யாழ் போதனாவுக்கு பத்து மாடியில் புதிய கட்டடம்.!

 


யாழ் போதனாவுக்கு பத்து மாடியில் புதிய கட்டடம்.. பணிப்பாளர் சத்தியமூர்த்தி.


யாழ் போதனா வைத்திய சாலையில் 10 மாடியில் புதிய கட்டடம் ஒன்றை அமைப்பதற்கான முன்னயத்த ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக யாழ்ப்பாண வைத்திய சாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்தார்.


நேற்று  வெள்ளிக்கிழமை யாழ் போதன வைத்தியசாலைக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற போதனா வைத்திய சாலையின் அபிவிருத்தி குழு கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


அவர் மேலும் தெரிவிக்கையில் யாழ் போதனா வைத்திய சாலையில் தினமும் அதிகளவிலான நோயாளிகள் பல்வேறு நோய்களுக்கான சிகிச்சை பெற்று வரும் நிலையில் விடுதிகளிலும் அதிகளவிலானோர் தாங்கி நின்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.


இதன் காரணமாக ஏற்பட்டுள்ள இட நெருக்கடி காரணமாக 10 மாடியில் புதிய கட்டிடம் ஒன்றை அமைப்பதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் இடம் பெற்று வருகிறது.


புதிய கட்டடத்தை அமைப்பதற்கான வரைபடம் தயாரிக்கப்பட்ட நிலையில் அடுத்த கூட்டத்தில் அதனை சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்க்கிறேன்.


புதிய கட்டடத்தை கட்டுவதற்கு பாரிய நிதி செலவு செய்ய வேண்டிய சூழ்நிலையில் எமது புலம் பெயர் வர்த்தகரான ராஜ் ராயரட்ணம் ஒரு தளத்திற்கான முழுமையான செலவை வழங்குவதற்கான சாதகமான பதிலை வழங்கியுள்ள நிலையில் அவரைப் போன்று பலர் உதவி வழங்குவார்கள்.


அரசாங்கத்திடம் புதிய கட்டடத்திற்கு தேவையான இயந்திரங்களை கொள்வனவு செய்வதற்கு வரி விலக்கை கோரி பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகளையும் சம்பந்தப்பட்டவர்களிடம் கலந்துரையாடியுள்ளோம்.


ஒரே தடவையில் பத்து மாடிகளையும் கட்டி முடிக்காவிடினும் ஆகக் குறைந்தது ஐந்து தொடக்கம் ஆறு மாடிகளையாவது கட்டி முடித்தால் இட நெருக்கடி குறைந்துவிடும்.


ஆகவே புதிய கட்டடத்துக்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு அனைவருடைய ஒத்துழைப்பும் அவசியம் என அவர் மேலும் தெரிவித்தார்.


குறித்த கலந்துரையாடலில் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் கலந்து கொண்டார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.