உயிரிழை அமைப்பு நிதி மோசடி முறைகேட்டில் உறுப்பினர்கள் போர்க்கொடி!


முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக திரட்டப்படும் நிதியில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக உயிரிழை அமைப்பின் உறுப்பினர்கள் வெளியேறி குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.


கிளிநொச்சி சோலைவனம் விருந்தினர் மண்டபத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் பின்னர் ஊடகங்களிற்கு இவ்வாறு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.


யுத்த காலத்திலும், அதன் பின்னரான காலத்திசம் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.


இந்த நிலையில், வவுனியா சமூக சேவைகள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள உயிரிழை அமைப்பு, முல்லைத்தீவு மாவட்டத்தில் மாங்குளம் பகுதியை தலைமையாகக் கொண்டு இயங்கி வருகிறது.


குறித்த அமைப்பிற்கு பெரும் தொகை நிதி உதவிகள் கிடைப்பதாகவும், அவை உரிய முறையில் பயனாளிகளுக்கு சென்றடைவதில்லை எனவும் குற்றம் சாட்டப்படுகிறது.


பயனாளிகளுக்கு வழங்கப்படும் நிதியைவிட, ஊழியர்களுக்கு அதிக நிதி செலவாவதாகவும் குற்றம் சாட்டப்படுவதுடன், குறிப்பிட்ட காலத்திற்குள் 4 கோடிக்கு அதிக நிதி முறைகேடாக பயன்படுத்தப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டது.


வருமானம் ஈட்டுவதற்காக மேற்கொள்ளப்பட்ட பண்ணை வளர்ப்பில் ஆடு கொள்வனவு செய்யப்பட்டதிலும் ஊழல் இடம்பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


அத்துடன், குறித்த அமைப்பின் தலைவர் ஒரு தொகை நிதியை தனது தனிப்பட்ட வங்கி கணக்குக்கு வைப்பு செய்துள்ளமை தொடர்பிலும் தகவல் வெளியிடப்பட்டது.


வாகன கொள்வனவு மற்றும் ஒப்பந்த நடவடிக்கைகளிலும் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகவும் இன்றைய ஊடக சந்திப்பில் பாதிக்கப்பட்ட பயனாளிகளால் குற்றம் சுமத்தப்பட்டது.


படுக்கைப்புண், வாழ்வாதாரம் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ள முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்ட 190க்கு மேற்பட்ட பயனாளிகளில், 25க்கு மேற்பட்ட உறுப்பினர்கள் முறைகேட்டுக்கு எதிராக வெளியேறியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்த முறைகேடுகள் தொடர்பில் சமூக சேவைகள் திணைக்களத்துக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ள போதிலும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.


எமது பாதிப்புக்களை மையப்படுத்தி திரட்டப்படும் நிதிகள் முறைகேடாக பயன்படுத்தப்படுவதுடன், மோசடிகளும் இடம்பெறுவதாக இன்றைய ஊடக சந்திப்பில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.