கல்லறையில் இருந்து ஒரு மடல்.....





அன்பு  உறவுகளே..,,

நான் கல்லறையில் இருந்து பேசுகிறேன்...,,
 நான் மனதாலும் உடலாலும் நலமில்லை...நீங்கள் நலமா?


அடடா..எனக்குத்தான்   உடல் இல்லையே...விதைக்கப்பட்ட எங்கள் உடல்களைத்தான்  வீணர்கள் உழுது முடித்துவிட்டார்களே...
அதிருக்கட்டும்...

அம்மா,  அப்பா,  அண்ணா, அக்கா,.தம்பி,  தங்கை , அன்பானவளே,  நீங்கள் எல்லோரும் எப்படி இருக்கிறீர்கள்?


எங்கள் உடல்கள் தான் கிழித்தெறியப்பட்டதே தவிர எங்கள் உணர்வுகள் அப்படியே தான் இருக்கிறது. மேகம் கிழித்து
பொழிகிற  மழைத் துளிகளில் எல்லாம்
இதோ நாங்கள்  வாசம்  செய்துகொண்டுதான் இருக்கிறோம்.

குவிந்து கிடக்கும் இந்த கல்லறை எச்சங்களில்
எங்கள்  அசைவுகள் இருக்கிறது. நீங்கள் கவலைகொள்ளாதீர்கள்....

அம்மா...
வாழ்ந்த நாட்களில் தீயாய் கொதித்தெழுந்த நான்,  இப்போதும் அதே கொதிப்போடுதான் உலவிக் கொண்டிருக்கிறேன்.   எனக்கு எப்போதும்  உங்கள் நினைவுதான் ...

உங்கள் கையால்  தந்த கடைசி தேநீர், இன்னும் என் நாவில் இருந்து மறையவில்லை. நீங்கள் தந்த  பாணும் தேநீரும் அப்படி ஒரு சுவை.  அப்போது,  அதுதான் உங்கள் கையால் கிடைக்கும் கடைசி  சாப்பாடு என்பது  புரியவில்லை.  சின்ன வயதில் நீங்கள்  றொட்டியைச் சுட்டு வைக்க வைக்க நான் சாப்பிட்டுக்கொண்டே இருப்பேன்,  நினைவிருக்கிறதா ...இப்போது தம்பி அப்படிச் செய்கிறானா? 

சீச்சீ ....அவன் கடையில் தானே அதிகம் சாப்பிடுகிறான்.


அப்பா...
உங்களுக்கு வயதாகிவிட்டது...கால்கை தளர்ந்தாலும் இன்னும் நீங்கள் உழைப்பது ஓயவில்லை.

உங்களுக்கு எப்போதும் என் நினைவுதான் என்பது எனக்கு தெரியாமல் இல்லை.  என் கனவு,  காவுகொள்ளப்பட்ட  வருத்தம் என்னை விட உங்களுக்கு தான் அதிகம்.  வயல் விதைப்பு எல்லாம் குறைத்து விட்டீர்களே...ஏன் அப்பா?

அண்ணா...எப்போதும் உழைப்பு...உழைப்பு என்று ஓடிக்கொண்டிருக்கிறாய்...

எங்கள் கனவுகளைப் பற்றியும் கொஞ்சம் நினை...களத்தினில் நின்று, சமர் பல வென்றவன் நீ....உனக்கு ஏன் புரியாமல் இருக்கிறது...சுதந்திர தமிழீழம் மலரும் என்று  நம்பு.  நம்பிக்கைகள் ஒருபோதும் வீண் போவதில்லை அண்ணா. இஸ்ரேலிய தேசம் இரண்டாயிரம் ஆண்டுகளின் பின்னர் தான் விடுதலை அடைத்தது.  அந்த தேசம் சந்தித்த அழிவுகளும் அவமானங்களும்  கொஞ்சமா? ஆனால் தங்கள் தேசம் விடியும் என்று அவர்கள் நம்பினார்கள், அந்த நம்பிக்கை தான் இன்று , அசைக்க முடியாத தேசமாக மாறவைத்திருக்கிறது.

அக்கா...
உன் பிள்ளைகளுக்கு வரலாற்றை  சொல்லிக்கொடு, தமிழினம் தன் உரிமை கேட்ட கதையைச் சொல்லு,  விளையாடும் வயதில்,  விடுதலை கேட்ட, வீர  கரிகாலனின் கதையைச்சொல்லு.  புயலாகி நின்ற புலிவீரர் கதை சொல்லு...

மருத்துவம், கணினி, அறிவியல் என்று அநேக விடயங்களை  கற்றுத்
தேறச்சொல்லு... அறிவுடைச் சந் ததிதான் நாளைய தமிழீழத்தை உச்சத்தில் ஏற்றிவைக்கப்போகிறவர்கள்.

தங்கையே...
சினிமாவிலும்  சின்னத்திரையிலும் உன் நேரத்தை வீணே போக்காதே... வாழ்வது, என்பது வரலாறாக வேண்டும்.  வெறுமனே, பிறந்தோம், இறந்தோம், என்றிருப்பது வாழ்க்கை அல்ல. உன்னைச் செதுக்குகிற சக்தி நீதானே...கரண்டி பிடித்தால் என்ன, பேனா பிடித்தால் என்ன,  எல்லாம் ஆயுதம் தானே, சாதாரண பெண்ணாக உன்னை  வகுத்துக்கொள்ள விடாதே, இலட்சியப்பெண்ணாக  தொகுத்துக்கொள். உன்னை..
தமிழீழ தேசத்தில் நாளை பணியாற்ற வேண்டும் நீ...

தம்பி...
உன்னால்   என் தவிப்பு கூடிப்போனது, திரை உருவங்களுக்கு பாலாபிசேகம் செய்பவர்களோடும் சினிமா நாயகிகளுக்கு கோயில் கட்ட நினைப்பவர்களோடும் சேர்ந்து கொள்ளாதே... எங்கள் கனவுகள் கலைந்து கிடக்கிறதே தவிர,  நாங்கள் தோற்றுப் போகவில்லை.   தோல்வி என்பது என்ன,  இனிமேல் வாழ முடியாது என்ற நிலை தானே...நாம் பதின்மூன்று ஆண்டுகள் வாழ்ந்து விட்டோமே...
இலட்சிய நெருப்பில்  ஆகுதியானவர்களை தினமும் நெஞ்சிலே நினைத்து,  உன் கடமைகளைத் தொடங்கு. அப்போது,  நீ என்ன செய்ய வேண்டும் என்பது உனக்கு புரியும்.   வரலாற்றை மாற்றிச் சொல்லிவிடுவார்கள், அந்த விசயத்தில் கவனம் தேவை....இளையோருக்கு இவ் விடயம் குறித்து விளக்கிச்சொல்,.வரலாறு முக்கியம் டா...

அன்பானவளே, என் வேட்கையில்  நீயும் பங்காளிதானே...என் நினைவுகளோடு இன்று வரை வாழ்ந்து கொண்டிருக்கும் உன்னை,  என்ன சொல்லி நான் தேற்றுவேன்.  எங்கள் கனவுகளின் வசந்த தேசம் என்றோ மலரும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.  அன்று,  வீரனொருவனின்  காதலியாய் நீயும் பெருமிதம் கொள்வாய்.... 

நீங்கள் தான் என்னைக் காணமுடியவில்லையே தவிர நான் உங்களைப் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன். 

மீண்டும் உங்களோடு உரையாட வருவேன்...கார்த்திகை நாளில் கண்டு கொள்வோம்...

இப்படிக்கு
கந்தகம் சுமந்த
தமிழீழ போர்வீரன்.



தமிழரசி


 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.