மொஹமது மொக்பர் ஈரானின் இடைக்கால ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார்!
ஹெலிகொப்டர் விபத்தொன்றில் கொல்லப்பட்ட ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மரணத்திற்கு ஈரானில் ஐந்து நாள் துக்க தினத்தை அறிவித்திருக்கும் அந்நாட்டு உயர்மட்டத் தலைவர் அல் கமனெய், துணை ஜனாதிபதி மொஹமது மொக்பர் இடைக்கால ஜனாதிபதியாக நியமிக்கப்படுவதை உறுதி செய்துள்ளார்.
இதன்படி ஈரானின் அடுத்த ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் அதிகபட்சம் 50 நாட்களுக்கு நடத்தப்படவுள்ளது.
‘ஐந்து நாள் பொது துக்கதினத்தை அறிவித்துக் கொள்வதோடு அன்புக்குரிய ஈரானிய மக்களுக்கு எனது அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்’ என கமனெய் அறிவித்ததாக ஈரானின் உத்தியோகபூர்வ செய்தி நிறுவனமான இர்னா குறிப்பிட்டுள்ளது.
‘நிறைவேற்றுப் பிரிவை (இடைக்கால ஜனாதிபதி) மொக்பர் நிர்வகிப்பார் என்பதோடு அதிகபட்சமாக 50 நாட்களுக்குள் ஒரு புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்க சட்டமன்ற மற்றும் நீதித்துறைக் கிளைகளின் தலைவர்களுடன் இணைந்து ஏற்பாடுகளை மேற்கொள்ள அவர் கடமைப்பட்டுள்ளார்’ என்றும் உயர்மட்டத் தலைவரின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈரானிய அரசியலமைப்பின் 131 ஆவது சரத்துக்கு அமைய, முதல் துணை ஜனாதிபதி, பாராளுமன்ற சபாநாயகர் மற்றும் நீதித்துறை தலைவர் ஆகியோர் அடங்கிய கவுன்சில் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான வழியை தயார் செய்ய வேண்டும்.
ரைசியை போன்றே மொக்பரும் நாட்டின் உச்ச அதிகாரம் பெற்ற கமனெயுடன் நெருக்கமானவராவார். 2021 ஆம் ஆண்டு ரைசி ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டபோதே மொக்பர் துணை ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார். ஈரானில் அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெறவிருந்த நிலையில் ரைசி தனது இரண்டாவது தவணைக்காக போட்டியிடவிருந்தார்.
1981 தொடக்கம் அனைத்து ஈரானிய ஜனாதிபதிகளும் தமது இரண்டு தவணைகளையும் பூர்த்தி செய்த நிலையில் அந்தத் தேர்தல் பற்றி பெரிதாக அவதானம் செலுத்தப்படாமல் இருந்தது.
இந்நிலையில் ஜனாதிபதியின் திடீர் மரணம் அந்நாட்டு அரசியல் சூழலில் மாற்றத்தை ஏற்படுத்தி இருப்பதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
ஈரான் இஸ்லாமிய புரட்சிக்குப் பின்னர் ஜனாதிபதி ஒருவர் தனது பதவிக் காலத்தை பூர்த்தி செய்யாத இரண்டு சந்தர்ப்பங்களே இதற்கு முன்னர் பதிவாகி இருந்தன.
1981 இல் அப்துல்ஹசன் பனிசதிர் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வெளியேற்றப்பட்டதோடு அதே ஆண்டில் முஹமது அலி ரஜாயி படுகொலை செய்யப்பட்டார்.
வடக்கு ஈரானின் கிழக்கு அசர்பைஜான் மாகாணத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி ரைசி சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் அவருடன் ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹொஸைன் அமீராப்தொல்லாஹியம், மாகாண ஆளுநர் உட்பட பல அதிகாரிகளும் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் ஹொஸைனின் மரணத்தை அடுத்து பிரதி வெளியுறவு அமைச்சர் அலி பகரி கானி, பதில் வெளியுறவு அமைச்சராக அந்நாட்டு அமைச்சரவை நியமித்துள்ளது. அவர் 2021 தொடக்கம் ஈரானின் பிரதி வெளியுறவு அமைச்சராக செயற்பட்டு வருகிறார்.
கானி 2007 மற்றும் 2013 இற்கு இடையே ஈரானின் உயர் தேசிய பாதுகாப்பு கௌன்ஸிலின் பிரதிச் செயலாளராக செயற்பட்டு வந்தவராவார்.

.jpeg
)





கருத்துகள் இல்லை