ஈரத்தீ (கோபிகை) - பாகம் 30!!


வழமையான நேரத்தில் விழிப்பு வந்து விட சோம்பலை விரட்டி எழுந்து வெளியே.  பார்த்தேன். 

போர்வை போர்த்தியமனிதர்களைப் போல மரங்கள் கிளைகளால் மூடப்பட்டு காட்சியளித்தது. 


ஒரு வாரமாக மாவீரர் வாரம் அனுஷ்டிக்கப்பட்டு இன்று தான் கார்த்திகை 27. 

சொல்லமுடியாத பெருவலி மனதை அழுத்திப்பிழிந்தது.  இறைநாயகர்களுக்கு நாம் அஞ்சலி செலுத்தும் புளிதநாள் இன்று. 


இரண்டாம் கடவுளரை மனதார நினைக்கின்ற தூயநாள். 


கண்களை நிறைத்த கண்ணீரை துடைத்தபடி எழுந்து அமர்ந்தேன்.  இரவிரவாக ஏதேதோ யோசனைகள் மனமெங்கும் உளன்றுகொண்டிருந்தது. 


எந்தக் கனவுகளுக்காக எம் மாவீரர்கள் காவியமானார்களோ,  அந்தக் கனவுகள் இன்னும் நனவாகாமல் அப்படியே தான் இருக்கிறது என்பதை நினைக்கும் போது மனம் கொதித்தது. 


வீட்டில் காலையிலேயே விளக்கு ஏற்றிவிடுவது வழமை என்பதால் சட்டென்று எழுந்து காலை வேலைகளை அவசரமாகச் செய்யத்  தொடங்கினேன். 


அரசாங்க விடுதி தானே,  முற்றம் என்று பெரிதாக இல்லை. முன் விறாந்தையை அண்டிய சிறுபகுததிதான். 

மளமளவெகூட்டி விட்டு உள்ளே வரவும் வண்ணமதியும் எழுந்து வெளியே வந்தாள். 



"அம்மா.... நீங்கள் குளிக்கப்போங்கோ... நான் வீடெல்லாம் கூட்டுறன்" என்றபடியே தும்புத்தடியுடன் உள்ளே போக, நான் குளியலறைக்குள் புகுந்து கொண்டேன். 


அண்ணா,  அக்கா இருவரினது படங்களுக்கும் கீழே இருந்த சிட்டி விளக்கில் எண்ணெய் விட்டு இருவரும் இரண்டு விளக்குகளையும் ஏற்றினோம். 


கண்ணீர் வழிய வழிய நான் விளக்கு ஏற்றுவது வண்ணமதிக்கும் மனவேகெடுத்தது கோடுத்தது .


அவளும் அழுதபடியே விளக்கேற்றினாள்.  அவர்களின் படங்களுக்கு கீழே இருந்த பெயர்களை வாசித்து தனக்குள் மனப்பாடம் செய்து கொண்டிருந்தவள்,  


"அம்மா... இவர்கள் ஏன் இறந்து போனார்கள்?"  என்று கேட்டாள். 


"இவர்கள் இந்தமண்ணுக்காக விதையாகிப்போனவர்கள்" என்றேன் பெருமூச்சோடு. 


"முந்தி சண்டையெல்லாம் நடந்ததாமே?" அவள் கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்வதென யோசித்தேன். 

 பின்பு,  தலையை மெதுவாக ஆட்டியபடி,  


"நாங்கள் அடிமைகளாக, சுதந்திரம் அற்றவர்களாக வாழ நிர்ப்பந்திக்கப்பட்டபோது சண்டை செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டது.  அதனால் சண்டை செய்தார்கள் " என்றேன். 


"சண்டை கூடாது தானே அம்மா?*  என்று கேட்டவளுக்கு சட்டென்று என்னால் பதில் சொல்லமுடியவில்லை. 


பத்து வயதுப் பாலகியான அவளுக்கு சரியாகப் புரிந்து விடாது என்பது தெரிந்தாலும் வரலாறுகளை அதன் வலியோடு சொல்லிக்கொடுக்க வேண்டிய தேவை எமக்கு உண்டு.


"நாங்கள் வாழமுடியாது என்கிற நிலைமை வருகிற போது,  எமது இருப்புக்காக நாம் போராடியே அதாவது சண்டைசெய்தே  ஆகவேண்டும் என்பது கட்டாயம்தானே? அதனால் தான் சண்டை பிடித்தார்கள்,  அதுவும் அவர்கள் தங்களுக்காகவோ தங்களுடைய குடும்பங்களுக்காகவோ சண்டை செய்யவில்லை,  விலை மதிப்பில்லாத தங்களுடைய உயிரை,  தங்கள் இனத்திற்காக,  உங்களைப் போன்ற தங்களுடைய சந்ததிகள் சுதந்திர வாழ்க்கை வாழ்வதற்காக கொடுத்தார்கள்" என்றேன். 


அந்த வார்த்தைகள் வண்ணமதியின் மனதில்  ஒரு விதை போல விழ வேண்டும் என்பதே என்னுடைய ஆசையாக இருந்தது. 


சமர்... வரலாற்றை எவ்வளவு நேர்த்தியாக கடத்துகிறாய்.... அருமையான விசயம் " என்றபடி வந்த தேவமித்திரன், சொல்லாமல் கொள்ளாமல் வந்தது ஆச்சரியமாக இருந்தது. 


என்னுடைய பார்வையின் பொருள் புரிந்தது போல,  

"அப்பா தான் உன்னை பாத்திட்டு வரச்சொன்னார்.... அல்வாய் மண்டபத்தில் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்து விட்டு அப்படியே வந்தேன்.  நான் யாழ்ப்பாணம் போறன்,  நீயும் திலீபன் அண்ணாவின் தூபியடிக்கு போக வேணும் என்று சொன்னனி,  வாறியா சமர்? " என்றார். 


"ஓமோம்.... நானும் கனகாலம் அங்க போய்... நானும் வாறன்... " என்றுவிட்டு,  


"அப்பிடியே வன்னிக்கு போறதுதானே?"  என்றேன். 


"ஓமோம்... அப்பா எள்ளங்குளம் போறன் எண்டு சொன்னவர்  பாமதி  அக்காவையும் கூட்டிக் கொண்டு நாங்கள் போவம்" என்றார். 


பாமதி அக்காவின் கணவருடைய வித்துடலும் விஸ்வமடுவா? 


இல்லை.... அவர் கனகபுரம்.... அவவையும் இனியனையும் கனகபுரத்திலை இறக்கிவிட்டிட்டு  நாங்கள் போவம்,  வரேக்கை போய் ஏத்திக்கொண்டு வரலாம் என்ற தேவமித்திரனுக்கு தலையை ஆட்டி விட்டு, வண்ணமதியைப் பார்த்தேன். 


இவை எல்லாம் அவளுக்கு புதிதாக இருந்திருக்க வேண்டும். பேசாமல் நின்று கொண்டிருந்தாள். 


முதல் நாளே எடுத்து ஆயத்தமாக வைத்திருந்த பையை எடுத்து வைக்குமாறு வண்ணமதியிடம் கூறிவிட்டு தேநீர் தயாரிப்பதற்காக சமையலறைக்கு விரைந்தேன். 




தீ தொடரும் ....




Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt


  






கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.