கொழும்பு, புனித அன்னாள் மகளிர் கல்லூரிக்கு 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை!📸
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத் திட்டத்தின் 91 ஆவது கட்டமாக, மத்திய கொழும்பு, புனித அன்னாள் மகளிர் கல்லூரிக்கு 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (09) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் பங்கேற்புடன் இடம்பெற்றது.
இந்நிகழ்வில், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் வட கொழும்பு தேர்தல் தொகுதி அமைப்பாளர் ராம் உள்ளிட்ட பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ,
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவோம் என்ற போர்வையில் தற்போதைய ஜனாதிபதி மக்களின் ஆணையையும் வாக்குரிமையையும் இல்லாதொழிக்க முற்பட்டால் அதற்கு இடமளிக்க மாட்டோம்.
ஜனாதிபதித் தேர்தலை உடனடியாக நடத்தி அந்த ஆணையுடன் நிறைவேற்று ஜனாதிபதி அதிகாரங்கள் திருத்தப்பட வேண்டும்.
ஜனாதிபதியின் அரசியல் குண்டுகளுக்கு நாம் சிக்க மாட்டோம்.
கடந்த காலத்திலும் இன்றும் பல்வேறு சந்தர்ப்பங்களில் குடிமக்களின் ஜனநாயக உரிமைகள், சுதந்திரம், அரசியல் செய்யும் உரிமை என்பனவற்றை புறக்கணிக்கும் மற்றும் அபகரிக்கும் பிரதான ஆயுதமாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்கள் செயற்பட்டுள்ளன.ஐக்கிய மக்கள் சக்தி ஒரு கட்சி என்ற வகையில் கொள்கை ரீதியாக நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை திருத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
சில வருடங்களுக்கு முன், தனி நபர் பிரேரணையாக,ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர்,அரசியலமைப்பு திருத்தம் ஊடாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை திருத்துவதற்கான விரிவான வேலைத்திட்டத்தை ஆரம்பித்தார். கட்சி இன்னும் அதே கொள்கையை கடைபிடிக்கிறது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவோம் என்ற போர்வையில் தற்போதைய ஜனாதிபதி மக்களின் ஆணையையும் வாக்குரிமையையும் இல்லாதொழிக்க முற்பட்டால் அதற்கு இடமளிக்க மாட்டோம். 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்கள் கண்டிப்பாக நடைபெற வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
தற்போதைய ஜனாதிபதிக்கு ஜனாதிபதி தேர்தலை நடத்துவது அவசியமில்லை. தற்போது நடைமுறையில் உள்ள முறைமையை மாற்றி நிறைவேற்று ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்கப்படும் என கூறி, பல்வேறு தரப்பினருக்கு சலுகைகளை, வரப்பிரசாதங்களை வழங்கி, ஜனாதிபதியின் சொந்த நிகழ்ச்சி நிரல்களை முன்கொண்டு செல்ல சந்தர்ப்பம் வழங்கி, தமது அரசியல் பொம்மைகள் ஊடாக ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு தடையை ஏற்படுத்தினால் ஐக்கிய மக்கள் சக்தி அதற்கு இடமளிக்காது.
2024 இல் ஜனாதிபதி தேர்தலை நடத்தி, அந்த ஆணையுடன் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையில் தெளிவான மாற்றத்தை ஏற்படுத்தி, உன்னத ஜனநாயக அரசியல் சுதந்திரத்துடன் கூடிய புதிய முறைமைக்குள் பிரவேசிக்க முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஜனாதிபதியின் அரசியல் குண்டுகளுக்குள் நாம் சிக்க மாட்டோம்.
ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் வருடமொன்றில், ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படும், திருத்தம் செய்யப்படும் என்று கூறி தமது அரசியல் வாழ்வை நீட்டிக்க முயலும் ஜனாதிபதியின் அரசியல் குண்டுகளுக்கு ஐக்கிய மக்கள் சக்தி சிக்கும் என யாராவது நினைத்தால்,அது பிழையான கற்பனை.இவ்வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டும். மக்கள் ஆணைக்கு பயந்த சில தரப்பினர் மனதில் கொண்டுள்ள விடயங்களை நிறைவேற்ற இடமளிக்க மாட்டோம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியை பின்பற்றி அரசாங்கமும் ஸ்மார்ட் கல்வியை மேம்படுத்துவது சிறந்த விடயம்.
அரசாங்கம, அதிக அளவில் ஸ்மார்ட் வகுப்பறைகளை ஆரம்பிக்கும் என கல்வி அமைச்சர் அறிவித்தது மகிழ்ச்சியான செய்தி. ஐக்கிய மக்கள் சக்தியை பின்பற்றி அரசாங்கமும் இத்தகைய திட்டத்தில் இணைந்தது மகிழ்ச்சியளிக்கிறது. அனைவரும் இணைந்து இந்நாட்டில் ஸ்மார்ட் கல்வியை கட்டியெழுப்ப ஒன்றாய் இணையுமாறும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு கோரிக்கை விடுத்தார்.
கருத்துகள் இல்லை