தண்ணீர் செல்ல தடை போடாதீர்..!!


கோவை மாவட்டத்தில் உற்பத்தியாகி பயணிக்க கூடிய நொய்யல் ஆற்றின் வழித்தடத்தில் உள்ள வெள்ளலூர் குளத்துக்கு தண்ணீர் செல்லும் வெள்ளலூர் ராஜவாய்க்காலில், குறிச்சி பகுதி நகராட்சியாக இருந்த பொழுது பொதுப்பணித்துறை வழிகாட்டுதல்கள் இல்லாமல் வாய்காலுக்கு குறுக்கே 2-3 பாலங்கள், வாய்க்காலின் கீழ்தளதிற்கு மேலாக பாலங்கள், கல்வெட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் மழைக்காலத்தில் நீர் வரும் போது குப்பைகள் அக்கல்வெட்டுகளில் அடைப்பட்டு தண்ணீர் செல்வது தடையாகி வருடா வருடம் தூர்வார வேண்டியுள்ளது.


 இக்கல்வெட்டுகளை சீரமைக்க கோரி மாநகராட்சி மற்றும் பொதுப்பணித்துறைக்கு பலமுறை நம் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு மூலம் கடிதம் அனுப்பி உள்ளோம். பருவநிலை மாற்றத்தினால் மழைக்காலங்களில் குறைந்த நாட்களில் அதிகப்படியான மழை பொழிவதால், வாய்க்கால்கள் தூர்வாரி இருந்தால் மட்டுமே குளங்களுக்கு முழுமையான நீரை கொண்டு சேர்க்க முடியும்.


இதனிடையே குறிச்சி பிரிவு இட்டேரி அருகே உள்ள வெள்ளலூர் ராஜவாய்க்கால் இடதுபுற கரையை ஒட்டி கோவை மாநகராட்சி சார்பாக வேலிகள் அமைத்து, அதில் நடை மேடை அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் மழை காலங்களுக்கு முன் வாய்க்காலை தூர்வாருவதற்கு இடையூராகவும், தூர்வாரிய பின் தூர்வாரிய கழிவுகளை கடத்துவதற்கு இடையூறாகவும்  இருக்கும். 


மேலும் மழைக்காலங்களில் வாய்க்காலில் தண்ணீர் செல்லும் போது இப்பகுதியில் தண்ணீர் செல்லாமல் அடைப்பட்டால் தூர்வாருவதும் சிரமமே. எனவே இப்பகுதியில் தடுப்பு இட்டு நடைபாதையோ, பூங்காவோ அமைக்கப்படும் என்றால், வாய்க்காலை தூர்வார இடையூறு இல்லாமல் அமைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.


மேலும் வெள்ளலூர் ராஜவாய்க்காலின் கரையில் கட்டப்பட்டு வரும் நடைபாதைக்கு 200-300மீ அருகே குறிச்சி குளத்தின் நடைபாதை அமைந்துள்ளது.  இந்நிலையில் மாநகராட்சி நிர்வாகம் அங்கு உள்ள பூங்கா மற்றும் நடைபாதையை சரிவர பராமரிக்காமல் அருகிலேயே வெள்ளலூர் ராஜவாய்க்கால் கரையில் நடைபாதை அமைப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது.


- கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.