ஈரத்தீ (கோபிகை) - பாகம் 34!!


பிள்ளைகள் மூவருடனும் கார்ப்பயணம் மிகவும் மகிழ்ச்சியாக  இருந்தது.  ஒருவருக்கொருவர் புதிர்க் கேள்விகள் கேட்டு விளையாடியபடியே வந்தனர். 


எங்களை முன்னால் செல்லவிட்டுவிட்டு பின்னால் வந்து கொண்டிருந்தார் தேவமித்திரன். 

பருத்திதுறை வீதியால் வந்து, மந்திகை கடந்ததும் தேவமித்திரனின் அலைபேசியில்இருந்து அழைப்பு வந்தது.  


வண்ணமதிதான்,  அழைப்பை எடுத்து,  ஸ்பீக்கரில் போட்டாள். 


" அகரனையும் இனியனையும் நான் கூட்டிக்கொண்டுபோகவவே,  பிறகு பின்னேரம் கொண்டு வந்து விடுறன்" என்றேன். 


"சமர்... நேரே  அங்க.... வீட்ட போவம்.... சமைச்சு சாப்பிட்டுவிட்டு பின்னேரமா  போங்கோ.... "என்றார். 


"இல்லை... வேண்டாம்... நாங்கள்... " நான் சொல்வதற்குள், 

"முதல்ல.... பாமதி அக்காவே நிக்கிற  கமநல உணவகத்துக்குப் போய் சாப்பிட்டுவிட்டு பிறகு வீட்ட போவம்... " என்று விட்டு அழைப்பை துண்டித்து விட்டார்.  


மகிழுந்தை திருப்பியபடி,  நெல்லியடி போகிற வீதியில் பயணித்தோம்.  

பிள்ளைகள் மூவருக்கும் ஒரே குதூகலம்.... 


மூத்தவிநாயகர் சந்தியில் இருந்த கமநல உணவகத்தில் தேவமித்திரனின் மகிழுந்து நின்றது. 

எல்லோருமாக உள்ளே சென்றபோது,  இடியப்பம், இட்லி, அப்பம், உளுந்துவடை, எல்லாவற்றினதும் வாசம் ஒன்றாக வந்தது.  

தரை முழுவதும் கழுவிவிடப்பட்டு சுத்தமாக இருந்தது.  கண்ணாடி தடுப்புக்கு அப்பால் நின்று,  பாமதி அக்காவும் மற்றவர்களும் விரைவாக உணவு தயாரித்துக் கொண்டிருந்தனர். 


எங்களைக் கண்டதும் அவவின் முகத்தில் ஏற்பட்ட ஆனந்தம்... தோசையைச் சுட்டபடியே, 


"வாங்கோ...வாங்ககோ....என்ன... கடற்கரையாலை அப்பிடியே இஞ்ச வாறியள்  போல... " என்றவரிடம்.... 


"ஓமக்கா... ஆக்களுக்கு சரியான பசி...." என்று பிள்ளைகளைக் காட்டிவிட்டு, அவர்கள் மூவரும் முறைக்க,  சிரித்தபடியே,  

"எங்களுக்கும் தான்...  " என்றார். 


அருகில் நின்று தோசையைப் பொதிசெய்து கொடுத்துக் கொண்டிருந்த பெண்ணிடம்,  

"பார்கவி... நான் இதைப்பாக்கிறன்,  நீ சாப்பாடு எடுத்து எல்லாருக்கும் குடு" என்றதும் 

"சரி.. அக்கா... நான் பாக்கிறன்.... "  என்ற அந்தப் பெண்ணின் முகத்தை எங்கேயோ பார்த்த மாதிரி இருந்தது. 


"நல்ல விளையாட்டு போல... " என்று இனியனிடம் சிரித்தார். 


"என்னக்கா... பார்கவியையும் கடைக்கு கூட்டிக்கொண்டு வந்திட்டியள் போல... " என்ற தேவமித்திரனனிடம் 

"முன்று நாள் விடுமுறையாம்.... வீட்டிலை  ... சும்மாதானே நிக்கிறன்,  கடைக்கு வாறன் அக்கா,  எண்டா... பிறகு எனக்கென்ன... கூட்டிக் கொண்டு வந்திட்டன்" என்ற பாமதி அக்காவையும் தேவமித்திரனையும் பார்த்துச் சிரித்தபடி வந்த அந்தப்பெண்  

" என்ன சாப்பாடு தாறது தேவமித்திரன் அண்ணா? "என்றதும்

"எல்லா சாப்பாட்டையும் எடுத்துவையன்,  பிடிச்சதை சாப்பிடட்டும்..." என்றா பாமதி அக்கா. 


"பாமதி அக்கான்ரை தங்கச்சி... ..". என்று பார்கவியைக் காட்டியபடி எனக்கும் மேகவர்ணன் அண்ணாவுக்கும் அறிமுகம் செய்து வைத்தார் தேவமித்திரன். 


எனக்கும் வண்ணமதிக்கும் நெய் தோசை என்றால் அப்படி ஒரு விருப்பம்....கேட்பதற்கு ஒரு மாதிரி தயக்கமாக இருந்ததால் பேசாமல் இருந்தேன். 


"வண்ணமதிக்கு என்ன விருப்பமாம் சமர்?  என்றார் மேகவர்ணன்" அண்ணா. 


அம்மாவுக்கும் மகளுக்கும் நெய் தோசையும்  அப்பமும் எண்டால் காணும் ...என்ற தேவமித்திரன், 


"அகரனுக்கும் இனியனுக்கும் பூரியும் உளுந்து வடையும்" என்றார் 


"எனக்கும் உனக்கும்....?"   என்ற மேகவர்ணன் அண்ணாவிடம் 


"இவையள் சாப்பிடுறது எல்லாவற்றிலையும் நாங்களும் சாப்பிடுவம்" என்றார். 


தன்னுடைய நெருக்கமான உறவுகள்,  என்ன விரும்பி சாப்பிடுவார்கள் என்று தெரிந்து வைத்திருப்பது ஆழமான ஒரு அன்பின் வடிவம் அல்லவா.... உறவுகளைப் புரிந்து வைத்திருப்பதற்கான அடையாளம அல்லவா... 


மனம் நிறைந்து தித்திக்க, தேவமித்திரனைப் ,  பார்த்தேன். 


எதேச்சையாக என்னைப் பார்த்தவர் கண்களைச் சிமிட்டி 'என்ன'  என்கிற தோரணையில்  கேட்க, 

தலையை இடமும் வலமுமாக ஆட்டிவிட்டு பேசாமல் இருந்தேன். 


"நாங்கள் போட்டுச் சாப்பிடுவம், பார்கவியும் எங்களோடை  இருந்து சாப்பிடுங்கோ" உணவு பரிமாறிய பார்கவியைப் பார்த்தபடி சொன்னேன். 


"இல்லை....வேண்டாம்....." 


"அதுக்கென்ன... கவி.. சமர்... கேட்கிது... நீயும் இருந்து சாப்பிடு.... " என்றார் பாமதி அக்கா.


"சித்தி...இதிலை வாங்கோ... " இனியன்  கூப்பிட அருகில் சென்று அமர்ந்து கொண்ட பார்கவியில் மற்றப்பக்கம் மேகவர்ணன் அண்ணா அமர்ந்திருந்தார். 


அங்கு நுழைந்த நேரத்தில் இருந்து அவரின் பார்வை, பார்கவியையே சுற்றிக் கொண்டிருந்ததை நான் கவனித்தேன். 


இப்போது அருகருகே அமர்ந்து கொண்ட இருவரும் சங்கடமாகப் பார்த்து, சிரித்துக் கொண்டனர்.  


அவர்களின் பார்வையில் வியப்பு நிறைந்த அன்பு, நிறைந்திருந்தது. தீ தொடரும்... 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.