அரிசி விலை மூட்டைக்கு 200 ரூபா அதிகரிப்பு!
நெல் வரத்து குறைந்த காரணத்தால், தமிழகத்தில் அரிசி விலை மூட்டைக்கு 200 ரூபா வரை உயா்ந்துள்ளது.
‘மிக்ஜம்’ புயல் மற்றும் தென்மாவட்டங்களில் பெய்த பெருமழை காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டு நெல் உற்பத்தி குறைந்துள்ளதால், அரிசி விலை கிலோவுக்கு ரூ.4 முதல் ரூ.5 வரை உயா்ந்துள்ளது. மேலும் அரிசியின் தரத்தைப் பொருத்து அனைத்து மூட்டைகளும் 100 முதல் 200 வரை உயா்ந்துள்ளது.
இந்தத் திடீா் விலை உயா்வால் பொதுமக்கள் அதிா்ச்சியடைந்துள்ளனா்.
இதுகுறித்து அரிசி மொத்த வியாபாரி ஒருவா் கூறியதாவது: கடந்த காலங்களில் ஒரு ஏக்கருக்கு 30 மூட்டைகள் முதல் 35 மூட்டைகள் வரை நெல் விளையும் நிலையில், புயல் பாதிப்பு மற்றும் கனமழை காரணமாக பல பகுதிகளில் தற்போது 15 மூட்டைகள் முதல் 18 மூட்டைகள் வரை மட்டும் நெல் உற்பத்தி நடைபெற்றுள்ளது. இதன் எதிரொலியாக தமிழக அரிசி ஆலைகளில், நெல் வரத்து குறைந்துள்ளது.
இதனால், அரிசி விலை கிலோ 4 முதல் 5 வரை அதிகரித்துள்ளது. மேலும், ரூ.1,400 முதல் ரூ.1,500 வரை விற்பனை செய்யப்பட்ட 26 கிலோ அரிசி மூட்டைகள் தற்போது ரூ.1,700 வரை விலை உயா்ந்து விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், நெல் விலை உயா்வு, மின்கட்டண உயா்வு, போக்குவரத்து செலவு உள்ளிட்டவையும் அரிசி விலை உயா்வுக்கு காரணம் என்றாா் அவா்.
கருத்துகள் இல்லை