கவனயீர்ப்பு போராட்டம்!


நானுஓயா கிரிமிட்டி 476/A கிராம சேவகர் பிரிவில் கடமையாற்றும் சமுர்த்தி உத்தியோகத்தரை இடமாற்றம் செய்யுமாறு வலியுறுத்தி நுவரெலியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிரிமிட்டி 476/A கிராம சேவகர் பிரிவினர் ஒன்றிணைந்து நானுஓயா டெஸ்போட் ஸ்ரீ முத்துமாரி ஆலயத்துக்கு முன்பாக இன்று(25) காலை 10 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

இப்பகுதியில் கடமையாற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர் ஊழல் செய்வதாகவும், நேர்மையாக செயற்படவில்லை என்றும் குறிப்பாக ஒரு சிலருக்கு மாத்திரம் அனைத்து சலுகைகளையும் வழங்குவதாகவும், அதிலும் சமுர்த்தி உத்தியோகத்தரின் உறவினர்களுக்கு அந்த சலுகைகள் அளிக்கப்படுவதாகவும் தெரிவித்து இப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். 

அத்துடன், தேவையுடைய மாற்றுத்திறனாளிகள், விதவைகள், சிறுநீரக நோயாளிகள் உட்பட பலர் இப்பிரதேசங்களில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு எவ்விதமான சமுர்த்தி உதவியும் கிடைப்பதில்லை எனவும் இதன்போது போராட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டினர்.

‘நூற்றுக்கணக்கான பொது மக்கள் ஒன்று திரண்டு அரசாங்கத்தால் கிடைக்கும் உதவிகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்’, ‘நேர்மையாக செயற்படும் அதிகாரிகள் இன்றி மன உளைச்சலை ஏற்படுத்தாதே’, ‘உங்களின் சுயநலன்களுக்காக பொது மக்களிடம் விளையாடாதே’, ‘அதிகாரிகளின் தேவைக்காக பொதுமக்களை அசௌகரியங்களுக்கு உள்ளாக்காதே’, ‘சுயநலத்துடன் செயல்பட்டு பொது மக்களின் மனங்களை நோகடிக்காதே’ போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தி இப் போராட்டத்தில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.