கரிகாலர் காவியம் - கோபிகை!! (வரலாற்று நாவல்)

 


டொக்... டொக்... டொக்.. 


குதிரைகளின் குளம்பொலியைத்தவிர வேறு எந்த சத்தமும் இன்றி அமைதியாக இருந்தது அந்தக்காடு. 


அடர்த்தியும் நீண்டதுமான அந்த ஆரணியத்தில் மனித நடமாட்டம் மிகவும் குறைவு. 


அந்தக் காடு,  வனவள துறையினரின் முழுக் கட்டுப்பாட்டில் இருந்தாலும் அதன் எல்லைகளும் அதன் விசாலமும் அவர் ஒருவருக்கு மட்டும் தான் தெரியும். 


பாடித்திரியும் பறவைகள் முதற்கொண்டு பதுக்கி நிற்கும் வேங்கை வரை எங்கே,  எப்படி மறைந்திருக்கும் என்கிற விடயங்கள் அவருக்கு அத்துப்படி. 


சிம்மாசனம் துரோகிகளால் சூறையாடப்பட்டடு மக்கள் பணயக் கைதிகளாக்கப்பட்டு செங்கோல் கொண்ட அவருடைய இராச்சியம் எதிரிகளின் வசமாகிய பின்னர், காட்டுக்குள்தான் அவருடைய வாழ்க்கை. 


மன்னன் தப்பிச் சென்று விட்டதாக கதைகள் பல புனையப்பட்டு மக்களை நம்பச்செய்திருந்தனர் எதிரிப்படைகள். 


மறைந்து வாழ்கின்ற இந்த வாழ்க்கை அவருக்கு அவருடைய மனதுக்கு ஏற்புடையதல்ல என்றாலும், சமயோசிதமாகச் செயற்படவேண்டிய கட்டாயத்திலேயே இந்த வனவாச வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறார் கரிகாலச் சக்கரவர்த்தி. 


அதிலும் படைத்தளபதி பொற்செல்வன்,  சேனாதிபதி புகழேந்தி இருவரினதும் அன்புக்கட்டளையை அவரால் மீறமுடியவில்லை. 


அடிமைகளாக அபலைகளாக வாழ்கின்ற மக்களை மீட்கவேண்டும்.  யாழ்ப்பாணம்,  வன்னி ஆகிய இரண்டு இராச்சியங்களையும் இணைத்து,  இரண்டு நகரங்களுக்கும் நடுவே புதிய அரசவையை நிறுவவேண்டும். உயர்ந்து பறக்கிற கொடியோடு அந்த, இராச்சியம் ஒளிவீச வேண்டும் என்பது அவர்கள் மூவரினதும் பேரவா.  அதற்காகத்தான் அவர் இந்த முடிவுக்குச் சம்மதித்திருக்கிறார். 


இதோ... அந்த கடமையின் நிமித்தம் தான் தனியாகப் பயணப்பட்டிருக்கிறார். 


சிந்தனைகளில் ஆட்பட்டிருந்த கரிகாலச் சக்கரவர்த்தி,  ஏதோ ஒரு ஆபத்து அருகில் இருப்பதை உணர்ந்து கொண்டதால்,  புரவியின் வேகத்தைக் குறைத்தார். 


அவரது எண்ணப்போக்கு புரிந்து, தன் காலடிகளின் குளம்பொலியை நிறுத்தி தாமதித்து அந்தப் புரவி. 


அது சாதாரண புரவி அல்ல.  மன்னரின் வளர்ப்பு புரவி.  அவர் சிந்திக்கும் போதே செயலாற்றும் வல்லமை அதற்கு இருந்தது.  


அவரது புரவி நிற்கவும் இரண்டு பேர் பாய்ந்து தாக்குவதற்கு வரவும் சரியாக இருந்தது. 


பாய்ந்த வேகத்திலேயே இடையில் இருந்த உருமியை இழுத்தெடுத்து, அவர்களின் கைகளில் இருந்த வாள்கள் இரண்டையும் கண்ணிமைக்கும் நொடியில் கீழே விழுத்தினார். 


உருமியை அவர் வீசிய இலாவகத்திலேயே மிரண்டு போய் நின்ற இருவரும் அதிசயமாக அவரைப் பார்த்தனர். 


மன்னர் கரிகாலர், படைத்தளபதி பொற்செல்வன் இருவரையும் தவிர இவ்வளவு நேர்த்தியாக உருமி வீசக்கூடியவர்கள் அந்த மண்ணில் வேறு யாரும் இல்லை என்பது அந்த நாட்டு மக்கள் அத்தனை பேருக்கும் தெரியும். 


மாறுவேடத்தில் இருந்த கரிகால மன்னர், அவர்கள் இருவருக்கும் முன்னால் நிமிர்ந்து நின்றார்.  


கால்களை அகட்டி நெஞ்சை நிமிர்த்தி அவர் நின்ற தோரணையில் இருவரும் சடாரென்று மண்டியிட்டு முழங்காலில் இருந்தபடி கரம்கூப்பினர். 


அடர்ந்த மரங்களை ஊடுருவிக்கொண்டு புறப்பட்டு வந்த செம்மஞ்சள் நிற சூரியக் கதிர்கள்,  அவரது முகத்தில் பட்டு, பிரகாசிக்க, புதியதொரு ஒளிவீச்சு அந்த முகத்தில் பிரதிபலித்தது. 


ஆதவன் அள்ளி வீசிய அந்த பொற்கிரணங்கள், வைரம் பாய்ந்த அந்த தேகத்தில் பட்டுத்தெறிக்க செம்மஞ்சள் ஒளி அந்த இடத்தையே நிறைத்தது. சட்டென்று குனிந்து தனது காலணிக்குள் மறைத்து வைத்திருந்த குறுவாளை உருவியவர், உள்ளங்கையில் வைத்து இருபுறமும் தேய்த்தபடி,  


"யார் நீங்கள்?"  என்றார். 


புலியின் உறுமலையும் சிக்கத்தின் கர்ஜனையையும் ஒன்றாக கேட்பது போலிருந்தது அந்த ஒலி. 


"ஐயா... நாங்கள் வழிப்பறி செய்து பிழைப்பு நடத்தி வருகிற ஏழைத்திருடர்கள் " இருவரும் ஒன்றாகவே சொன்னார்கள். 


"அப்படி என்றால்.... சொந்த இனத்திடமே திருடிப் பிழைக்கிற ஈனர்கள். ..." அப்படித்தானே.. .?"  கோபத்தோடு கேட்டார். 


"ஐயா.. .ஒரு காலத்தில் வீரமும் விவேகமும் கொண்ட போர்ச்சேவகர்களாக இருந்தோம்.  எங்கள் நாடு,  எதிரி நாட்டின் வசமாகி, மன்னர் நாட்டைவிட்டு மறைந்து போன பின்பு,  எங்களுக்கு எல்லாமே வெறுமையாகிவிட்டது. அடிமை வாழ்க்கை வாழும் எங்களுக்கு  நியாய அநியாயம் பார்க்க விருப்பமில்லை.  அதனால் தான் இந்த தொழிலைச் செய்கிறோம். ..." என்றனர். 


கரிகாலருக்கு இதயத்தில் கனம் கூடியது. 


"மன்னர் மறைந்து விட்டதாக சொல்வதை நம்புகின்றீர்களா?" என்று கேட்டார். 


அவர்களில் ஒருவன், "எல்லோரும் அப்படித்தான் நம்புகிறார்கள்... நாங்கள் மட்டும் நம்பாமல் இருந்து என்ன பலன்?"என்று கேட்டான் 


மன்னனின் முகத்தில் இளநகை அரும்பியது. 


"ஆனால் இப்போது நாங்கள் கண்ட காட்சி யோசிக்கவைக்கிறது... " என்றான் மற்றவன். 


என்ன யோசிக்கவைக்கிறது? கம்பீரமாக வெளிப்பட்டது மன்னரின் குரல். 


இவ்வளவு இலாவகமாக உருமி சுழற்றக்கூடியலர்கள் மன்னர் கரிகாலர் மற்றும் படைத்தளபதி பொற்செல்வனைத்தவிர வேறு யாரும் இந்த மண்ணில் இல்லை என்றவனிடம் திரும்பி ஒரு சிரிப்பை உதிர்த்துவிட்டு குதிரையின் மீதேறியவரைச் சுமந்து கொண்டு புறப்பட்டது அந்தப் புரவி. தொடரும்..... Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

  

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.