தோல்வியிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டிய ஈழத்தமிழர்!!

 


எல்லாளன் எனும் மன்னன் பற்றிய பல்வேறு புனைவுகளிருப்பினும், அத்தகைய மன்னன் இலங்கையினை பொ.ஆ.முந்திய இரண்டாம் நூற்றாண்டளவில் { BCE 2nd cent} ஆண்ட மன்னன் என்பதிலும் துட்டகாமினி என்ற பவுத்த மன்னனால் போரில் கொல்லப்பட்டவன் என்பதிலும் யாருக்கும் ஐயமில்லை {இதனைச் சிங்களத் தமிழ்ப் போர் எனப் பலரும் உருவகப்படுத்துவர் அது தவறு, அப்போது `சிங்களம்`என்றொரு மொழியே தோன்றியிருக்காத போது, துட்டகாமினி எவ்வாறு சிங்களவராவார்? அது வேறு, அதுவல்ல இங்கு கருப்பொருள்}. போரில் தொடக்கத்தில் எல்லாளன் படைகளே வென்று கொண்டிருந்தன, இதற்குப் படைப்பலம், போர்ப்பட்டறிவு , நுட்பங்கள் என்பன காரணங்களாகும். போரின் தோல்வியினை உணர்ந்த துட்டகாமினி ஒரு தந்திரம் செய்தான். அது என்னவெனில் படையினர் மோதி இரு பக்கமும் சாவுகள் ஏற்படுவதனைத் தடுக்க, மன்னர்கள் இருவருமே நேரடியாக மோதுவது எனச் சொன்னான். இதற்கு எல்லாளன் உடன்பட்டான், இங்குதான் தவறு. படையினருடன் மோதுவதே எல்லாளனுக்கு உவப்பான களம்; ஏனெனில் படையினரின் எண்ணிக்கை, போர்ப் பட்டறிவு, போர் நுட்பங்கள் என்பவற்றில் எல்லாம் எல்லாளனின் கையே ஓங்கியிருந்தது. துட்டகாமினியின் படைகளோ மதவெறி ஊட்டப்பட்டு அப்போது சேர்க்கப்பட்ட புதிய படையினர், மறுபுறம் எல்லாளன் படைகளோ போர்ப் பட்டறிவு மிக்க தொழில்முறையிலான படைகள். மன்னர்கள் மட்டுமே மோதுவதோ துட்டகாமினிக்கே வாய்ப்பான களம், ஏனெனில் எல்லாளன் மூப்படைந்து சற்று உடல் வலிமை குன்றிய முதிர்வடைந்த மன்னன் {ஏற்கனவே 44 ஆண்டுகள் அரசனாக மட்டுமே இருந்ததாக மகாவம்சம் சொல்வதிலிருந்து அவனது வயதினைக் கணியுங்கள், மகாவம்சத்தின் படி அவனுக்கு போரின் போது 74 வயது}; மறுபுறம் துட்டகாமினியோ உடல்வலிமையுடைய இளைஞன். ஒரு 74 வயதுடையவர் ஓர் இளைஞனுடன் மோதினால், வெல்வதற்கு யாருக்கு வாய்ப்புகள் அதிகம் {நேரடி மோதலிலும் சூழ்ச்சியாலேயே எல்லாளன் வீழ்த்தப்பட்டதாக ஒரு கருத்துமுண்டு}. எல்லாளன் தனக்கு வாய்ப்பான களத்தினை விடுத்து, எதிரியால் தெரிவு செய்யப்பட்ட களத்துக்குப் போனமையாலேயே விழ நேர்ந்தது.

இன்றும் அதே வரலாறு திரும்புகின்றது. சிங்களப் பேரினவாதத்துக்கும் தமிழருக்குமிடையேயான மோதலில் எமக்கு வலுவான களம் மொழி எனும் அடையாளமே! பொ.ஆ.முந்திய 5 ம் நூற்றாண்டிலேயே {BCE 5th cent} தமிழ் மொழி இலங்கையில் இருந்தமைக்கான தொல்லியல் சான்றுகளே எம்மிடமுண்டு. இதற்கு ஆயிரமாண்டுகளுக்குப் பின்னரே சிங்களம் என்றொரு மொழியே உருவாகின்றது. பிராகிரதப் பிராமியினைச் சிங்கள எழுத்தாகக் கொள்ள முடியாது, அவை இரண்டும் வெவ்வேறு மொழிகள் , இலங்கையிலும் பிராகிரதப் பிராமியும் தமிழிக்குக் காலத்தால் பிந்தியதே. எனவே மொழியின் தொன்மை எனும் களத்தில் அவர்களால் தமிழருடன் மோத முடியாது. எனவே `மதம்` எனும் களத்தினை அவர்கள் தெரிவு செய்கின்றனர். நாமும் மதத்தினை மதத்தால் எதிர்கொள்வது என அவர்கள் தெரிவு செய்யும் களத்துக்குப் போனால் என்ன நடக்கும்! தமிழர்களும் ஒரு காலத்தில் பவுத்தர்களாகவே (தமிழ்ப் பவுத்தம்) இருந்து மதம் மாறியவர்களே, இன்னமும் சொன்னால் பவுத்தமே தமிழர்களால் சிங்களவருக்குக் கொடுக்கப்பட்ட கொடையே [சான்று- Ancient Ceylon: Sinhala Tamil Coordination ; Author, Layanal Sarat ]. எங்களது கண்ணகிதான் அவர்களது பத்தினித் தெய்யோ. வடக்கு கிழக்கினை ஆழமாகத் தோண்டினால் வெடியரசன் கோட்டையில் (நெடுந்தீவு) மட்டுமல்ல, வல்லை வெளியிலும் பவுத்த அடையாளங்கள் கிடைக்கும். அவையெல்லாம் தமிழருடையது {தமிழ் பவுத்தருடையது}. சைவம் என்பதற்கான சான்றுகளை அவ்வாறு காட்ட முடியாது, ஏனெனில் சைவம் ஒரு மதமாக ஒழுங்கமைக்கப்பட்டது பல்லவர் காலத்திலேயே {பழந் தமிழர் வழிபாட்டு முறைகள், ஆசீவகம் போன்றவை வேறு, சைவம் எனும் ஒழுங்கமைக்கப்பட்ட மதம் வேறு}. 

எனவே `தமிழ்` எனும் எமக்கு வாய்ப்பான களத்தில் களமாடப் போகின்றோமா ! அல்லது மதத்தினை மதத்தால் எதிர்கொள்வது என எதிரிக்கு வாய்ப்பான களத்துக்குப் போய் விழப்போகின்றோமா'! ஈழத்தமிழர் முடிவு செய்ய வேண்டிய நேரமிது.


இலங்கநாதன் குகநாதன்



Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.