அவமானத்தால் நான்

கூனிக்குறுகி நிற்க , 

தன் கழுத்திலிருந்த 

கனமான சங்கிலியை

உருவிக் கழற்றி 


என்  மகனின் கழுத்தில்

அணிவித்தபடியே...

"விற்றுவிட்டு,

விரும்பியதை 

வாங்கிச்.சாப்பிடுங்கள்..."

என்றபடி பெருமூச்சோடு 

நடக்க ஆயத்தமானான். 


விலுக்கென்று

நிமிர்ந்து பார்த்தேன். 

சிறு தலை அசைப்புடன்

விறுவிறுவெனப் போய்விட்டான். 


காரணமே தெரியாமல் 

கண்களில் இருந்து 

உருண்டு கொண்டிருந்தன

நீர் முத்துக்கள்.. 


உள்ளங்கையில் இருந்த சங்கிலியின் சூடு, 

இதமாய் பரவிக்கொண்டிருந்தது

என் நரம்புகளில்... 


"முட்டிமோதாமல்

வாழ்க்கை இல்லை "

எப்போதும் 

அவன் சொல்லும் வார்த்தைகள் 

இப்போதும் காதில் ஒலிக்க, 

பெருமூச்சோடு பேருந்தில் ஏறிக்கொண்டேன்

பிள்ளைகளுடன்......


கோபிகை.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.