சிறுமியை கடத்திய குற்றச்சாட்டில் கைது!
மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவில் 15 வயது சிறுமியை கடத்திச் சென்ற 18 வயது இளைஞன் அவரது சிறிய தாயார் உட்பட இருவரை நேற்று சனிக்கிழமை(24) இரவு வாகரையில் வைத்து கைது செய்துள்ளதுடன் சிறுமியை மீட்டு வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாக கொக்குவில் பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த பொலிஸ் பிரிவிலுள்ள சிறுமி கடந்த 7ம் திகதி பாடாலைக்கு சென்ற நிலையில் அவர் வீடு திரும்பாததையடுத்து அவரது உறவினர்கள் பொலிசாரிடம் முறைப்பாடு செய்தனர்.
இந்த நிலையில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.கே.யூ.பி. விமலரத்தினவின் வழிகாட்டலில் பெரும் குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பி.சசீந்திரன் தலைமையிலான சிவகுமார், பெண்பொலிசாரான அனங்சியா, ராதிகா உட்பட்ட பொலிஸ் குழுவினர் விசாரணையை மேற்கொண்டனர்.
இதன் போது குறித்த சிறுமியை அவரது காதலன் வாகரைப் பிரதேசத்திலுள்ள அவனது சிறிய தாயாரின் வீட்டிற்கு கடத்திச் சென்று வைத்துள்ளதாக கண்டறிந்த பொலிசார் சம்பவதினமான நேற்று(24) இரவு வாகரையில் சிறுமி தங்கவைக்கப்பட்ட வீட்டை சுற்றுவளைத்து முற்றுகையிட்டு சிறுமியை மீட்டதுடன் கடத்திய குற்றச்சாட்டின் பேரில் 18 காதலன் மற்றும் சிறுமிக்கு இடம்கொடுத்த குற்றச்சாட்டில் 47 வயதுடைய சிறிய தாயார் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
இதில் மீட்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் கைது செய்யப்பட்ட இருவரையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை(25) ஆஜர்படுத்தப்பட்ட போது அவர்களை எதிர்வரும் 07 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டார்.
கருத்துகள் இல்லை