ஈரத்தீ (கோபிகை) - பாகம் 33!!

 


அன்று சனிக்கிழமை.  அதிகாலையில் வண்ணமதியும்  நானும் பருத்தித்துறை கடற்கரைக்குச் சென்றோம். 


அதிகாலையில் உதித்து எழுந்து வருகிற ஆதவனின் வண்ணக்கோலத்தைப் பார்க்க வேண்டும் என்பது அவளுடைய விருப்பம்.  


தேவமித்திரனுக்கும் சொல்லிவிட்டுச் சென்றிருந்ததால் நாங்கள் போய், சில நிமிடங்களில் அவரும் அகரன்,  இனியன் இருவரோடும் வந்ததுவிட்டார். 


கடலின் முனையில் வந்து சென்ற அலைகளின் அழகு மனதை இதப்படுத்தியது.  

பிள்ளைகள் மூவரும் கடல் நீரில் கால் நனைத்து விளையாடினார்கள். 


அப்போது தங்கத்தட்டில் உருக்கி வார்த்த கோளம் போல,  சூரியன் தன் பொன்னொளிகளைப் பரப்பியபடி கிழக்கிலிருந்து வந்து  கொண்டிருந்தார். 


"மதீம்மா... அங்க பார்... சூரியன் வாற அழகை... " தேவமித்திரன் சொல்ல,  விளையாடிக் கொண்டிருந்தவள், 

 குதித்து திரும்பி எழுந்து ஓடி வந்தாள். 


வானத்தை நிறைத்தபடி , வானகன் புறப்பட்டு வந்த அழகு அந்த மென் பொழுதை மேலும் அழகாக மாற்றியது. 



ஓடிவந்து,  என் கைகளுக்குள் சிறைப்பட்டவள்,  "அழகாக இருக்கம்மா.... " என்றாள் என்னிடம். 


"அகரன்..... அண்ணா... அங்க பாருங்கோ... " இவள் களிப்புடன் கூச்சலிட்டு அழைக்க,  அகரனும் இனியனும் எழுந்து பார்த்தனர். 


அகரனும் இனியனும் நல்ல நண்பர்களாகி விட்டிருந்தனர். அப்பப்போ,  அவர்களுடன் வண்ணமதியும் இணைந்து கொண்டு மகிழ்ச்சியாக விளையாடினார்கள். 


மூவருமாக அங்கும் இங்குமாக ஓடி விளையாடிக்கொண்டிருக்க,  நானும் 

தேவமித்திரனனும் கற்பாறைகள்  இருந்த இடத்தில் அமர்ந்து கொண்டோம். 


பிள்ளைகளையே பார்த்துக் கொண்டிருந்த தேவமித்திரனின் கண்களில் மகிழ்ச்சியின்   கோடுகள் தெளிவாகத் தெரிந்தன. 


"சமர்....  அகரனும் வண்ணமதியும் எவ்வளவு சந்தோசமா விளையாடுகினம் பாத்தியே... நாங்கள் எதை நினைத்து அவர்களை எங்களுக்கானவர்களாக எடுத்துக் கொண்டோமோ... அது நிறைவேறி விட்டது... " என்றார். 


"ஓமோம்.... அது உண்மை தான்.. ரெண்டு பேருமே நல்ல சந்தோசமா இருக்கினம்... சிநேகமும் சீராட்டலும் இல்லாத வீடு,  சின்வர்களுக்கு சிறைதானே,  வண்ணமதியும் அகரனும் அப்பிடி ஒரு வாழ்க்கையை தான் இதுவரைக்கும் அனுபவிச்சிருக்கினம்... எங்களிட்ட வந்த பிறகு தான்,  இதமான இனிமையான வாழ்க்கையை வாழ்கிறார்கள்...ரெண்டு பேரினதும் எதிர்காலத்தை வளமானதா ஆக்கவேணும்..எந்த துறையிலை சாதிக்கவிரும்புகிறார்களோ அந்த துறையிலை நல்லா படிக்க வைச்சு சாதனையாளர்களாக மாற்றவேணும் "என்றேன். 


"சமர்... ஒரு ஆணோ அல்லது பெண்ணோ,  குழந்தைகளைப் பெற்று விட்டால் அவர்களுக்காகத்தான் வாழ வேண்டும்.  தங்கட தனிப்பட்ட  ஆசாபாசங்களுக்கோ தேவையற்ற விருப்பங்களுக்கோ இடம்கொடுக்க கூடாது. 


 


இந்த வயசிலை நீ எடுத்திருக்கிற இந்த முடிவு உண்மையிலேயே போற்றப்படவேண்டிய ஒன்று.  எத்தனையோ பெண்கள் எவ்வளவோ விதமாக வாழும் போது, நீ  ஒரு பெண் பிள்ளையை தத்தெடுத்து வளர்க்கிறது உன்னதமான விசயம்... "என்றார். 


நான் சிரிப்போடு அவரைப் பார்த்தேன். 


"என்ன சிரிக்கிறாய்?"   என்று கேட்டவரிடம் 


"நீங்கள் மட்டும் என்னவாம்... உங்கட எண்ணமும் மிக உயர்வானது தானே... " என்றேன். 


"உன்னைப்பற்றி அப்பா.. எவ்வளவு பெருமையாகச் சொன்னவர் தெரியுமே... "


"மாமாவுக்கு நான் செல்லப்பெண...அதனாலை அவர் பெருமையாத்தான் சொல்லுவார்" என்றேன். 


என்னையே பார்த்துக் கொண்டிருந்தவர்,  ஏதோ சொல்ல வாயெடுக்கவும் 


"ரெண்டு பேரும் எப்பிடி இருக்கிறியள்?  " என்றபடி மேகவர்ணன் அண்ணா அங்கு வரவும் சரியாக இருந்தது. 


"நாங்கள் நல்லா இருக்கிறம்.... நீ எப்பிடி இருக்கிறாய்? " என்ற தேவமித்திரனின் தோளைத்தட்டியபடியே அருகில் அமர்ந்து கொண்டார். 


"அண்ணா என்னத்திலை வந்தனிங்கள்?" என்றேன்.  


"மோட்டச்சைக்கிளிலை அண்ணா கொண்டு வந்து விட்டிட்டுப் போறார்... " என்றவர் தேவமித்திரனனிடம் திரும்பி,  


"சின்னவனுக்கு கிளினிக் இருக்காம்.. அண்ணா கூட்டிக் கொண்டு போகப்போறார்,  இவன்தான் கடற்கரைக்கு வாறனெண்டு சொன்னவன்... சரி... இவையளோடையே போய் அப்பாவைப் பாத்திட்டு வருவம் எண்டுதான் வெளிக்கிட்டனான்..." என்றார். 


"மாமாவை கனநாள் நீங்கள் காணேல்லை போல... " என்றேன். 


"ஓம் தங்கச்சி, காணேல்லை தான்... அங்க ஆஸ்பத்திரியில் கண்டதுக்கு பிறகு இன்னும் பாக்கேல்லை.. ..." என்றவர், 



"தேவா... அகரன் சந்தோசமாக இருக்கிறான் தானே?"   என்று மகிழ்ச்சி கலந்த தவிப்புடன் கேட்டார். 


"ஓம் மச்சான்... எங்களோடை சேர்ந்து  பாசத்தில் இணைவானோ  என்று எனக்கு நிறையவே யோசனை இருந்தது.  ஆனால் அகரன் கெட்டிக்காரன்... அதோடை நல்ல புரிதலுள்ள பிள்ளையும் கூட... அப்பாவோடையும் என்னோடையும் மட்டுமில்லாமல் சமர்,  வண்ணமதி ரெண்டு பேரோடையும் கூட ஆள் நல்ல ஒட்டுதல்... " என்று சிரித்தபடி சொன்ன தேவமித்திரனை மகிழ்ச்சியோடு பார்த்தேன். 


அவர்களோடு எங்களையும் ஒரு அங்கமாக நினைக்கிற அவருடைய அன்பில் மனம் நிறைந்தது. 


"அதுதானேடா வேணும்... கேக்கவே சந்தோசமாக இருக்கு" என்றார் மேகவர்ணன் அண்ணா. 


பிள்ளைகள் விளையாடி முடித்து வந்ததும்,  

" அம்மா.... வண்ணமதி நல்லா நனைஞ்சிட்டா... காருக்குள்ள உடுப்பு மாத்திவிடுங்கோ"  என்ற அகரனிடமும் 


"ஓம்.. அன்ரி... ஈரத்தோடை நிண்டால் காய்ச்சல் வந்திடும் "  என்ற இனியனிடமும்

தலையை ஆட்டியபடியே 

"மதிக்குட்டி வா... "என்று விட்டு காருக்கு 

நடந்தேன். 


தேவமித்திரனும் மேகவர்ணன் அண்ணாவும் அகரனையும் இனியனையும் உடை மாற்ற வைத்தனர். 


முனையடி சந்தையில் மீனும் வாங்கிக் கொண்டு எல்லோருமாக வீடு நோக்கிப் புறப்பட்டோம். 


அகரனும் இனியனும் எங்களோடு வந்துவிட,  தேவமித்திரனும் மேகவர்ணன் அண்ணாவும் ஒன்றாக வந்தனர். 


தீ தொடரும்... 



Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt





















கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.