கரிகாலர் காவியம் (கோபிகை) - பாகம் 2 !!

 



மேகத்திரளின் மீதிருந்து நிலவு மீள்வது போல,  கடலின் ஆழத்திலிருந்து மெல்ல மெல்ல எழுந்து வந்தான் கதிரவன். 


பாடி வந்த கடல் அலைகள் நுரை முத்துக்களால் வல்வை மண்ணை முத்தமிட்டு முத்தமிட்டு திரும்பிச்சென்றன. 


"ஏலேலோ ஐலசா... ஏலேலோ ஐலசா... "  பாடலோடு வந்த வள்ளத்தில் இருந்து குதித்து இறங்கினான் பொற்செல்வன். 


மீன்களை எடுப்பதற்காக வந்திருந்த மங்கையர் கூட்டம் அவனை புன்னகையோடு பார்த்தது.  அம்மா என்றும்  அக்கா என்றும் தங்கை என்றும் அவன் உறவுகளை அழுத்தமாக்கியதன் பலன் அது.   


வெற்றிலை போட்டு சிவந்த உதடுகளை நாவால் ஈரப்படுத்தி, ஒரு விதமாக நளினம் செய்தபடி விரைந்து வந்த செங்குழலி,  


 "ம்... ம்... தள்ளித்தள்ளி நில்லுங்கோ... ஆற அமர மீனை வாங்கலாம்,  என்னத்துக்கு இப்ப ஒருத்தரை ஒருத்தர் முட்டி மோதுறியள்?"  என்றாள் பொற்செல்வனை நன்றாகப் பார்த்தபடி. 


அவனோ அவளைப் பார்ப்பதைத் தவிர்த்து விட்டான். 


அவள் அப்படிச் சொல்வதற்கு காரணம்,  தேக்குமரத் தேகத்துடன் இருந்த அவனுடைய வசீகரமான தோற்றம் தான்.  ஒரு நாளின் முக்கால் பாகத்தை பயிற்சி செய்தே கழித்து விட்ட அவன், அங்கிருந்த பல கன்னிப் பெண்களுக்கு பிரமிப்பாகத்தான் இருந்தான். 


தன்னைத் தவிர,  அவனருகில் யாரும் சென்று விடக்கூடாதென்ற அன்பு மிகுதியால் ஏற்பட்ட பொறாமையின் வெளிப்பாடு அது. 


எல்லாம் புரிந்தாலும் எதும் புரியாதவன் போலவே இருந்து விடுவது அவனுடைய வழமை. 


சிறு வயதில் இருந்தே, காட்டுக் கரையாக இருந்த பயிற்சிக் குடிலில் வளர்ந்தவன் அவன்.  கலை,  இலக்கியம், ஆயுதம்,  போர்த்திறன்,  தொழிநுட்பம் இவை பற்றிய ஞானத்தோடும்  பயிற்சிகளோடும் படைத்தளபதிக்கென்றே உருவாக்கப்பட்டவன்.  மன்னன் கரிகாலனின் சிறுவயது முதலான நண்பன்.  ஆனால் அந்த நட்பு தனித்திருக்கும் வேளைகளில் மட்டும் தான்.  அரசவையில் மன்னரும் படைத்தளபதியும் தான். 


நீலக்கடலில் நிறைந்து கிடக்கும் அபூர்வமான பதார்த்தங்களைப் போல  பல விதமான எண்ணங்கள் அவனுடைய மனதிலும் நிறைந்திருக்கிறது. 


கடற்கரையோர  வாழ்வியல் மிக இனிமையான ஒன்று.  ஆனால்,  கடல் வாழ்வின் இன்பங்களை அனுபவிப்பதற்காகவோ மங்கையரோடு மகிழ்ந்திருக்கவோ அவன் இங்கே வரவில்லை.   


அவன் உறுதி பூண்டிருக்கிற பணி மிகப்பெரியது.  கடமைக்கு அப்பால் தான் அவனுக்கு உறவுகள் எல்லாம்.  


மன்னர் கரிகாலன், அவனிடம் ஒப்படைத்திருக்கிற இமாலயப்பணியை முடித்து, அவர்களின் அரச அவையை மீட்கிற வரை உறக்கம் கூட அவனுக்கு எப்போதாவதுதான். 


அந்த கடற்கரையை அண்டிய பெரு நிலப்பரப்பில் தான் சிப்பாய்களின்  பெரிய முகாம் இருக்கிறது.  அங்கிருந்து தான்  நாடு முழுமையும் கண்காணிப்பு செய்யப்படுகிறது. அந்த இடம் தகர்க்கப்பட்டால், எதிரிகளின் படைக் கட்டமைப்பு ஓரளவு ஆட்டம் கண்டு விடும். 


இந்த இரண்டு ஆண்டுகளில்  அவர்கள் சேர்த்த தரவுகளின் படி,  சில இருப்புகளை அழித்து பலவீனத்தை ஏற்படுத்தி விட்டு, பின்னர், அதற்கு அடுத்த நடவடிக்கை பற்றி திட்டமிடலாம் என்று முடிவு செய்திருந்தனர். 


அப்படிச் சொல்லப்பட்டாலும் மன்னர் கரிகாலனோ,  சேனாதிபதி புகழேந்தியோ அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து திட்டமிட்டு முடித்திருப்பார்கள். முதல் கட்டம் தன்னுடைய பணிதான் என்பதால் மிக கவனமாகவும் நுட்பமாகவும் செய்யவேண்டிய பணிக்காக அவன் இந்த கடற்கரைக் கிராமத்திற்கு வந்திருந்தான். 


மிகுந்த நம்பிக்கையோடு பொற்செல்வனைத்  தெரிவு செய்து அனுப்பியிருந்தார் மன்னர் கரிகாலன். 


அந்த கடற்கரை கிராமத்தின் மூத்த குடியான கருணாகர தொண்டைமானின் மகன் வழிப்பேத்திதான் செங்குழலி. 


கடல் சாகசங்கள் அவளுக்கு அத்துப்படி.  பாட்டனாரோடு கடலுக்குச் சென்று, வலை வீசி,   கடலாடி வருபவள், இப்போது சில மாதங்களாகத்தான் கடலுக்கு போகாமல் வீட்டில் இருக்கிறாள். பாட்டனாரருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் அவரைக் கவனித்துக் கொண்டு வீட்டோடு இருப்பவளுக்குள் பொற்செல்வனின் வருகை ஏற்படுத்திய மாற்றங்கள் ஏராளம். 


அவனுடைய பணிக்கு செங்குழலியைப் போல துணிச்சலான ஒரு பெண் தேவைதான்.  ஆனால் இதுவரை அவளிடம் அவன் நின்று பேசியது கூட கிடையாது. 


அவளுடைய கூர்மையான பார்வைக்கு அவனைப் பற்றிய உண்மைகள் தென்படாமல் இருப்பதுதான் அதிசயம்.


வள்ளத்தை இழுத்து ஓரமாக கட்டிவிட்டு,   பொன்னொளி பரப்பிய அந்த மணல் தரையில் கால்கள் புதைய நடந்து சென்று தனது வாடிக்குள் நுழைந்து கொண்டான் பொற்செல்வன். 


வாடியின் கதவு சரிந்திருந்த விதத்திலேயே 'யாரோ வந்து சென்றிருக்கிறார்கள்' என்பது அவனுக்குப் புரிந்தது.  நிதானமாக,  ஒவ்வொரு அடியாக வைத்து உள்ளே சென்றவன், நிமிர்ந்து பனை ஒலையால் வேயப்பட்டிருந்த அந்த குடிசையின் முகட்டைப் பார்த்தான்.  


பச்சை இலையின் சாறு பூசப்பட்ட அந்தக் கடதாசி,  மன்னரிடம் இருந்து தகவல் வந்திருப்பதை உணர்த்த,  கருவாடு வைப்பதற்கு பயன்படும் பெரிய தகர தாங்கியை சற்றே அசைத்துவிட்டு மணலை  அகற்றத் தொடங்கினான். 


தொடரும்... 



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.