கரிகாலர் காவியம் (கோபிகை) -பாகம் 8!!
வாழை இலைக்கீலங்கள் உள்ளங்கையை நிறைத்திருக்க, சாம்பார், தயிர் சேர்த்துக் குழைத்த சோற்றுத் திரணைகளை உருண்டையாக தந்த அன்னையை அன்பு ததும்ப பார்த்தபடி சாப்பிடத் தொடங்கிய கரிகாலன்,
"அன்னையே தங்கள் கையால் உணவு உண்டு எத்தனை நாட்களாயிற்று... " என்றார்.
அவரது வார்த்தைகளை ஆமோதித்த மற்றவர்களும் தலையைஆட்டடி,
வாரத்தில் ஒரு நாளாவது இவ்வாறு உங்கள் கையால் உணவு உண்ணாமல் விட்டதில்லை, இப்போது ஆண்டுக் கணக்கில் ஆகிவிட்டது அன்னையே" என்றனர்.
"காலம் என்பது தன் போக்கில் கட்டளைகளை இட்டுவிட்டு நகர்கிறது. அது விசிறிச் செல்கிற பாதைகளில் நாம் நகர்ந்து சென்று விட வேண்டியது கட்டாயம்... காலத்தை எதிர்த்து நாம் ஒன்றும் செய்ய முடியாது, ஆனால், அந்தக் காலத்தில் வெற்றிக்கான திட்டமிடல்களைச் செய்யமுடியும், ஈழ தேசமும் அதன் நாயகர்களும் கூட அதற்கு விதிவிலக்கல்ல.
நமக்கான நாட்கள் இப்படியே நகர்ந்து விடாது மக்களே, உண்மை என்பதும் நீதி என்பதும் தீயைப்போன்றது. அது, ஒடுக்கப்பட்ட மக்களிடம் பொங்கிப் பிரவாகிக்கிறது.
நியாயத்தை மறந்தவர்களை, சத்திய நெருப்பு பொசுக்காமல் விடாது. வீரம் செறிந்த இந்தப் பயணம் என்பது, சுய விருப்பங்களுக்கு அப்பாற்பட்டது. பொது நலத்தை வேண்டுவது.
அவ்வாறு வாழ்வதென்பது சாதாரண விடயமல்ல, ஆசாபாசங்களைத் துறந்து அன்னை மண்ணை மட்டுமே மனதில் ஏற்று, அதற்காக உழைக்கிற மனிதர்கள் அத்தனை பேரும் புனிதர்களாக போற்றத்தக்கவர்கள்.
நீங்கள் நால்வருமே, எங்கள் மண் நன்றியோடு நினைவு கொள்ளத்தக்க மகத்துவமானவர்கள்.... அத்தகையதொரு வாழ்க்கையில் பிரிவுகளும் துயரங்களும் நிகழத்தான் செய்யும். அந்தப் பிரிவை நினைத்து கலங்காமல், அதையே எமக்குச் சாதகமாக மாற்றிச் செல்வதே புத்திசாலித்தனம்,
என் அன்பிற்குப் பாத்திரமான அருமைப் புத்திரர்களே, நான் மடிந்து போனாலும்.... "
சட்டென்று நான்கு கரங்களும் தன்னை நோக்கி நீண்டதில், இனிப்பான வியப்பிற்கும் மன உவகைக்கும் ஆளான அன்னை கோப்பெருந்தேவி, கண்களில் தழும்பிய கண்ணீரை வெளியே வரவிடாது, கண்களை வெட்டி உள்ளே இழுத்தார்.
"என்ன வார்த்தை சொல்லிவிட்டீர்கள் அன்னையே, எங்கள் மண் மீட்கப்படும் வரை, இந்த தேசம் விடியல் காணும் வரை, எங்களை மட்டுமல்ல, எங்களின் பிள்ளைகளின் பிள்ளைகளை வழிநடத்தவும் தாங்கள் வேண்டும்.... " என்று பதறிப்போய் சொன்ன கரிகாலரை தாய்மை நிறைந்த பாசத்துடன் பார்த்தவர்,
"நெருப்பு என்றால் வாய் வெந்துவிடாது மக்களே, நடந்தவைகளை நினைத்து நீங்கள் ஒருபோதும் துவண்டு விடக்கூடாது... வருகின்ற நாட்களை ஏற்றதாக மாற்றிக் கொண்டு வெற்றிக்காக உழைக்க வேண்டும், இது எங்களுடைய மண், இந்த மண்ணின் வேர்கள் எங்கள் மூதாதையர்களின் வழித்தடத்தில்உருவானது " என்றார்.
"அன்னையாரே.... உங்கள் வாரர்த்தைகளே எங்களை உருவாக்கியது, உங்கள் வாரர்த்தைகளே எங்களைச் செதுக்கியது, நீங்களே எங்கள் தேசத்தின் பெரும் சக்தியாக இருந்திருக்கிறீர்கள்.... இனிமேலும் நீங்கள் தான் எங்களை வழிநடத்த வேண்டும் என்ற புகழேந்தியைப் பார்த்து புன்னகை புரிந்தார் அன்னை கோப்பெருந்தேவி.
"தாயாரே, உலகம் உற்று நோக்கிக் கொண்டிருக்கிற ஒரு தேசம் எங்களுடையது, நீங்கள் சொல்வது போல, நாங்களாக நினைக்காதவரை எங்களுக்கு தோல்வி இல்லை, இது ஒரு கடினகாலம், இந்தக் காலத்தை நாங்கள் கடந்தே ஆகவேண்டும், நீங்கள் கவலைப்படாதீர்கள், சரணடைதல் என்பதும் ஒருவகை உத்திதான்..." என்ற கானக மைந்தனுக்கு தலையை ஆட்டி தன்னுடைய ஆமோதிப்பை தெரிவித்தார்.
அன்னையே... விரைவில் வாள்கள் பேசும கம்பீர ஒலி, உங்கள் செவிகளை நிறைத்தே ஆகும், மன்னர் கரிகாலருக்கு நாங்கள் மூவரும் பக்கபலமாக இருப்போம், ஒரு மகாராணி என்கிற பெருமையையோ டாம்பீகத்தையோ நாங்கள் தங்களிடம் கண்டதில்லை, தாய்மையின் பரிவோடு, ஒரு ஆசானாக எங்களை வழிநடத்திய உங்களுக்கு, உங்களின் கரங்களுக்கு, வெற்றியைச் சமர்ப்பிக்கிறவரை நாங்கள் ஓயமாட்டோம்.... என்றான் பொற்செல்வன்.
எனக்குத் தெரியும், உங்கள் நால்வரினதும் வீரம் ஒருபோதும் குன்றிப் போகாது, அறவழி நின்று, அன்னை மண்ணை மீட்பதில் உங்கள் உறுதி நான் அறியாததல்ல, வடக்கு கிழக்கு இணைந்த பெரும் இராச்சியம் தமிழருக்கே உரியது. எங்கள் பூர்வீகமும் பண்பாட்டு விழுமியங்களும் சிதைக்கப்படாமல் வருகிற தலைமுறைகளிடம் கையளிக்கப்படவேண்டும். நீண்ட பாரம்பரரியத்தை கொண்ட இனத்தின் எழுச்சி, அவனியை அச்சப்பட வைத்திருக்கவேண்டும், உங்கள் வீரத்தைக் கண்டு பயந்து தான், கூட்டுச் சதியால் நம்மை வீழ்த்த நினைத்தார்கள்... விழாமலே இருப்பது பெருமையல்ல, விழுந்தும் எழுந்தோம் என்பது தான் பெருமை, வெற்றி எம் கரம் கிட்டும், காலம் நாளை நம்மைப்பற்றி பேசும்.... ஈழதேசத்தின் வீரக்கொடி உயர்ந்து பறக்கும், அது வெற்றிக்கான பாடலையும் முழக்கத்தையும் ஓங்கி ஒலிக்கும்... கவலைப்படாதீர்கள் புத்திரர்களே... என்ற மாதா கோப்பெருந்தேவியின உறுதி நிரம்பிய விழிகளால் பார்த்தனர் நால்வரும்.
பித்தளைக்கிண்ணத்தில் அவர் குழைத்த சோற்று உருண்டைகள் முடிந்து போயிருக்க, மற்றொரு கிண்ணத்தில் உணவை ஏந்தியபடி வந்தது...... அந்த அரசாங்க காவலாளி வேடமிட்டவனேதான்.
ஆராய்ச்சிப்பார்வையோடு நோக்கிய புகழேந்தியின் விழிகளுககு பதில் கிட்டிவிட்டது, தன்னை அழைக்க வந்தது....
அவன் அல்ல..... அவள்...
உரம் வாய்ந்த ஆணாக தன்னை உருமாற்றிக்கொண்ட அந்த உருவத்தில், எங்கோ வெளிப்பட்ட அவளுடைய பெண்மையின் நளினங்களை அவன் உணர்ந்துகொண்டதன் வெளிப்பாடு தானே அந்த ஆராய்ச்சி நிறைந்த பார்வை....
ஒரு மின்னல் போல, வந்து சென்ற அவளை கண்டும், காணாதது போல இருந்த புகழேந்தியை கவனிக்கத் தவறவில்லை கோப்பெருந்தேவியார்.
இன்று மட்டுமல்ல... அரியணையில் சேனாதிபதியாக அழகுற கம்பீரமாக அமர்ந்திருந்த காலத்தில் இருந்தே அவள் மீதான புகழேந்தியின் ஆராய்ச்சி பார்வையை அவர் அறிந்திருக்கிறார்.
சில விடயங்களை அவர் திட்டமிட்டு இருக்கும் போது தான் இப்படி ஒரு தலைகீழான நிலைமை அன்னை மண்ணுக்கு ஏற்பட்டுவிட்டது.
பெருமுச்சுடன் தன்னை ஆசுவாசப்படுத்தினார்.
தொடரும்....
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

.jpeg
)





கருத்துகள் இல்லை