மூங்கிலின் இரகசியம்

 


பொறுமையின் உதாரணமாக மூங்கில் செடியைச் சொல்வார்கள்.


மூங்கிலைப் பயிரிட்டு தண்ணீர் ஊற்றுவார்கள். பருவங்கள் போகும். ஆனால் செடி வளரவே வளராது. ஒரு இன்ச் அளவு கூட வளராமல் அடம்பிடித்து அப்படியே இருக்கும்.  முழுசாய் நான்கு வருடங்கள் செடி அப்படியே இருக்கும். செடிக்குத் தண்ணீர் ஊற்றுபவர் பொறுமையுடன் அதை பராமரிக்க வேண்டும்.


நான்கு ஆண்டுகளாய் அவருக்கு சிலாகிக்கவோ, மகிழ்ச்சி கொண்டாடவோ எதுவுமே இருப்பதில்லை.


ஆனால் அதற்கு அடுத்த பருவத்தில் எல்லோரும் வியக்கும் வண்ணம் அந்த மூங்கில் வளரத் துவங்கும். அதுவும் எப்படி? சடசடவெனும் அசுர வளர்ச்சி. ஒரே ஆண்டில் அது எட்டிப் பிடிக்கும் உயரம் எவ்வளவு தெரியுமா? 80 அடிகள். நான்கு ஆண்டு காலமாக அமைதியாக இருந்த செடி, எப்படி ஐந்தாவது ஆண்டில் மட்டும் விஸ்வரூப வளர்ச்சியை எட்டுகிறது?


ஆராய்ந்து பார்த்தால் ஆச்சரியம் தரும் ஒரு ரகசியம் இதில் இருப்பதைப் புரிந்து கொள்ளலாம். இயற்கையின் அற்புதம், கடவுள் படைப்பின் மகத்துவம் இது.


முதல் நான்கு ஆண்டுகள் அந்த மூங்கில் வேர்களை பூமியில் நன்றாக இறக்கி மிகச் சிறந்த பிடிமானத்தை உருவாக்கிக் கொள்கிறது. ஐந்தாவது ஆண்டில்  என்பது அடி உயரமாக வளரப் போகிறேன், என்னைத் தாங்கிப் பிடிக்கும் வல்லமை என் வேர்களுக்குத் தேவை என மூங்கில் முழு மூச்சாய்த் தன்னைத் தயாரிக்கும்.


அதனால் தான் ஐந்தாவது ஆண்டில் அசுர வளர்ச்சி அடையும் போது அது தடுமாறுவதும் இல்லை, தடம் புரள்வதும் இல்லை!


பொறுமை உயரமான வெற்றிகளை உருவாக்குகிறது. அவசரப்பட்டு முளைத்து, சடசடவென வீழ்ந்து விடாமல், நமது அடித்தளத்தை வலுவாக்கிக் கொள்ள பொறுமை நம்மைத் தூண்டுகிறது.


மூச்சு உள்ளவரை முயற்சி செய்வோம். முடியாதது என்று இங்கு ஒன்றும் இல்லை!


வானிசை

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.