“எங்கள் நட்பை தொடர்வோம்!” –சைந்தவி!

 


ஜி.வி. பிரகாஷை பிரிவதாக பாடகி சைந்தவி அறிவித்துள்ள நிலையில், அவர்களது உறவு குறித்து யூடியூப் சேனல்களில் வெளியாகும் வீடியோக்கள் வருத்தம் அளிப்பதாக சைந்தவி வேதனை தெரிவித்துள்ளார். 

கடந்த 2006-ம் ஆண்டு தமிழில் வெளியான ‘வெயில்’ என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி பிரகாஷ் குமார். தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். கடந்த 2013-ஆம் ஆண்டு பாடகி சைந்தவியை, பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நான்கு வயதில் அன்வி என்கின்ற ஒரு பெண் குழந்தை உள்ளது.

ஜி.வி.பிரகாஷ்-சைந்தவிக்கு திருமணமாகி பத்து ஆண்டுகளுக்கும் மேலாகிறது. 2023-ம் ஆண்டில் தனது திருமண நாளில் தனது கணவருக்கு திருமணநாள் வாழ்த்தை வெளியிட்ட சைந்தவி, இந்த ஆண்டு அத்தகைய எந்த இடுகையையும் வெளியிடவில்லை. இந்நிலையில் இருவரும் பிரிவதாக நேற்று முன்தினம் (மே.11) அறிவித்தனர். இந்த செய்தி ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து இவர்களின் இந்த பிரிவிற்கு யூடியூப் மற்றும் சமூக வலைதளங்களில் பலரால் பல காரணங்கள் கூறப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இதற்கு ஜி.வி பிரகாஷ் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;

“யூடியூப் சேனல்கள் தங்களது சொந்த அனுமானங்களின் அடிப்படையில் எழுதும் கதைகளில் உண்மை இல்லை. அதிலும் சிலர் அவர்களது சொந்த கற்பனை கதைகளின் மூலம் எங்களது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களை ரசிக்கிறார்கள். இந்த கடினமான காலங்களில் எங்களோடு நின்று ஆதரவு அளிப்பவர்களுக்கு நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சைந்தவியும் இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

“எங்கள் தனிப்பட்ட விவகாரத்திற்கு மதிப்பளிக்க வேண்டுகோள் வைத்தும் பல யூடியூப் சேனல்கள் அவர்களுக்கு கிடைத்த தகவலைக் கொண்டு கட்டுக்கதைகளை உருவாக்குவது மனஉளைச்சலைத் தருகிறது. எங்கள் விவாகரத்துக்கு யாரும் காரணம் இல்லை. ஒருவரின் மதிப்பை குலைப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. எங்களின் நலனுக்காக இருவரும் சேர்ந்து எடுத்த முடிவு இது.
பள்ளி காலத்திலிருந்தே நானும் ஜி.வி. பிரகாஷும் கடந்த 24 ஆண்டுகளாக நண்பர்களாக இருக்கிறோம். இனியும் அந்த நட்பைத் தொடர்வோம். நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.

 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.