ஏன் முள்ளிவாய்க்கால் கஞ்சி தமிழினப்படுகொலையின் அடையாளமாக மாறியது ?


தமிழினப்படுகொலைக்கான திட்டமிடல் 1930 களிலேயே தொடங்கப்பட்டுவிட்டது. அதிலிருந்து 2009 வரையான காலப்பகுதிவரைக்குமான பாரிய/கொடுமையான இடப்பெயர்வுகள் தமிழருக்கு ஏற்பட்டபோதும் தமிழர்கள் பொருளாதார அளவில் முள்ளிவாய்க்கால் போல அழிந்ததில்லை. 


1.1983 இல் கொழும்பிலும் ஏனைய பகுதிகளிலும் தமிழர்களின் பொருளாதாரம் சூறையாடப்பட்ட போது யாழ் நோக்கி இடம்பெயர்ந்தனர். ஆனால் உணவு ஓர் சிக்கலாக இருந்ததில்லை.


2. Operation liberation காலத்தில் இடம்பெயர்ந்தவர்களுக்குக் கூட உணவு என்பது சிக்கலாயிருக்கவில்லை.


3. 1989 - 1991 திருகோணமலையிருந்தும் அண்டிய பகுதிகளிலிருந்தும் மக்கள் சிங்களத்தால் அடித்து விரட்டப்பட்டபோதும் முல்லைத்தீவிலிருந்து யாழ்வரையான மக்கள் உணவளித்தனர்.


4. 1995 யாழின் பெரும் இடப்பெயர்வின் போது வன்னி முழுவதும் உறவினர்கள் வீடுகளில் தங்கியவர்கள் போக, எஞ்சியோர் பாடசாலைகளில் தங்கவைப்பட்டு மூன்று நேரம் தவிபு உம் வன்னிமக்களும் சமைத்த உணவு வழங்கினர். சந்திரிகாவின் பொருளாதாரத்தடையின் போதுகூட யாரும் உணவின்றிக் கஞ்சி குடித்ததாக வரலாறு இல்லை. (போர்க்கால அடிப்படையில் வன்னியில் தபொமேகழகம் எல்லாநிலங்களிலும் ஏதோ ஒரு உணவுப்பொருளை  விளைவிக்கவேண்டும் என அறிவித்திருந்தது)


ஆனால் 2009 இல் வன்னியின் ஒட்டுமொத்தத்தமிழனும் முள்ளிவாய்க்காலில் ஒடுக்கப்பட்டபோது யாழிலிருந்தோ, திருகோணமலையிலிருந்தோ உதவவியலாத சூழல். உணவு மற்றும் மருந்துகள் அடிப்படைப் பொருட்கள் தடை. இதன் இறுதிவடிவமாகத்தான் இருப்பதைக் கொண்டு உயிர்காக்கும் "கஞ்சி" வழங்கப்பட்டது. 


சிலர் கஞ்சி என்று பெயரை வைத்து ஏன்  "சிரட்டையை" அடையாளமாக்கினார்கள்.  என இன்றுவரை எனக்குப்புரியவில்லை. சிலர் கஞ்சி என்று பாலையும், பயறையும் போட்டுக் காய்ச்சி ஐரோப்பாவில் அருந்தினார்கள். இதன் காரணமும் புரியவில்லை. இன்றுவரை May 18 என்ற நாளை மட்டுமே  "கஞ்சிநாளாக" அடையாளப்படுத்துகிறார்கள். அதுவும் ஏனென்று புரியவில்லை.


உண்மையில் கஞ்சி முள்ளிவாய்க்காலில்  காய்ச்சப்பட்ட காலம் March - May மாதம் இரண்டாம் கிழமை வரை ஆகும். (ஆதாரம்: Suren Karththikesu )


(வன்னியில் "உணவற்ற நிலை" என்ற அறிக்கை - 24.04.2009 https://www.tamilnet.com/art.html?catid=13&artid=29156)


(கஞ்சியும் , அரிசியும் வழங்கப்பட்டது 09.05.2009 - https://www.tamilnet.com/art.html?catid=13&artid=29308  )


இது நடைபெற்றது முதல் இரு வாரங்கள் மட்டுமே. May 18 அன்று அங்கு மக்கள் நிற்கவுமில்லை, யாரும் கஞ்சி காய்ச்சவுமில்லை. 


இந்த "முள்ளிவாய்க்கால் கஞ்சியை" வேண்டுமென்றால் May 18 அன்று "இதுவும் ஓர் தமிழினப்படுகொலை அடையாளம்" என்று மக்களுக்குச் சொல்லலாமே தவிர, முழுமையாக May 18 ஐ க் கஞ்சி நாளாக அடையாளப்படுத்துவது பொருத்தமற்றது. 


உண்மையில் முள்ளிவாய்க்கால் கஞ்சிக்குரிய காலமாக May 1 - 15 வரை  அடையாளப்படுத்தலாம். அங்கங்கே இதை சிறு நிகழ்வுகளாகக்கூட நடத்தலாம்.


ஆனால் May 18 என்ற நாளைக் கஞ்சிநாளாக அடையாளப்படுத்துவதில் துளியும் பொருளிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. May 18 அன்று;  இலட்சியம் தவறாது நின்று களமாடி வீழ்ந்த எமது தவிபு மாவீரர்களையும், அந்தமண்ணில் நின்று உயிரை ஈந்த மக்களையும் வணங்கும்/நினைவேந்தும்  உயர்ந்த புனித நாளாக மட்டுமே  அடையாளப்படுத்த வேண்டும். அதுதான் பொருள்கொண்டதாகவிருக்கும். 


இந்தத் தலைமுறை வாழும் காலத்தினுள் இது சரிசெய்யப்படவேண்டும். கஞ்சி தமிழர்களின் "வழமையான உணவு" போன்று கதைவிடுபவர்களையும், May 18 அன்று கஞ்சி வியாபாரம்செய்பவர்களையும் அடையாளம் கண்டு தெளிவுபடுத்துக. 

நேற்று இங்கே அறிவித்தது போல "கஞ்சிகளில் பல்வகை உண்டு" எனப் பூச்சுற்றும் கதைகளை விட்டுவிட்டு, இதை இந்த வருடத்திலிருந்தாவது நேர்செய்வோம்.


கஞ்சி - தமிழினப்படுகொலையின் முழு/முதன்மை அடையாளம். தயவுசெய்து அதன் பொருளையும், அதற்குரிய சரியான காலத்தையும் விருப்பத்திற்கேற்றாற்போல் மாற்றிக்கொள்வதைத் தவிர்ப்போம். இது என்வீட்டு/உங்கள்வீட்டுச் சிக்கல் அல்ல. இது இனத்தின் அடையாளம்.


சிந்திப்போம்...! 


- தேவன்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.