இப்போதும் பூக்கிறதா இந்தப் பூ? - அரோஸ்_சிவ_தயாழ்!!

 


பார்வையிலே பறிபோன காதலரின் முதல்…

சந்திப் பூ 🥀 


அறிவித்துக் கொள்ளாமலே 

அணிந்து கொள்ளும் ஒரே நிற ஆடையைக் காண…

ஆர்ப்பரிப் பூ 🥀


அவள் வீட்டை  நீங்கும் நேரம் 

எதுவென்று அறியாமலே ரோட்டிலே நீளும்… 

காத்திருப் பூ 🥀


இன்று வந்தாளா இல்லையா என 

கொட்டில் பெஞ்சை எட்டிப்பார்க்கும்… 

தவிப் பூ 🥀


அவளுக்கான இடம் வெறுமைப் படக்கண்டு 

என்ன ஆனதோ எனும்…

துடிப் பூ 🥀


வீட்டு மதில் எட்டிப்பார்த்து 

அவள் நடமாட்டம்  காண்பதற்காய் எத்தனை பெடில்… 

மிதிப் பூ 🥀


காகிதத்தில் காதலை நிரப்பி 

நேரில் கொடுக்க துணிவு இன்றி தோழியை அனுப்பி… 

வைப் பூ 🥀


பதில் வருமா பதிலாய் அவள் அப்பா வருவாரா எனும்…  

படபடப் பூ 🥀


பதில் மடல் வந்து விட்டால் பாதி உலகை வென்றுவிட்டதாய் துள்ளிக்… 

குதிப் பூ 🥀


முதல் முதலாய் நேரில் சந்திக்க யாருமில்லா சாலையொன்றை…

தத்தெடுப் பூ🥀


முதல் முறை பேச்சில் என்னவெல்லாம் 

என  எண்ணி எண்ணிக் கழித்த இரவின் 

கதகதப் பூ🥀


அருகில் காணும் அடுத்த நொடியே மனனம் பண்ணியதெல்லாம் மறந்து உளறுகையில் வரும்…

நெளிப் பூ🥀


பக்கம் வந்தமர நேர்ந்தாலே அந்தரத்தில் அவன் கால்களின்…

மிதப் பூ 🥀


சிறு தொடுகையுணர்ந்தாலே அவன் ஆயுள் வரை நீளும் அந்த முதல்…

நினைப் பூ🥀


சேர்த்து வைத்த காசெடுத்து பார்த்துப் பார்த்து அவளுக்காய் ஒரு 

பரிசளிப் பூ🥀


அன்று நாள் நடந்ததெல்லாம் நினைத்து தலையணையோடு பரிமாறும் 

சிரிப் பூ🥀


அவள் கை பட்டு நீங்கிய 

அத்தனையையும் தேடித் தேடி

சேகரிப் பூ🥀


அவள் மெய் பட்டுப் பறந்த 

பட்டாம் பூச்சியை தொட்டு விட வரும் 

பூரிப் பூ🥀


இப்படி எத்தனை அழகிய பூ 

அந்த கால காதல் செடியில் பூக்கும் 

காதல்ப் பூ🥀


பின் நாள்… 


அழைப் பூ  எடுக்கும் 

இணைப் பூ வர 


தலை கீழாய் மாறியது எங்கள் காலக் 

காதலெனும் அழகிய பூ 🥀


பட்டன் அழைபேசி வருகையின் பின் 

பட் பட் என வந்து விழும் 

பதிப் பூ 🥀


அதிலிருந்தே தொடங்கியது இதன் 

பாதிப் பூ 🥀


அடுத்த கட்டம் நகர 

நகர வாழ்க்கை உயர 


அது போல் இல்லாமல் போனது 

ஈர்ப் பூ 🥀


இன்னும் இன்னுமாய் 

இழந்தது இதன் சிறப் பூ 🥀


கடந்த பின் தான் தெரிகிறது 

பழைய காலத்தின் மதிப் பூ 🥀


காதல் காதலாய் இருப்பதுதானே 

இவ்வுலகின் வியப் பூ 🥀


✍️ #அரோஸ்_சிவ_தயாழ் 🥀

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.