குல்பி ஐஸ் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:
பால் – 1/2 லிட்டர்,
பாதாம் – 15,
முந்திரி – 15,
பிரட் – 4 துண்டு,
சர்க்கரை-1/4 கப்,
ஏலக்காய் பொடி – 1/4 டீஸ்பூன்,
உப்பு – 1 சிட்டிகை.
செய்முறை:
முதலில் 10 பாதாம், 10 முந்திரிகளை தண்ணீரில் ஒரு மணி நேரம் வரை நன்றாக ஊற வைத்துக் கொள்ளுங்கள். முதலில் அடுப்பில் அடி கனமான ஒரு பாத்திரத்தை வைத்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள். இந்த தண்ணீர் நாம் பால் ஊற்றும் போது பால் அடி பிடிக்காமல் இருக்கத் தான். அடுத்து அரை லிட்டர் பாலை ஊற்றி நன்றாக சுண்ட காய்ச்ச வேண்டும். பாலில் ஆடை படியாமல் அடிக்கடி கலந்து விட்டுக் கொண்டே இருங்கள்.
இதற்கிடையில் ஊற வைத்த முந்திரியும் பாதாமையும் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி நல்ல பேஸ்ட் பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அதே போல் நான்கு பிரெட் துண்டுகளை எடுத்து ஓரங்களை நறுக்கி விட்டு அதையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக பவுடர் செய்து கொள்ளுங்கள். இப்போது பால் நன்றாக கொதித்து சுண்டியதும் சர்க்கரையை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து இரண்டு நிமிடம் வரை கொதிக்க விடுங்கள்.
அதன் பிறகு அரைத்து வைத்த பாதாம் பேஸ்ட் கொடுத்து வைத்த பிரட் தூள், ஏலக்காய் தூள் அனைத்தையும் சேர்த்து பிறகு உப்பையும் சேர்த்து நன்றாக சுண்ட விடுங்கள். இந்த நேரத்தில் கை விடாமல் கலந்து கொண்டே இருங்கள் ஆடை படிய விடக் கூடாது அது தான் முக்கியம். பால் நன்றாக சுண்டி வந்தவுடன் அடுப்பை அணைத்து விட்டு பாலை ஆற விடுங்கள். இந்த நேரத்தில் மீதம் இருக்கும் பாதாம் முந்திரி இரண்டையும் பொடித்து பாலில் தூவி விடுங்கள்.
இதை நாம் கரண்டியில் எடுத்து ஊற்றினால் ஊற்றும் பதத்திற்கு இருக்க வேண்டும். பால் நன்றாக ஆறிய பிறகு உங்கள் ஐஸ்கிரீம் மோல்டில் இதை ஊற்றி மேலே பாலீத்தின் கவர் அல்லது அலுமினியம் காயல் சீட் வைத்து நன்றாக இருக்க கட்டி விடுங்கள். இதன் நடுவில் ஒரு துளை போட்டு ஐஸ் கிரீம் குச்சி அதில் சொருகி ஃப்ரீசரில் 8 மணி நேரம் வைத்து விடுங்கள்.
கருத்துகள் இல்லை