கைதடியில் அமைந்துள்ள பனை ஆராய்ச்சி நிலையம் !!

 


வடக்கில் காணப்படுகிற இயற்கை வளங்களில் பாடான்திணை வீரர்களென நிமிர்ந்து நிற்கிற பனைமரங்கள் இந்த நிலத்தின் அடையாளமாகத் திகழ்வது மட்டுமன்றி இங்கு வாழ்ந்துவருகிற மக்களின் வாழ்வியல் கூறுகளோடு நெருக்கமான பிணைப்பினை கொண்டுள்ளன. பனைக்கும் அது வளருகிற நிலத்திற்கும் இடையிலான பிணைப்பானது பெளதீக, சமூக மற்றும் பொருளாதார வாழ்வியலில் முக்கியமான இடத்தை வகிக்கிறது. வடக்கில் நிரம்பியிருக்கிற பனைவளத்தினை வினைத்திறனோடு பயன்படுத்துவோமாக இருந்தால் பொருளாதார தேட்டத்தை உறுதிப்படுத்திக் கொள்ளலாம் என்பதற்கு கீழுள்ள உற்பத்திகளே சாட்சி !! பனை அபிவிருத்தி சபையின் கீழ் இயங்கிவருகிற பனை ஆராய்ச்சி நிறுவனம் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு புதிய பல உற்பத்திப் பொருட்களை கண்டுபிடித்திருக்கிறது. பதநீர் உற்பத்திகள், பனங்கழி உற்பத்திகள் மற்றும் உணவுசாரா உற்பத்திகள் என பிரதானமாக மூன்று வகைப்படுகிற இவ் உற்பத்திகளின்கீழ் பல உற்பத்திகள் உற்பத்தியாளர்களை அடைந்திருந்தாலும் அவற்றில் சிலவற்றின் தொழில் நுட்பத்தை வாங்கி அவற்றை உற்பத்தி செய்து சந்தைப்படுத்துவதற்கான உற்பத்தி முயற்சியாளர்களையும் எதிர்பார்த்திருக்கிறது கைதடியில் அமைந்துள்ள பனை ஆராய்ச்சி நிலையம் !! இந்த உற்பத்திகள் எல்லாவற்றையும் பார்க்கிறபோது 90களின் நினைவுகளும் கூடவே சேர்ந்து வந்தன. நாங்கள் விபரம் அறியாத சிறுவர்களாக விளையாடித் திரிந்த பின் 90களில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரின் பொருளாதாரத் தடை நிலவியிருந்த காலம், வடக்கில் மருந்துக்கு வாங்குகிற மண்ணெண்ணையும், குப்பி விளக்கும் கூடவே அவ்வப்போது கிபிருக்கு பயந்து விழுந்தெழும்பியபோது அப்பிய புழுதி படிந்த ஆடைகளை தோய்ந்து உலத்துவதற்கு பயன்பட்ட பனங்காயும், பனங்காய் வாசத்தில் வேலியில் காயப்போட்ட சேலையை சப்பிய பசுவும் என்று சொல்லுவதற்கு ஆயிரம் கதைகளை தாங்கிய சந்ததி நாங்கள் என்பதும் சுவையே. 😊நிற்க !! 


ஒளிப்படத்தில் இருப்பவை சந்தைக்கு வந்துள்ளவையும் வருவதற்கு காத்துக் கொண்டிருப்பவையும்.

 ஆக்கம்

சர்மிலா திருநாவுகரசு

05.03.2024 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.