கை ஏந்திய யாசகனுக்கு!!
ஆட்கள் நிறைந்த
நகரப் பேருந்தில்
ஆடை அணிந்து
உயிர் வற்றிப் போன
பார்வை கொண்டு
ஒட்டிய வயிறும் உதடுமாய்
யாவையும் இழந்து
கை ஏந்திய யாசகனுக்கு
சில்லறைகளை இட்ட
சிலரைத் தவிர
தொடுதிரை அலைபேசியை
இருவிழியால்
துளைத்துக் கொண்டு
இருந்தார் ஒருவர்
முகத்தின் திசையை
மாற்றினார் ஒருவர்.
கீழ் அன்னத்தை
பிதுக்கி
உதட்டால் உதைத்தார் ஒருவர்
கவனிக்காதது போல்
மிக கவனமாக
நடித்தார் ஒருவர்.
புறங்கை சைகை காட்டி
புறப்படு
என்றார் ஒருவர்
எங்கு போனாலும் என்று
மிச்சத்தை விழுங்கினார் ஒருவர்.
ஏதோ
உள்ளங்கை நிரம்பிடாத
நாணயங்கள் கண்டு
ஒரு உயிர் இறங்கி போனது.
உதடுகளில் இருந்து எந்த சொல்லையும் உதிர்க்காமல்.
வினாயகமூர்த்தி-அபிவர்ணா
முல்லைத்தீவு
கருத்துகள் இல்லை