கரிகாலன் காவியம் (கோபிகை) - பாகம் 3!!

 


மட்டக்களப்பு,  அம்பாறை,  திருகோணமலை ஆகிய சிற்றரசுகளை ஒன்றிணைத்த கிழக்கு இராசதானி, வளமும் வனப்பும் நிறைந்த இடம். 


துறைமுக நகரான திருகோணமலை,  மீன்பாடும் தேன்நாடு என்று வர்ணிக்கப்படும் மட்டக்களப்பு,  பச்சைப்பசேலென்ற. வயல்நிலங்களை அதிகம் கொண்ட அம்பாறை,....மூன்று இராசதானிகளும் தற்போது சிற்றரசுகளினால் ஆட்சி செய்யப்பட்டாலும் சுயமான,  நீதியான முடிவுகள் ஒரு போதும் எடுக்கப்படுவதேயில்லை. 


 

மட்டக்களப்பு மண்ணில் தான் சுவாமி விவேகானந்தர் பிறந்தார். 

அது மட்டுமல்ல,  மட்டக்களப்பின் வாவிகளில் நீரமகளிர் என்கிற கடல் வாழ் கன்னிகளின் பாடல் ஒலி, இசையாக ஒலிப்பதாக கூட சொல்லப்படுகிறது. 


வெள்ளாமை விளைகிற பூமிகள் அதிகம்,   இங்குள்ள மக்களின் பெருமளவினர் முஸ்லீம் மக்களாக  உள்ளனர்.  


கிழக்கு மாகாண மக்களின் பேச்சு வழக்கு சற்றே வித்தியாசமானது. அது நளினமும் நயமும் கொண்டது. 


2006 இல் எதிர் அரசினால் வடக்கு,  கிழக்கு   வேறுவேறானது  என்று பிரிக்கப்பட்டாலும்  வடக்கு கிழக்கு என்பது தமிழர்களின் ஒன்றிணைந்த இராச்சியம், என்பது யாவருக்கும் தெரிந்த ஒன்று தான். 


வடக்கையும் கிழக்கையும் இணைத்து புதிய இராச்சியத்தை உருவாக்க வேண்டும் என்கிற தீராத வேட்கைதான் கரிகாலரின் கனவு.  அந்தக் கனவுக்காகத்தான் கிழக்கு மண்ணில் தன் பணிகளை முன்னெடுத்துக் கொண்டிருந்தார் சேனாதிபதி புகழேந்தி. 


தாம் அறிந்த செய்தி, மனதில் கனத்தைக் கொடுக்க, 

" பாரி... விரைவாகப் போ... " என்று தனது குதிரைக்கு கட்டளை பிறப்பித்தபடி சேணத்தை இரண்டு ஆட்டு ஆட்டவும் காற்றைப்போல விரைந்தது பாரி. 


மட்டக்களப்பில் கொக்கட்டிச்சோலை பகுதியில் தான், அவர்   சில திங்களாக நிலைகொண்டிருந்தார்.  


கிழக்கு இராசதானியின் முக்கிய மையம் திருகோணமலை.  ஒரு காலத்தில் தலைநகராக விளங்கிய இடம்.  அங்கிருந்த சிற்றரசு எதிரிப்படைக்கு விலை போய்விட்ட தகவல்,  அவர் ஏற்கனவே ஊகித்திருந்த விடயம் எனினும் அதைக் கேட்கிற போது,  இதயம் வலிக்கவே செய்தது. 


துரோகம்.... 

அது தந்த பரிசு தானே... இந்த அவலம்... இந்த அடிமைத்தனம்... 


பணத்திற்கோ, பதவிக்கோ, விலை போவதால் யாரும் எதையும் சாதிக்க முடியாது என்கிற ஆழ்ந்த உண்மை பலருக்கு புரிவதேயில்லை. 


' அரசு என்பதும் அரசியல் என்பதும் என்ன,  அது மக்களுக்கு சேவை செய்வது தானே' என கரிகாலர் பலமுறை சொல்லியிருக்கிறாரரே ......


ஏனோ, சிற்றரசுகள் அவரது வார்த்தையை உணர, உள்வாங்க மறந்து, மறுத்துவிட்டனர்,  ஆனாலும் அதற்கான விலையை அவர்கள் கொடுத்தாகத்தான் வேண்டும்... அந்தநாள் தூரத்தில் இல்லை என நினைத்தபடி, பெருமூச்சு ஒன்றை வெளிவிட்டார் சேனாதிபதி புகழேந்தி. 



இந்த விடயங்கள் தொடர்பான சில முக்கிய சந்திப்புகளை மேற்கொள்வதற்காகவே அவர் திருகோணமலைக்கு பயணப்பட நினைத்திருந்தார். தற்போது நடந்த சம்பவம் அவரது பயணத்தை விரைவாக்கியிருந்தது. 



"மக்கள் கோரமாக அழிக்கப்பட்டதை நினைவு கூரும் முகமாக இடம்பெற்ற கஞ்சி வழங்கும் நிகழ்வில் பல்கலைக்கழக மாணவி உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்"  என்கிற தகவல் அறிந்த போது அவருக்கு ஏற்பட்ட ஆத்திரம்... 


ஆனாலும் தன்னை நிதானப்படுத்திக் கொண்டார்.  மன்னர் கரிகாலருக்கும் படைத்தளபதி பொற்செல்வனுக்கும் இத்தகவலை தெரிவிக்க வேண்டும்"  என நினைத்தபடி,  குதிரையை விரட்டினார்.  


அவர்,  களுவாஞ்சிக்குடி,  என்கிற சிறுநகரை அண்மித்த போது,  

பழ வியாபாரி ஒருவர் வழிமறித்தார்.  


எச்சரிக்கை உணர்வுடன்,  இடையில் சொருகியிருந்த குறுவாளில் கையை வைத்தபடியே,  குதிரையை நிறுத்தியவர், நிமிர்ந்து பார்ப்பதற்குள், குதிரையின் கழுத்து பட்டியில் சிறு துண்டொன்றைச் சொருகிவிட்டு, வழி மறித்த பழ வியாபாரி மாயமாகியிருந்தார். 


தன்னில் இருந்து பல  மீற்றர் தூரம் சென்று விட்ட,  அந்த மனிதரை உற்றுநோக்கியபடி,  குதிரையின் கழுத்திலிருந்த காகித துண்டை எடுத்து பிரித்துப் பார்த்தார்.  


வாகனேரி பகுதியில் உள்ள வயல்வெளிக்குச் செல்லுமாறு தெரிவித்தது அந்தக் காகிதம். 


மட்டக்களப்பு நகரைக்கடந்து,  வாகனேரி செல்வதற்கு முன்னர், வந்த தகவலை உறுதிப்படுத்த எண்ணியவர்,  நகரின் நடு மத்தியில் இருந்த பூங்காவிற்குச் சென்றார். 


அங்கு கச்சான் விற்றுக்கொண்டிருந்த மூதாட்டி,   பச்சை நிறத்திலான துணி ஒன்றை எடுத்து தனக்கு முன்னால் விரித்துவிட்டு, அதன் அருகில் நீலநிற துணி ஒன்றையும் விரித்துவைத்தார்.

அதன்பிறகு, மெல்ல நிமிர்ந்து தலையை மேலும் கீழுமாக ஆட்டவும் 

மன்னர் கரிகாலர்,  படைத்தளபதி பொற்செல்வன் இருவரும் கிழக்கு மாகாணத்திற்கு வந்திருக்கிறார்கள் என்ற தகவல் உறுதி செய்யப்பட்டது. 

முகத்தில் ஒரு பரவசம் பொங்க,  வாகனேரி நோக்கி பாரியை விரட்டினார் சேனாதிபதி புகழேந்தி. 


காவியம் தொடரும்.... 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.