முள்ளிவாய்க்கால் எனும் முள் தடம்!

 


முள்ளிவாய்க்கால் என்னும் காயல்நிலப்பகுதி, குருதி குடித்த ஒரு மணல் படுக்கை.  உலகத் தமிழர்கள் அனைவரினதும் உள்ளத்தில் வெந்தணலைக் கொட்டும் வேதனைக்கடல் பிரவாகிக்கும் ஒரு சொல். அது ஆறாத ஒரு துயரம், அழியாத ஒரு வடு, புரட்சியும் வீழ்ச்சியுமாய் நாங்கள் மௌனித்த இடம், 

துரோகத்தின் வாள் கொண்டு நாங்கள் வெட்டப்பட்ட நிலம், மனிதப் பிணங்கள்  மீது கால் பதித்து நடந்த ஒரு சபிக்கப்பட்ட பூமி, மரணம் குற்றுயிராக்கி வேடிக்கை பார்க்கையில், காப்பாற்ற யாருமற்று நாங்கள் கதறி அழுத நிலம், இந்தியா வந்துவிடும், அமெரிக்கா வந்துவிடும், என்றெல்லாம் கண்ட கனவுகள் காற்றில் வரைந்த ஓவியமாகி, பொய்யாகிப்போக எங்கள் விழிகளின் கண்ணீர் அல்ல, வெந்நீர் துளித்துளியாய் கொட்டுப்பட்ட இடம், 

வெறிகொண்ட எங்கள் போராட்டம் அதைவிட வெறியோடு ஒடுக்கப்பட்ட இடம். நாங்கள் தொலைக்க விரும்பாதவைகளைத் தொலைத்துவிட்ட இடம். கொடுக்கக்கூடாதவைகளைக் கொடுத்துவிட்ட நிலம்.பதினைந்து ஆண்டுகளின் பின் இந்த நிசப்த நிலத்தினைப்பற்றி எழுத விழைகிறேன். கருக்கட்டிக் கொண்ட என் பேனாவும் தன் பிரசவத்தினை கண்ணீரோடு கொப்பளிக்கிறது. இது அனுபவத்தின் பகிர்வு!!

நாங்கள் வாழந்தது கிளிநொச்சி, எமது முதல் இடப்பெயர்ச்சி, தைமாதத்தில் ஆரம்பமானது, அது ஒரு மென்மாலைப் பொழுது. 

"எல்லாச் சனமும் வெளிக்கிடுதுகள், நாங்கள் ஏன் பாத்துக் கொண்டிருக்க, எல்லாரும் வெளிக்கிடுங்கோ"  அப்பா சொன்ன வார்த்தைகள் இவை. 

எனக்குள் தீராத ஏக்கம், நாங்கள் வாழ்கின்ற வீட்டை, எங்கள் சொந்த மண்ணைவிட்டு போவதா, புலம்பியது மனம். வாழ்ந்த வீட்டையும் சொந்த மண்ணையும் விட்டுச் செல்வது இது எங்களுக்கு முதல் முறையல்ல, ஏற்கனவே 95இல் யாழில் இருந்து இடம்பெயர்ந்து தான் அங்கு வாழ்ந்தோம், 

ஆனாலும் பதின்நான்கு ஆண்டுகளில் அந்த மண்ணில் நாங்கள் வேரோடி விட்டிருந்தோம், தன்னிறைவுப் பொருளாதாரத்தில் அங்கு தன்னிறைவு கண்டிருந்தோம், கட்டுக் கோப்பான நடைமுறைகளும் பாதுகாப்பான  சூழலும், எங்கள் வாழ்விற்கு ஆதாரமாயிருந்தது. 

எங்கள் குடும்பம் அந்த இடத்தில் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்திருந்தது, இடம்பெயர்வு தந்த பரிசு அது, வேறொன்றும் இல்லை, பல இடத்து சொந்தங்களும் எங்கள் காணியில்தான் குடியிருந்தனர்.  

 "சரி அப்பிடியெண்டா, எல்லாரும் போவம்,"  நான் சொல்ல,  மறுத்துவிட்ட என் தந்தையார், "முதலில நீங்கள் போங்கோ, நான் பாத்திட்டு வாறன்" என்றார். 

எனக்குத் தெரியும், அவரால் சட்டென்று அந்த மண்ணைவிட்டு வந்துவிடமுடியாது, ஆமாம், அங்குள்ள மரஞ்செடிகளில்தான் அவரது துடிப்பும் இருந்தது. அந்த மரங்களோடுதான் அவரின் அதிக பொழுதுகள் கழிவது.   

இல்லையென்றும், வேண்டாம் என்றும் பலவாறு பேசி, ஒருமாதிரி ஒரு முடிவிற்கு வந்து, மாலை 5மணியளவில் எங்கள் வீட்டிலிருந்து அகதிகளாய் புறப்பட்டோம், அது தை 9இல் நடந்தது, 

அன்று,  உடையார்கட்டுக்குச்  சென்றோம், ஆனால் அங்கிருந்து விரைவா எழும்பவேண்டும் என்று கூறியதும், வள்ளிபுனத்தில் உள்ள தெரிந்தவர் வீட்டிற்குச் சென்றோம், அங்கும் பல குடும்பங்கள் கூடியிருந்தனர்,  கொண்டு சென்ற பிட்டையும், கத்தரிக்காய் சேர்த்த மீன்குழம்பையும் பெரிய சட்டியில் போட்டு குழைத்துச் சாப்பிட்டுவிட்டு, படுப்பதற்காய் ஆயத்தமான போதுதான் ஒரு உண்மை புரிந்தது,  

'நாங்கள், எங்கள் வீட்டைவிட்டு வந்துவிட்டோம், இனிமேல், மண்ணிலும் புழுதியிலும்தான் படுக்கவேண்டும்' ஓலமிட்டு அழவேண்டும் போல இருந்தது. இதயம் ரணமாய் வலித்தது, 

பேசாமல் இருந்த என்னிடம், என் தாய், "இன்னும் எத்தனை வலிகளை, துயரங்களை அனுபவிக்கப்போகிறோமோ, இப்பவே யோசித்து அழுதால் எப்படி, இருக்கிற இடத்தில் சமாளித்து படுங்கள்" என்று சொன்னார். 

மாமரத்தின் கீழே பாயைவிரித்துப் படுத்துக் கொண்டோம், அடுக்கிவைக்கப்பட்ட பனங்கிழங்குகள் போல வரிசையாக படுத்திருந்தோம், 

மறுநாள் காலையில், சுதந்திரபுரத்தில் இருக்கலாம் என்று தீர்மானித்து ஆளுக்கொரு சைக்கிளை தள்ளியபடி, அதில் சின்னவர்களை இருக்கவைத்துக்கொண்டு புறப்பட்டோம், 

சுதந்திரபுரத்தில் ஒரு பெரிய கொட்டகைபோட்டு, வீடுபோல ஆக்கிவிட்டோம், அன்று அப்பாவும் வந்துவிட்டார், வரும்போது அப்பா கொண்டுவந்த கோழியை வெட்டி, சமைத்துச் சாப்பிட்டோம், ஒரு பத்து பதினைந்து நாட்கள் அங்கே இருந்தோம், உடனே அங்கிருந்தும் இடம்பெயரவேண்டும் என்றதும், இரவோடு இரவாக இரணைப்பாலை நோக்கி நகர்ந்தோம், 

நம்பமுடியாது,  உறைத்த அந்த உண்மையை நாங்கள் ஜீரணிக்கப் பழகிக்கொண்டோம், எங்கள் வீடு, எங்கள் உறவுகள், இவை எல்லாம் இனிமேல் எப்படி மாறுமோ என்ற நிதர்சனம் வயிற்றுக்குள் சில்லிடவைத்தது. நாங்கள் என்ன பாவம் செய்துவிட்டோம், 

'தமிழினம் சொந்த மண்ணிற்காகப் போராடியது, அது குற்றமா?  தன் விடுதலைக்காய் போராடியது, அதுதான் குற்றமா?' 

அங்கிருந்து, இரணைப்பாலையில் வாழ்ந்த நிலை, கூடவந்த உறவுகள் ஒவ்வொன்றாய் பிரிந்து அப்போது ஒரே ஒரு உறவினருடன் எங்கள் குடும்பமும் இருந்தது. பிரிவுகள் சகஜமான அந்த நேரத்தில்தான், 

 பத்து வயது நிறைந்த உறவுக்காரக் குழந்தையை அங்கே இழுந்துவிட்டோம், தலைமயிர் அதிகமாக வளர்ந்துவிட்டது என்று சொல்லி அதனைக் குறைக்கலாம் என அழைத்துச் சென்ற தகப்பனின் கண்முன்னால் குண்டுச் சிதறல்பட்டு குருதி கொப்பளிக்க சடலமானது அந்தக் குழந்தை, தலைமயில் வெட்டிய குறை, என்ன நினைத்ததோ அந்தப் பிஞ்சு மனம், 

'அப்பா, கூட்டிவராமல் பதுங்குகுழியில் விட்டிருந்தால் செத்திருக்கமாட்டேனோ' என நினைத்தாளோ, அல்லது, நொடிக்கு நொடி பயந்து பயந்து வாழ்வதை விட இது மேலானது என நினைத்தாளோ, அந்த ஜீவன் இந்த உலகத்தில் இருந்து விடைபெற்றிருந்தது, இன்று வரை தகப்பனின் மனதில் ஒரு ஆறாத வடுவைக் கொடுத்துவிட்டு. 

அங்கும் இருக்கமுடியாது என்றபோது முள்ளிவாய்க்கால் நோக்கி நகர்ந்தோம், அங்கே எப்போது என்ன நடக்கும் என்பது புரியாத நிலைதான், அதுவரை சாப்பாடு என்பது ஓரளவு சரியாகவே இருந்தது, வீதியில் விற்ற தோசையை வாங்கி வயிற்றை நிரப்பியபடி ஓடிய பயணத்தை என்றும் மறந்துவிட முடியாது, 

நாங்கள் ஓடிக்கொண்டிருந்தோம், சரமாரியாய் விமானத் தாக்குதல் நடந்துகொண்டிருந்தது. ஓடிக்கொண்டிருந்த நாங்கள் அந்தந்த இடத்தில் சுருண்டு படுத்துவிட்டோம், சற்று நேரத்தில், அருகில் வந்த சித்தப்பாவையும் சித்தியையும் காணவில்லையே,  எனப் பார்த்தபோது, எங்களில் இருந்து 100மீற்றர் பின்னால் இருவருமே பிணமாகிக் கிடந்தனர், எடுத்துச் செல்லவும், முடியாமல், புதைத்துவிட்டுச் செல்லவும் முடியாமல் நாங்கள் தவித்த தவிப்பும் வேதனையும் சொல்லில் வடிக்கமுடியாதது. 

பின்னர், அவர்கள் செத்த இடத்திலேயே, தகரத்தால் சிறு கிடங்கு எடுத்து, உடல்கள் மேலே தெரியும்படியே புதைத்துவிட்டு கடந்துவிட்டோம். 

இரணைப்பாலையில் இருந்து முள்ளிவாய்க்கால், முள்ளிவாய்க்காலில் தான் கோதுப்பருப்பை அரைத்து தூளுக்குள் கொட்டி கொதிக்கவைத்து, கறிவைத்தோம், அவித்துவிட்டு அப்படியே உண்டோம், பருப்போடு  உப்பைக் கலந்து உண்டோம், உப்பில்லாதபோது வெறுமனே சாப்பிட்டோம், கடலில் வலை இழுத்து மீன் வாங்கிவந்து அவித்துவிட்டு அப்படியே சாப்பிட்டோம், கொப்பறாவை அரைத்து பால் எடுத்து கறியாக்கினோம், இன்னும் என்னென்னவோ........

அங்குதான் கூடிப்பிறந்த இன்னொரு உயிரையும் காவுகொடுத்துவிட்டு அழுவதற்கு கண்ணீர் இன்றி வாழ்ந்திருந்தோம், அவளோடு சேர்த்து எங்கள் உயிர்த்துடிப்பும் அற்றுப்போய்விட்டிருந்தது, வெறும் நடை பிணங்களாய் உலாவிக்கொண்டிருந்தோம், ஈர உடையோடு தெய்வத்திடம் வைத்த வேண்டுதல்கள் அத்தனையும் அர்த்தமற்றுப் போனதாய் உணர்ந்த இடமும் முள்ளிவாய்க்கால் தான். இனியென்ன வாழ்க்கையில் என்று நினைத்துவிட்டபோதும் கையிலிருந்த பிஞ்சுகளுக்காய் நிர்ப்பந்தமாய் வாழ நினைத்தோம், வாழ்ந்து கொண்டிருக்கிறோம்,.......

அடுத்த நகர்வு முள்ளிவாய்க்காலின் கடைசிப்பகுதி, அது மணல் பாங்கான இடம், அழகான நிலம், ஆனால் சபிக்கப்பட்ட நிலம்,  எங்களின் சின்ன கொட்டகை, சுற்றி பல கொட்டகைகள், அருகில் மாற்றுத்திறனாளி போராளிகளின் இருப்பிடம், தண்ணீர் எடுக்க அவர்களின் இருப்பிடத்திற்குத்தான் போகவேண்டும். அவர்களோடு மருத்துவப் போராளிகளும் அங்கிருந்தனர். 

என் மகனுக்கு தொடர் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது, நிற்ககூட முடியாது தள்ளாட ஆரம்பித்துவிட்டான், கண்கள் செருகிக்கொள்ள,  'கடவுளே, நோய் என் பிள்ளையைக் காவுகொள்ளப்போகிறதா' என நான் கலங்கித் தவித்தவேளை, அவனுக்கு மருந்துகொடுத்து உதவியவர்கள் எமக்கு அருகில் இருந்த மருத்துவப் போராளிகள் தான், 

மாற்றுத்திறனாளிகளாக இருந்தபோதிலும், அவர்கள் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து, சிரித்தபடி கதைப்பதைக்  காணும்போது நெஞ்சம் நெகிழும். இத்தனை அவதியிலும் புன்னகையைக் கைவிடாத அவர்களின் தன்னம்பிக்கையிலும் துணிச்சலிலும் மனம் பெருமிதம் கொள்ளும், கூடப்பிறக்காவிட்டால் என்ன, அண்ணனாக, தம்பியாக, தங்கையாக, அக்காவாக கண்ணுக்குத் தெரியாத நூலிழை போன்ற ஒரு உறவின் துடிப்பு எங்களைக் கட்டியிருக்கிறது தானே, என் மகன், அப்பப்போ அவர்களிடம் சென்றுவிடுவான், 

இரண்டு மூன்று நாட்களின் பின்னர், அவர்களின் முகங்களில் நான் கண்ட கலக்கம், விடுதலை இலட்சியத்திற்காய் வீறுகொண்டு போராடியவர்கள், அந்த இலட்சியத்தின் உறங்கு நிலையை, அதன் மௌனிப்பை, எண்ணி கலக்கம் கொண்டிருக்கவேண்டும். 

அடிக்கடி வந்துவிழும் செல் வீச்சில், எழுந்து செல்லமுடியாத அவர்கள் அலறுகின்ற அவலம், காதைக்கிழிக்கும். எதுவும் செய்யமுடியாத கையாலாகாத்தனம் மனதில் கனக்கும், 

கிழமை, திகதி இதெல்லாம் தெரியாத காலம் அது, காலையில் இருந்து பிள்ளைகள் அழுதுகொண்டிருந்தனர், பசியில், வீட்டில் எதுவும் இல்லை, தண்ணீர் எடுத்துக்கொண்டு வர, பிள்ளைகளின் கையில் பிஸ்கெற் பை இருப்பதைக் கண்டு "யார் தந்தது?" என்றேன், 

"மாமாக்கள்" என்றனர். நிமிர்ந்து பார்த்தேன், புதிதாக, அவ்விடத்திற்கு  பேருந்தில் வந்திறங்கிய அவர்கள் அனைவரும் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்ட போராளிகள், ஓடிவிடவேண்டும் என்றால் கூட எங்களால் முடியும், இவர்கள்?

கடைசிப்போர் உக்கிரம் கண்டிருந்தது. ஒரு பவுண் 8000 ரூபாவிற்கு விற்று, ஒரு கிலோ அரிசியை 2000ரூபாவிற்கு வாங்கிய நாட்கள் அவை. அன்று இரவே இனிமேல் இராணுவத்திடம் சரணடையவேண்டியதுதான், என்றனர், அதற்கு ஆயத்தமாக எங்களைத் தயார் படுத்திக்கொண்டோம், மனம் கேவிக்கேலி அழுதது, இதற்கா இவ்வளவு ஓட்டம், என்றாவது வீட்டிற்குத் திரும்பிவிடலாம் என்ற கனவு பொய்த்துப் போயிற்றே. 

காலையில் போகலாம், என்றிருக்க, சரமாரியாய் வந்து விழுந்தன, செல்கள். எமது கூடாரத்தின் அருகில் மூன்று பெண் குழந்தைகளோடு ஒரு குடும்பமும் இருந்தது. அழகான குழந்தைகள், கணவன் போராளி என்றும், யுத்தம் ஆரம்பித்த பின்னர் ஒரே ஒரு தடவை வந்து சென்றவர் பின்னர் வரவில்லை என்றும் சொன்னார், அந்த அக்கா. கூடவே,  "அவருக்கு எங்களைவிட இந்த மண்மீது பற்று அதிகம்," என்று பெருமிதமாய், சிரிக்கச் சொன்ன அந்த, விழிகள், பத்தே நிமிடத்தில் உயிர்ப்பிழந்துபோகும் என்று நான் கனவிலும் எண்ணவில்லை, வந்த செல் அவர்களின் பதுங்கு குழிக்குள்ளேயே விழுந்ததில் மூன்று குழந்தைகளும் தாயும் அதிலேயே துண்டுதுண்டாய் சிதறிவிட்டிருந்தனர். 

விபரம் அறிந்து ஓடிவந்த அந்த அண்ணனின், நிலையை எப்படிச் சொல்ல? அதுவும் சுட்டியான, கடைசி மகளின்  தலையை பனைமரத்தில் இருந்து அவரேதான் எடுத்து வந்தார். அழகான அந்தக் குழந்தையின் முகம் மட்டும் அப்படியே சிரித்தபடி இருந்தது. அருகில் இருந்த எல்லா கொட்டகைகளுக்கும் ஓடிஓடிச் சென்றுகொண்டிருந்த பிஞ்சுக் குழந்தையை அந்தக்கோலத்தில் பார்க்கவே முடியவில்லை, சில நொடி முதல் வரை, நடமாடிய அவரது குடும்பத்தை, சதைக்குவியலாய் அள்ளி எடுத்து கதறிய அந்தக் கொடுமை........... 

18ம் திகதி அதிகாலையிலேயே அனைவரும் சரணடைய சென்றுகொண்டிருந்தோம், சற்று நேரத்திற்கொருதடவை, செல் உக்கிரமாய் பொழிந்தது, அப்படி செல் பொழிந்த ஒரு பொழுதில், ஓடிச்சென்று, அருகில் இருந்த பதுங்கு குழிக்குள் நுழைந்தபோது, ஏதோ ஒரு வாடை. என்னடா எனப் பார்த்தால், தாயின் மடியில் கைக்குழந்தை ஒன்றும், குழந்தையை மடியில் தாங்கியபடி தாயும் மரணித்துவிட்டிருந்தனர், 

ஐயோ....என்ற கதறலுடன் வெளியே ஓடிவந்துவிட்டேன். அந்தக் காட்சியை அதிக நேரம் வரை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. இந்த மண்ணில் பிறந்ததைவிட அந்தக் குழந்தை வேறு என்ன பாவம் செய்துவிட்டது? இப்படி சாவதற்கு? என்னை நானே பலதடவை கேட்டுக் கொண்டேன். 

சற்று நேரத்தில் தண்ணீர் எடுக்கலாம் எனச் சென்றோம்,  எங்கும் தண்ணீர் இல்லை, ஒரு இடத்தில் சகதியும் சேறுமாக இருக்கவே, அதில் தோண்டி, கலங்கல் தண்ணீராவது எடுப்போம் என்று கைகளால் தோண்டியபோது வெளியே வந்ததும் ஒரு உயிரற்ற உடல்தான். அப்போது நான் எண்ணிக்கொண்டேன், இதைவிட ஒரு நரக வாழ்க்கை இனிமேல் எங்களுக்கு இருக்காது என. வெடி ஓசையும், மரண ஓலமும் ஓயாமல் கேட்கத் தொடங்கியது, அந்த நேரத்தில் நாங்கள் மரண வாசலில் தான் நின்றிருந்தோம். 

நேரம் கடந்துகொண்டிருந்தது, 2மணியளவில் 'சனத்தை போகட்டாம்' என்றதும், ஒருவரை ஒருவர் பற்றிப் பிடித்தபடி, முள்ளிவாய்க்கால் மண்ணைக் கடந்து எங்கள் பாதங்கள் நடைபோட்டது, எங்களோடு கூடவே நடந்துவந்த ஒரு அம்மா, சடாரென்று கீழே விழுவதைக் கண்டதும் குனிந்து பார்த்தேன், வயிற்றைக் கிழித்து சென்றிருந்தது செல். அவருக்கு முன்னால் இன்னும் இரண்டு மூன்று வெற்றுடல்கள். காலை வைக்கமுடியவில்லை, நிற்கவும் முடியாது, வேறு வழியின்றி அவர்களின் உடலில் கால்வைத்து நடந்து சென்றதை நினைத்தால் இப்போதும் என் கால்களில் ஒருவித இறுக்கம்.  

துப்பாக்கி வேட்டுகள் ஓரளவு ஓய்ந்தபோது ஓடுவதும், சத்தம் கேட்டதும் வீதியில் படுப்பதுமாய் நகர்ந்தோம், சரமாரியான சண்டை, எங்கள் வலிகளைக் கண்டு அழுதது  முள்ளிவாய்க்கால் வீதிகள். , எங்கள் வேதனைகண்டு குமுறியது முள்ளவாய்க்கால் காடுகள். 

அக்கா ...அண்ணா...எனக் கதறிய இயலாதவர்களின் குரல், தூக்கிச் செல்லமுடியாத அந்தச் சூழல், இந்த நிலை யாருக்கும் வந்துவிடக்கூடாது. 

நடையாக நடக்கத் தொடங்கி வட்டுவாகல் பாலம் வந்தடைந்தோம், மக்கள் முண்டியடித்து, தள்ளி, தப்பி பாலத்தை தாண்டி வந்தோம், பல மைல் தூரம் நடந்து கொண்டிருந்தோம், எங்கே போகிறோம், என்று தெரியவில்லை, என்ன நடக்கும் என்பது தெரியவில்லை, நடந்தோம், நடந்தோம், 

6 மணியளவில் பெரிய வெளியொன்றில் சோதனைக்காக நிறுத்தப்பட்டு, சோதனை செய்யப்பட்டோம், கையில் சிறு குழந்தையோடு, அந்த நேரம் ....வார்த்தைகளில் சொல்லமுடியாத துயரம் மனதை நிறைத்தது. 

அதன் பின்பும் நடந்தோம், நடந்தோம், நந்திக்கடலின் ஓரத்தில், மிருகங்களைப் போல குவிந்து கிடந்தோம், தண்ணீர் தாகம் நாவை வறட்டியது, தண்ணீர் எடுக்கப்போனால் திரும்பி அந்த இடத்திற்கு வந்துவிடமுடியாது, அப்படி ஒரு நெருக்கடி. எறிந்த பிஸ்கற் பைகளைப் பிடிப்பதற்காக முண்டியடித்த மக்கள், ஒருவேளை உணவிற்காய் வரிசையில் நின்ற மக்கள், எங்கள் நிலைகண்டு சிரித்தது இராணுவம். 

ஒவ்வொருவரும் பெயரைச் சொல்லி, கூப்பிட்டு கூப்பிட்டு உறவுகளிடம், தண்ணீரோடு வந்து  சேர்ந்தனர். கையில் வாங்கிய தண்ணீரைக் குடிக்க மனம் வரவில்லை, யார் குடிப்பது, யாருக்கு இல்லாது போகுமோ என்ற ஏக்கம், எல்லோரும் சிறிது தண்ணீரை விட்டு உலர்ந்த தொண்டையை நனைத்துக் கொண்டோம். 

என் பிள்ளைகள்,..... எங்கள் எண்ணங்களுக்கு மாறாய் நாங்கள் வாழ நிர்ப்பந்திக்கப்பட அவர்கள் தான் காரணம், இழந்துவிட்ட உயிரைவிட இருக்கின்றவர்களைக் காப்பாற்றவேண்டிய தேவையை எண்ணி, அனுபவித்த துன்பங்கள் ஏராளம், 

10...15 கிலோமீற்றர்களை நடைப்பயணமாகவே கடந்துவந்தோம், ஓரிடத்தில் இருந்து பேருந்தில் நெருக்கமாய் அடைந்து கொண்டுவந்தார்கள், ஓமந்தை வரை என நினைக்கிறேன். அங்கு கேட்ட வார்த்தைகள் அனுபவித்து துயரங்கள், .......

முகாம் வாழ்க்கை, அவலப்பட்ட நாட்கள், சாவுக்கும் வாழ்விற்குமான போராட்டம், தொலைத்த உறவுகளுக்கான தேடல்,........

சொந்த மண், மீள்குடியேற்றம், எல்லாம் நடந்தாலும் எதுவுமே இல்லாதது போன்ற வெறுமை  உணர்வை இல்லையென்றுவிட முடியவில்லை, 

காலம் காத்திரமானது...... அது கனதியானது, அதன் பதில்கள் நிறைவானதாகவேண்டும் என்ற பிராத்தனை தான் இன்றுவரை இயற்கையிடம். 

கோபிகை

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.