கரிகாலர் காவியம் ( கோபிகை) - பாகம் 4!!

 


வெய்யோன் தன் வெள்ளிக்கதிர்களை வீசியபடி வானவீதியில் வர்ண உலா வந்துகொண்டிருந்தான். 


செங்கலடி மற்றும் கிரான் பிரதேசங்களின் எல்லையை அண்டியிருந்த சித்தாண்டி என்கிற சிறு கிராமத்தில் சுற்றிலும் மா, பலா, தென்னை என தருக்கள் நிறைந்த இயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் அந்தக் காணியில், 

புல்லினால் வேயப்பட்ட கூரை...மண் சுவர்.  ஒரு அறை,  ஒரு விறாந்தை, சிறிய சமையல்கூடம் என்கிற அளவில் இருந்தது அந்த வீடு. 


அந்த வீட்டின் சுவர்,  வரிச்சு தடி கட்டி, அதன்  இடைவெளிக்குள், மண் குழைத்து, உருண்டைகளாக அடைக்கப்பட்டு அழகான ஒரு ஓவியம் போல கட்டப்பட்டிருந்தது. 


வீடு முழுவதும் பால் வாசனை வீசியது.  அறையில் ஒரு பக்கம் முழுவதும் மண் பானைகளில் தயிருக்காக உறை ஊற்றி வைக்கப்பட்டிருந்தது. 


மண்ணிலே செய்யப்பட்டு தயிர் சட்டிகள் சுவரோடு பொருத்தப்பட்ட பலகை தாங்கியில் அடுக்கப்பட்டிருந்தன. 


அறையின் நடுவே விரிக்கப்பட்ட கம்பளத்தில் நிமிர்ந்து அமர்ந்திருந்தார் மன்னர் கரிகாலன்.  

அந்த வீட்டில் தான் அவருடைய அன்னை அடைக்கலமாகியிருக்கிறார். 


தாயைப்பார்த்து ஆண்டு ஒன்று கடந்து விட்டது.  அன்னையைப் பார்க்கும் ஆவலில் ஓடோடி வந்தவருக்கு அன்னை அங்கு இல்லாதது சற்று ஏமாற்றமே. 


பார்வையை வாசலிலும் எண்ணங்களை தன் பணிகளிலுமாக வைத்திருந்தவர், படலை திறபடும் ஒலியில் எட்டிப் பார்த்தார்.


வெளியே இருந்த அந்த வீட்டின் காவலாளியான சிம்மன் மெல்ல குரைத்து அவர்களின் வருகையைத் தெரிவித்தது. 


வாசல் வரை வந்து,  சிம்மன் உரைத்த சேதியில் மகன் வந்திருப்பதை புரிந்துகொண்ட  மகாராணி கோப்பெருந்தேவி,  மகனைக்காணும் ஆவலும் தாய்ப்பாசமும் சுரக்க,  தலையில் இருந்த சுமையைப் பொருட்படுத்தாது விரைந்து நடந்து உள்ளே வந்தார். 


அதுவரை,  எந்த பதற்றமும் இல்லாமல் அறையின் நடுவே அமர்ந்திருந்த கரிகாலர்,   அன்னையின் தலைச்சுமையைக் கண்டதும்   எழுந்தோடி வந்து அதனை இறக்கிவிட்டிட்டு,     தாயின் பாதங்களில் மண்டியிட்டு அமர்ந்து கொண்டார். 


அந்த வீட்டின் உரிமையாளரான தாயம்மா,  ஒரு காலத்தில் அவர்களின் பணிப்பெண்.  இல்லை... இல்லை... விசுவாசமான பணிப்பெண்.  


நாடுநகரிழந்து தேசம் துறந்து அந்தரித்து நின்ற வேளையில் ஆதரவு கொடுத்து, அரவணைத்து, தன் வீட்டில்,  மகாராணியை  தங்கவைத்திருந்தார்.


மன்னரிடம் ஏதோ சொல்ல முற்பட்ட தாயம்மா,  தாயும் தனயனும்  பேசட்டும் என நினைத்து,  அந்த வீட்டில் இருந்து சற்று தள்ளியிருந்த சிறுகுடிலுக்குள் புகுந்து கொண்டார். 


தாயின் கால்களைத் தழுவிக் கொண்ட மன்னர் கரிகாலன், 


"தாயே... இது என்ன கொடுமை,  பட்டத்து ராணியாக பொன்முடி சுமந்த தங்கள் தலையில், தயிர் சட்டி சுமப்பது தகுமோ?  


மைந்தனாக நானிருந்து என்ன பலன்....ஐயகோ....விதி ஏன் தாயே இப்படி கோரமாக விளையாடுகிறது?" என்று கண்ணீரோடு புலம்பினார்.  


"மகனே... எழுந்திரு... ஏன் இப்படி கலங்குகிறாய்? இது,   சோற்றுக்கு வழியில்லாமல்,  வறுமையில் நான் செய்கிற பணி அல்ல.  தன் மக்களை சுதந்திரமாகவும் சுபீட்சமாகவும் வாழவைக்க,  என் மைந்தன் கொண்டிருக்கிற கனவுக்கு,  நான் பத்துமாதம் சுமந்து கும்பி கிழித்து பெற்றெடுக்காத என் பிள்ளைகளின் வேட்கைக்கு, பெரும்படை திரட்டவேண்டிய தேவைக்கு,  நான் ஆற்றுகின்ற சிறுபணி.  


திருமணமாகி சில வருடங்களிலேயே,  அந்நிய ஆக்கிரமிப்பில், உன் தந்தையைப் பறிகொடுத்துவிட்ட நான்,  அப்போது அனுபவிக்காத இன்னல்களா,  இடர்களா...? 


மகாராணி என்கிற பட்டத்தோடு அரியணையில் அமர்ந்திருப்பதது மட்டும் தானா, என்னுடைய கடமை,  இல்லை மகனே.... 


எழுச்சியில் பூரித்துப்போனது போல,  வீழ்ச்சியில் துணை இருப்பதும் என்னுடைய   கடமைதானே....


நான் என்னுடைய கடமையைத்தான் செய்கிறேன், அதற்கு உன்னுடைய கண்ணீரால் தடை போடாதே... நீ ஒரு விடயத்தை வேண்டாம் என்று சொன்னால், அதை என்னால் செய்ய முடியாது,  ..." என்றார். 


"தாயாரே... உங்கள் வார்த்தைகளால் என்னை மௌனமாக்கிவிட்டீர்கள்.... ஒரு மகனாக,  இந்த பெரும் பாவத்தை நான் எவ்விதம் தீர்ப்பேன் தாயே? "


"என் அன்பு மகனே... நீ என் குடும்பத்து ராஜவிளக்கு,  நீ கலங்கிப்போனால் என்னால் தாங்க இயலாது,  தவிர,   இது எப்படி பாவமாகும்?  இது தேசக்கடமை... 


உன் கட்டளையின் படி,  நான் இலக்கியப்பணிகளை  சரிவர முன்னெடுத்துக் கொண்டுதான் இருக்கிறேன். இது மக்களை நேருக்கு நேர் சந்திக்க கிடைக்கும் சந்தர்ப்பம்... இப்போது மக்களைச் சூழ்ந்திருக்கிற அபாயம் சாதாரணமானதல்ல, அது முழுமையான அழிப்பிற்காக முன்னெடுக்கப்படும் ஆரம்ப நடவடிக்கை என்பது நீ அறியாதது அல்லவே... 


வீச்சோடு தகிக்கிற உன்  தாகம்... அரியணையைக் கைப்பற்ற வேண்டிய கட்டாயம்,  இவற்றுக்கு நாங்கள் இன்னும் வேகமாகவும் அர்ப்பணிப்புடனும் செயற்படவேண்டும்... " என்றார். 


"அன்னையே... உங்கள் பாதுகாப்பு பற்றித்தான் நான் பயப்படுககிறறேன்" என்று கூறிய மகனிடம்,  


"நச்செள்ளையைப் பற்றி நீ அறியாததல்ல,   என்னுடைய பாதுகாப்பு அவளுடைய பொறுப்பு என நீ சொன்னதால் மட்டுமல்ல,   அரண்மனை சார்ந்த அனைத்து விடயங்களிலும் அவள் எப்போதும் அக்கறையும் மிக கவனமாகவும் இருப்பவள், நச்செள்ளையைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு நீ ஏன் பயப்படுகிறாய்?  தேசம் விடுதலை பெற்று,  நீ மீண்டும் அரியணை ஏறாமல் எனக்கு எதுவும் ஆகாது....பயப்படாதே.... மகனே... " என்ற தாயின் வார்த்தைகளால் சற்று நிம்மதியடைந்த கரிகாலர்,  


"அமருங்கள் அன்னையே... உங்கள் மடிமீது தலைவைத்து எத்தனை திங்கள் ஆயிற்று.... "  என்றார். 


தன் மடியில் சிறு பையனைப் போல,  தலைசாய்த்திருந்த கரிகாலரின் முடிகோதிய கோப்பெருந்தேவி,   


"பூங்குழலியையும் பிள்ளைகளையும் பார்த்தாயா?"  என்றார். 


"இல்லை அம்மா... போன தடவை உங்களைப் பார்த்து விட்டு அவர்களைப் பார்த்தது தான்... அதன் பிறகு பார்க்கவில்லை.... இடையில் ஒருமுறை, பூங்குழலியின் ஓலை வந்தது,  பிள்ளைகள் பார்க்க ஆசைப்படுகிறார்கள் என்று....என்னால் பதில் ஓலை அனுப்ப கூட முடியவில்லை... " என்றார் சிறிது துயரத்தோடு. 


"எல்லாம் மாறிவிடும்... கவலைப்படாதே... " என்றவர் யோசனையோடு தலையை ஆட்டினார். 


காவியம் தொடரும்.... 









 






கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.