காதலனையும் கழுத்தை அறுத்து கொலை செய்த தம்பி!


 இந்தியாவின், தமிழ்நாடு - மதுரையில் திருமணம் மீறிய உறவு வைத்திருந்ததாக தனது அக்காவையும், அவருடைய ஆண் நண்பரையும் தம்பியே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கூடக்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் நந்திபெருமாள். இவருடைய மகன் சதீஷ்குமார்(28). கம்பி கட்டும் வேலை பார்த்து வந்த இவர், அதே ஊரைச் சேர்ந்த அழகு மலை என்பவரது மகள் மகாலட்சுமி என்பவரைக் காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


இந்தநிலையில், மகாலட்சுமிக்குக் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. திருமணம் முடிந்த ஒரு வாரத்தில் மகாலட்சுமி கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் சதீஷ்குமார், மகாலட்சுமி இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி தங்களது நட்பை வளர்த்து வந்துள்ளனர். இதனைத் தெரிந்து கொண்ட மகாலட்சுமியின் தம்பி பிரவீன்குமார்(20) இருவரையும் அடிக்கடி கண்டித்து வந்துள்ளார்.


இதனையடுத்து, நேற்று வழக்கம் போல இரவு வேலை முடித்துவிட்டு தன்னுடைய வீட்டிற்கு சதீஷ்குமார் வந்து கொண்டிருந்தார். வரும் வழியில், மகாலட்சுமியின் தம்பி பிரவீன்குமார், சதீஷ்குமாரின் கண்ணில் மிளகாய்ப் பொடியைத் தூவி அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார். இதில் தலையை மட்டும் தனியாகத் துண்டித்து அந்த பகுதியில் உள்ள நாடக மேடையில் வைத்துள்ளார். மேலும் ஆத்திரம் தீராத பிரவீன்குமார் நேராக வீட்டிற்குச் சென்று, அங்கிருந்த அக்கா மகாலட்சுமி கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பிரவீன்குமார் தாய் தடுத்துள்ளார். அவரையும் அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.


இச்சம்பவம் தொடர்பாக உயிரிழந்த, சதீஷ்குமார் அண்ணன் முத்துக்குமார் முறைப்பாடு அளித்துள்ளார். முறைப்பாட்டின் பேரில் வழக்குப் பதிவு செய்த பொலிசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, இருவரின் உடலையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


இதனையடுத்து தப்பிச் சென்ற பிரவீன்குமாரைப் பிடிக்க 2 தனிப்படைகள் அமைத்து பொலிசார் தேடி வந்த நிலையில், இன்று பிரவீன்குமாரை பொலிசார் கைது செய்தனர்.


கொலை செய்யப்பட்ட இருவரும் வெவ்வேறு   சமூகம் என்பதால் பாதுகாப்பு கருதி, அப்பகுதி முழுவதும் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.