இலங்கை அணியில் தசுனுக்கு இடமில்லை!

 


எதிர்வரும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடருக்கு 16 பேர் கொண்ட இலங்கை குழாத்தை இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு அறிவித்துள்ளது.


இதில் முன்னாள் அணித் தலைவர் தசுன் ஷானக்கவுக்கு ஒய்வு அளிக்கப்பட்டிருப்பதோடு, அண்மையில் நடந்த சிம்பாப்வேயுக்கு எதிரான இலங்கை குழாத்தில் இடம்பெறாத சகலதுறை வீரர் சாமிக்க கருணாரத்ன இணைக்கப்பட்டிருப்பதாக தெரியவருகிறது.


தசுன் நீக்கப்பட்டு சாமிக்க அணிக்கு திரும்பியது தவிர்த்து, அண்மையில் முடிந்த சிம்பாப்வேயுக்கு எதிரான தொடரில் இடம்பெற்ற இலங்கைக் குழாத்தில் பெரிதாக மாற்றங்கள் செய்யப்படவில்லை.


ஆப்கானுக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் வெற்றியீட்டிய இலங்கை அணி அந்த அணிக்கு எதிராக எதிர்வரும் 9, 11 மற்றும் 14 ஆம் திகதிகளில் ஒருநாள் போட்டிகளில் ஆடவுள்ளது. இந்த அனைத்து போட்டிகளும் பகல் ஆட்டங்களாக பல்லேகலவில் நடைபெறவுள்ளது.


இலங்கை ஒருநாள் மற்றும் டி20 தலைமை பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட ஷானக்க, அணியில் தனது இடத்தை தக்கவைக்க போராடி வருகிறார். துடுப்பாட்டத்தில் சோபிக்கத் தவறிவரும் அவர், குறிப்பாக ஒருநாள் போட்டிகளில் தடுமாறி வருகிறார். அவர் அண்மையில் முடிந்த சிம்பாப்வேயுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அணியில் இடம்பெற்றபோதும் சோபிக்கத் தவறியதால் மூன்றாவது ஒருநாள் போட்டியில் இருந்து நீக்கப்பட்டார்.


இந்நிலையில் ஷானக்கவுக்கு பதிலாகவே கருணாரத்ன அணியில் இடம்பெற்றுள்ளார். முன்னதாக கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டியிலும் உபாதைக்கு உள்ளான ஷானக்கவுக்கு பதில் கருணாரத்ன அணியில் சேர்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


சிம்பாப்வே தொடரில் இடம்பெற்ற சுழற்பந்து வீச்சாளர் ஜெப்ரி வன்டர்சே கைவிரல் காயம் காரணமாக ஆப்கானுக்கு எதிரான தொடரில் இடம்பெறத் தவறியுள்ளார். அவருக்கு பதில் பதினொருவர் அணியில் வனிந்து ஹசரங்க இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தேர்வு செய்யப்பட்டிருக்கும் இலங்கை ஒருநாள் குழாம் ஒப்புதலுக்காக விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவுக்கு இலங்கை கிரிக்கெட் சபை அனுப்பியுள்ளது.


இதேநேரம், இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு 15 பேர் கொண்ட குழாத்தை ஆப்கான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. இதில் சத்திர சிகிச்சைக்குப் பின்னர் மீண்டு வரும் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் இடம்பெறாத நிலையில், அந்த இடைவெளியை நிரப்புவதற்கு இளம் சுழற்பந்து வீச்சாளர் கைஸ் அஹமது சேர்க்கப்பட்டுள்ளார்.


இலங்கை உத்தேச குழாம்: குசல் மெண்டிஸ் (தலைவர்), சரித் அசலங்க, பத்தும் நிசங்க, அவிஷ்க பெர்னாண்டோ, சதீர சமரவிக்ரம, ஷெவோன் டானியல், ஜனித் லியனகே, சஹன் ஆரச்சிகே, வனிந்து ஹசரங்க, சாமிக்க கருணாரத்ன, துனித் வெள்ளாலகே, மஹீஷ் தீக்ஷய, அகில தனஞ்சய, துஷ்மன்த சமீர, டில்ஷான் மதுஷங்க, பிரமோத் மதுஷான்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.